சென்னை சர்வதேச திரைப்படவிழா: 57 நாடுகளிலிருந்து 184 திரைப்படங்கள் பங்கேற்பு

By ஆர்.சி.ஜெயந்தன்

ஆண்டுதோறும் களைகட்டும் சென்னை சர்வதேசப் படவிழா வரும் ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 13-ம் தேதிவரை 8 நாட்கள் நடக்கிறது. உலகின் 57 நாடுகளிலிருந்து 184 படங்கள் இதில் திரையிடப்படுகின்றன. உலக சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கான் சர்வதேசப் படவிழாவில் பங்கேற்று கவுரவம் பெற்ற படங்களும், வெளிநாட்டு மொழிப்பிரிவின் கீழ் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வான பல்வேறு நாடுகளின் படங்களும் இந்தப் படவிழாவில் குவிகின்றன.

13-வது திரைப்பட விழா

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ‘இண்டோ – சினி அப்ரிசியேசன் பவுண்டேஷன்’(ICAF -Indo Cine Appreciation Foundation) திரைப்படச் சங்கம், கடந்த 2003-ல் தொடங்கி சென்னை சர்வதேசப் படவிழாவை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்த விழாவை மேலும் சிறப்பாக நடத்தும் வண்ணம் கடந்த 2008 முதல் மாநில அரசு நிதியுதவி அளித்து வருகிறது. ஆண்டுதோறும் வளர்ந்துவரும் இந்தப் பட விழாவில் கடந்த ஆண்டை விட இம்முறை அதிக எண்ணிக்கையில் உலகத் திரைப்படங்கள் கலந்து கொள்கின்றன.

6 திரையரங்குகள் 8 திரைகள்

சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே அமைந்திருக்கும் ‘வுட்லேண்ட்ஸ்’, ஒயிட்ஸ் சாலையில் அமைந்திருக்கும் சத்யம், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிட்டி செண்டர் வணிக வளாகத்தில் அமைந்திருக்கும் ஐநாக்ஸ், அண்ணா சாலையில் உள்ள கேசினோ, கதீட்ரல் சாலையின் முடிவில் அமைந்திருக்கும் ரஷ்ய கலாச்சார மையம், வடபழனி பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள ஆர்.கே.வி் ஸ்டூடியோஸ் திரைப்படப் பள்ளி ஆகிய இடங்களில் அமைந்துள்ள 6 திரையரங்குகளில் உள்ள 8 திரைகளில் இந்தப் படங்கள் தினசரி ஐந்து காட்சிகள் திரையிடப்படவுள்ளன.

கலைஞர்களுக்குக் கவுரவம்

மவுனப்பட யுகத்தில் ஹாலிவுட்டுக்கு பெருமை சேர்த்த மூத்த நடிகர், இயக்குநர், திரைக்கதாசிரியர் பஸ்டர் கீட்டனின் 120-வது பிறந்த நாளை கவுரவிக்கும் விதமாக, அவர் இயக்கி நடித்த 6 படங்கள் திரையிடப்படுன்றன. அதேபோல் மறைந்த கலைஞர்கள் ‘இயக்குநர் சிகரம்’ கே. பாலசந்தர், ‘ஆச்சி’ மனோரமா ஆகியோரை நினைவு கூர்ந்து கவுரவிக்கும் வகையில் 7 படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. இவை தவிர இந்தியன் பனோரமா பிரிவில் 11 இந்திய மொழிப் படங்களும், தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில் 12 தமிழ்ப் படங்களும் கலந்துகொள்கின்றன. இவற்றோடு தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இயக்கிய குறும்படங்களும் திரையிடப்படவுள்ளன.

பரிசுகளை வென்ற படங்கள்

திரைப்படவிழாவில் கலந்துகொள்ளும் சர்வதேசப் படங்களைப் பற்றி இண்டோ – சினி அப்ரிசியேசன் பவுண்டேஷன்’ திரைப்படச் சங்கத்தின் பொதுச் செயலாளர் இ. தங்கராஜ் நம்மிடம் கூறும்போது “ உலகப்படங்களைப் பொருத்தவரை சீனா, வெனிசூலா, ஜெர்மனி, டென்மார்க் அமெரிக்கா, கனடா, ரஷ்யா, அல்பேனியா, ஆஸ்ட்ரியா, பங்களாதேஷ், பெல்ஜியம், பிரான்ஸ், நியூசிலாந்து, பின்லாந்து, ஐஸ்லாந்து, ஜப்பான், கிரீஸ், போலந்து, குரோசியா, ஹங்கேரி. இத்தாலி, இரான் உட்பட 57 உலகநாடுகளிருந்து 124 படங்கள் திரையிடத் தேர்வாகியிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான படங்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்கும் சமகால உலக சினிமா இயக்குநர்களின் படைப்புகள்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது “ கான் உள்ளிட்ட புகழ்பெற்ற சர்வதேசப் பட விழாக்களில் கடந்த ஆண்டு பங்குகொண்டு விருதுகளையும் பரிசுகளை வென்ற படங்களை எங்கள் தேர்வுக்குழு கவனமாகத் தேர்வு செய்துள்ளது” என்றவர், “வெளிநாட்டு மொழிப்படப் பிரிவின் கீழ் ஆஸ்கருக்கு பல்வேறு 17 நாடுகளிலிருந்து தேர்வான 20 படங்கள்” இந்தத் தேர்வின் கீழ் அடக்கம்” என்று சுட்டிக்காட்டினார். இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு அனுப்பட்ட மராத்திப் படமாக ‘கோர்ட்’ இதில் அடக்கம் என்பது குறிப்பிடத் தக்கது.

தொடக்கத் திரைப்படங்கள்

ஜனவரி 6-ம் மாலை உட்லேண்ட்ஸ் திரையங்கில் நடைபெறும் தொடக்க விழாவின் முடிவில் முதல் திரைப்படமாக மாலை 7:30 மணிக்கு ‘விக்டோரியா’ என்ற ஜெர்மன் மொழித் திரைப்படம் திரையிடப்படுகிறது. பெர்லின் திரைப்படவிழாவில் விருது வென்ற இந்தப் படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது.

அதேபோல் இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்கத் திரைப்படமாக ‘ப்ரியமானசம்’ என்ற சமஸ்கிரத மொழித் திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்திய சினிமா வரலாற்றில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சமஸ்கிரத மொழியில் எடுக்கப்பட்டிருக்கும் மூன்றாவது திரைப்படம் இது. இதுவும் கான் திரைப்படவிழாவில் பாராட்டு பெற்று திரும்பியிருக்கிறது. தமிழ்ப் படங்களுக்கான போட்டிப்பிரிவில் பங்கேற்கும் படங்களில் ஒன்றான ‘ரேடியோ பெட்டி’ சர்வதேச பூஷன் படவிழாவில் பார்வையாளர் விருதை வென்ற திரைப்படமாகும்.

கடந்த ஆண்டைப்போலவே தி இந்து நாளிதழ் 13-வது சர்வதேச சென்னை சர்வதேச திரைப்படவிழாவின் மீடியா பார்ட்னராக பங்காற்றுகிறது. பட விழாவின் அன்றாட நிகழ்வுகள், திரையிடல்கள், தவறவிடக்கூடாத படங்கள், பங்குபெறும் படங்களின் கதைச் சுருக்கம், விமர்சனம் ஆகியவற்றை உடனுக்குடன் அறிந்துகொள்ள தி இந்து தமிழ் >www.tamil.thehindu.com இணையதளத்தைப் பாருங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்