போஸ்ட்மென் இன் த மவுன்டெயின்: கடவுளின் தூதுவர்கள்

By பால்நிலவன்

தன் மகனை தபால்சேவையில் ஈடுபட வைக்க நினைக்கும் ஒரு தபால்காரரின் ஒருநாள் பயணத்தை மிகவும் அழகாக எடுத்துக்காட்டுகிறது 'Postmen in the mountains' எனும் சீனத் திரைப்படம்.

ஹூனன் மலைப்பகுதி கிராமங்களின் வயதான தபால்காரருக்கு கால்வலி ஏற்படுகிறது. இதனால் இனி இந்த வேலையைத் தான் பார்க்கமுடியாது என உணர்கிறார். இப்பணியில் இனி தன் மகனையே ஈடுபடுத்த நினைக்கிறார்.

அன்றுகாலை மலைப்பகுதி கிராமங்களுக்குச் புறப்படும்போது தன் இளம் மகனையும் உடன் அழைத்துச் செல்கிறார். எப்போதும் போல் துறுதுறுப்பும் அறிவும் மிக்க அவரது நாய் ஒன்றும் அவர்களுடன் செல்கிறது.

''இன்றுமுதல் அவன்தான் தபால் தருவான்'' என கிராம மக்கள் எல்லோரிடமும் அறிமுகப்படுத்துகிறார்.'' மலையின் கரடுமுரடான பாதைகளில் தன் தந்தையோடு சென்று பயணம் செய்து மலைக்கிராம வீடுகள், மலைச்சரிவுகளில் தனித்தனியே விவசாயம் செய்து அங்கேயே வீடுகட்டி வாழ்ந்துவரும் மனிதர்கள் என்று தேடித்தேடிச் சென்று தபால்களை வழங்குகிறான் மகன்.

மலையின் பல்வேறுப் பகுதிகளின் மக்களும் அவனை அன்புடன் வரவேற்கிறார்கள். சில இடங்களில் அகன்ற நீரோடைகள் குறுக்கிடுகிறது. அப்போது தன் தந்தையை தூக்கிச் சென்று கரையைக் கடக்கிறான். அவருக்கு அவனை பால்யத்தில் திருவிழாவில் தோளில் அமரவைத்து சென்றது எல்லாம் நினைவுக்கு வருகிறது. இந்த மாதிரி நிறைய நினைவுகள் படம் முழுக்க தபால்காரருக்கு வருகின்றன.

இந்த மாதிரி ஒரு சிரமம் மிக்க வேலையையா அப்பா ஆண்டுக்கணக்கில் செய்துவந்தார். அவனைப் பொறுத்தவரை இன்னும் முடிவெடுக்கவில்லை. மலைப்பகுதிகளில் கடிதங்களைக் கொண்டுபோய் சேர்க்கும் பணியில் தான் ஈடுபடத்தான் வேண்டுமா என்று தயங்குகிறான்.

மலைப் பாதை பயணத்தின்போது சில இடங்களில் ஓய்வெடுத்துக்கொள்கிறார்கள். அந்த மாதிரி ஒரு இடத்தில் அமரும்போது அப்போது தபால்காரரின் மகன் வெள்ளைக் காகிதத்தில் ஓர் ஏரோப்ளான் செய்கிறான். அதை விளையாட்டுத்தனமாகப் பறக்கவிடுகிறான். அது மலைகளுக்கு இடையேயான அந்தரவெளியில் நீண்டதூரம் தவழ்ந்துசெல்வதை குழந்தைகள் போல் ஆர்வமாய் ரசிக்கிறான். ஆனால் இதைப் பார்த்த தபால்கார அப்பா கவலைப்படுகிறார். இவனுக்கு ''தபால்களின் முக்கியத்துவம் தெரிகிறதா?'' என அவர் ஏங்குவது அவர் கண்களில் தெரிகிறது.

அன்று இரவு மலைவாசிகள் நடத்தும் திருவிழாவிலும் கலந்துகொள்கிறார்கள். திருவிழாவில் நடக்கும் நடனநிகழ்வுகளில் அவரது மகனும் அங்குள்ள பெண்களோடு ஆடுகிறான். அந்த நேரங்களில் அந்த வயதான தபால்காரர் தன் மனைவியை திருமணமாவதற்கு முன் முதன்முதலாக சந்தித்துப் பழகிய நினைவுகள் வளையமிடுகின்றன... அன்றிரவு அவர்களுடன் சாப்பிட்டு அங்கேயே உறங்குகிறார்கள்.

மறுநாள் மீண்டும் தபால் விநியோகப் பயணம். மரப் பலகைகளால் நீண்டதூரம் கூரையமைக்கப்பட்ட பாதையில் செல்லும் இடத்தில் எப்படியோ கைதவறி தபால்கள் காற்றில் பறந்துசெல்கின்றன. இதுவரை நடக்கவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த தபால்கார பெரியவர் கடுமையாக பாய்ந்து ஓடுகிறார். மலைமுகடுகளில் வீசும் ராட்சதக் காற்றின் வேகத்தை ஈடுகொடுத்து ஓடிச் சென்று அடித்துச் செல்லப்பட்ட அக்கடிதங்களை எடுத்துவருகிறார்.

அவரது நாயும் அவரைவிட வெகுவேகமாக பாய்ந்துசெல்கிறது. தூரத்தில் பறந்துசென்ற ஒரு கடிதத்தை எடுத்துவருகிறது. தன் உயிரைவிட கடிதங்களை மேலாக நினைக்கும் தந்தையை பெருமையோடு மகன் பார்க்கிறான்... இந்த வேலையின் சிரமங்களைக் கருதி இந்த வேலையில் சேர தயங்கிய மகன் மறுநாள் காலையில் தனியாகவே புறப்படுகிறான்.

அவனுடன் செல்லத் தயங்கிய நாயை அப்பா அவனுடன் செல்லுமாறு பணிக்கிறார். இப்போது அந்த நாயும் அவனுடன் மலைப்பாதைப் பயணத்தில்... மலையின் அத்தனை அழகுகளையும் சொக்கவைக்கும்படி காட்டும் இயக்குநர் Huo Jianqi மனித மாண்புகளையும் காட்டிநின்றதில் இப்படம் உலகத் திரைப்பட வரலாற்றில் தனி இடம்பிடிக்க வைத்தது.

கிராமத்தில் மட்டுமல்ல, நகரங்களில் கூட தபால்களை, மணியார்டர்களைக் கொண்டுவந்து சேர்த்தவர்களை கடவுளின் தூதுவர்கள் என்றே நினைக்கத் தோன்றியது உண்டு ஒரு காலத்தில். இப்பொழுதும் தபால்துறை மூலம் மட்டுமல்ல கூரியர் நிறுவனங்கள் மூலமாகவும் கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன. செல்போன் உள்ளிட்ட நவீன தகவல் பரிமாற்றங்களும் வந்துவிட்டன.

ஆனால் இவையெல்லாம் அர்ப்பணிப்பும் சேவையுள்ளமும் மிக்க அக்கால தபால்காரர்களுக்கு துளியும் இணையில்லை என்பதை சுத்தமாக மறந்துபோனோம்.

காலத்தின் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும் 'Postmen in the mountains' திரைப்படம் நமது போஸ்ட்மேன்களுக்கு ஒரு அரிய சமர்ப்பணமாகவே திகழ்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

மேலும்