தி கிட்: கண்ணீருக்குள் சாப்ளின் கலந்த நகைச்சுவை

By பால்நிலவன்

உலகின் தலைசிறந்த நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின் நடித்த படம் 'The Kid'. சாலையில் கண்டெடுக்கும் ஒரு குழந்தையை அவர் எடுத்து வளர்க்கும் திரைக்கதையைக்கொண்டது. இப்படம் முழுவதும் நகைச்சுவை நிரம்பி வழிகிறது.

அக்குழந்தையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் சாப்ளின் தடுமாறுவது, பின்னர் தாலாட்டி பாராட்டி. சீராட்டி. நெக்குருக நேசிப்பது, குழந்தை தனது நகைச்சுவையான உடல்மொழியோடும் மிகவும் ரசிக்கத் தக்க செயல்களோடு வளர்வது பின் பாதிக்கதைக்கு அடிக்கட்டுமானமாய் அமைக்கின்றன.

சாளரங்களின் கண்ணாடிகளை சரிபடுத்தும் தொழிலைச் செய்கிறார் சாப்ளின். அதுவும் எப்படி? தெருத்தெருவாகச் செல்லும் சிறுவன், அங்கு சாரளக் கண்ணாடிகள்மீது கற்களை விட்டெறிந்து சாளரங்களை உடைக்கிறான்.

வீட்டுக்காரர்கள் வந்து பார்க்கும் இவன் ஓடிவிடுவான். பின்னர் அவர்கள் எப்படி இதை சரிசெய்வது என்று பார்க்கும்போது, சாப்ளின் தனது புதிய கண்ணாடிகளோடும் சில கருவிகளோடும் அப்போதுதான் மெதுவாக அவ்வழியே வருவார், ஏதோ உண்மையிலேயே இந்த சம்பவம் பற்றி ஒன்றும் தெரியாத உண்மையான தொழில்காரரைப் போல.

ஒருமுறை போலீஸ்காரர்களிடம் இவர்கள் மாட்டிக்கொள்ளவும் நேரிடுகிறது. ஆனால் போலீஸ்காரருக்கு இவர்கள் இருவரும் டேக்கா கொடுத்துவிட்டு தப்பித்துச் சென்றுவிடுவார்கள்.

படத்தில் சாப்ளின் தோன்றும் முதல் காட்சியே நம்மை நகைச்சுவையில் ஆழ்த்துகிறது. தெருவொன்றின் வழியே அவர் வந்துகொண்டிருக்கிறார். அப்போது ஓர் இடத்தில் மாடியிலிருந்து குப்பையை தரையில் யாரோ கொட்ட இவர் அருகே கொஞ்சமாக விழும்.

பின்னர் இவர் சற்று ஒதுங்க மேலேயிருந்து கொட்டப்படும் கூடையின் ஒட்டுமொத்த குப்பையும் இவர்மீது விழாமல் சற்று தள்ளி விழ, இன்னொரு இடத்தில் இவர்மீதே மொத்த குப்பையும் விழ, அந்த இடத்தில் சாப்ளின் தன்னையே கோணங்கியாக்கிக்கொண்டு செய்யும் நகைச்சுவைகள் உன்னதம்.

அப்போது மேலே மாடி ஜன்னலையும் கீழே குப்பைத்தொட்டியும் மாறிமாறிப் பார்ப்பார். இதுமாதிரி இடங்களில் இவரது உடல்மொழி ரியாக்ஷன் அருமை. அருகில் உள்ள தரையில் திடுமென குழந்தையைக் கண்டவர் சட்டென மாடியைப் பார்க்கிறார். அக் காட்சியில் குழந்தையை யாரோ மாடியிலிருந்து போட்டுவிட்டதுபோல மாடியைப் பார்க்கும் அவரது நடிப்பு பிரதிபலிக்கும்.

இவரிடம் கிடைத்த குழந்தை சின்னஞ்சிறுவனாக வளர்கிறான்.

ஒருநாள் தெருபடிக்கட்டில் உட்கார்ந்திருக்கிறான். அப்போது இவனுடைய உண்மையான தாய் வருகிறாள். உண்மையில் இருவருக்கும் தாய்மகன் என்ற உறவுகள் தெரியாது. இவனுடைய தாய் தன் குழந்தையின் ஏக்கத்தில் பொம்மைகளை வாங்கி சாலையில் காணும் குழந்தைகளுக்கெல்லாம் தருவாள்.

அந்த வகையில்தான் இவனுக்கும் ஒரு பொம்மையைப் பரிசளித்துவிட்டுச் செல்கிறாள். அந்த பொம்மையை ஒரு வளர்ந்த போக்கிரி ஒருவன் பறித்துக்கொண்டு ஓட அவனைத் துரத்திச் சென்று சண்டையிட்டு அவனை வீழ்த்துவான்.

சின்னஞ்சிறு உருவம்கொண்ட சிறுவன் இளவயது போக்கிரியை அடித்து துவம்சம் செய்வதும் இந்தப் போக்கிரி சிறுவனைவிட மிகப்பெரிய உடல்வாகு கொண்ட அவனுடைய அண்ணனை நோஞ்சான் போன்ற சாப்ளின் தந்திரமாக வீழ்த்துவதும் கொப்பளிக்கும் நகைச்சுவை சிதறல்கள்.

போலீஸ்காரர் வந்து குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொண்டுசெல்ல முற்படுவார். குழந்தையைக் கொடுக்க விருப்பமில்லாதிருக்கிறார் சாப்ளின். அதனால் போலீஸோடும் அதிகாரிகளோடும் சண்டையிட்டு ஓட்டுவீடுகள் மீது துரத்தி வந்த போலீஸ்காரரிடமிருந்து தப்பிக்கிறார். இக்காட்சிகள் அனைத்தும் நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டுதான் ரசிக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிரிந்துசென்றுவிட தான் தங்கியிருக்கும் அறைப் படிக்கட்டின் கீழே தெருவாசல்படியில் அமர்ந்து கனவுகாணும் காட்சிகள் மிகமிக அருமை. இப்படத்தில் இடம்பெறும் அத்தனை பாத்திரங்களும் சாப்ளின் கனவுகாணும் இக்காட்சியில் சிறகுகளோடு வருவார்கள். ஆனால் சாப்ளின் மட்டுமே வானில் பறந்துசெல்ல போலீஸ்காரர் சாப்ளினை சுட்டுவீழ்த்திவிடுகிறார். தொப்பென்று கீழேவிழுந்துவிட போலீஸ்காரர் வந்து சாப்ளினை உலுக்குவார்.

போலீஸ்காரர் வந்து உலுக்குவது கனவில் அல்ல என்பதும் உண்மைதான் என்பதை உணரும் சாப்ளின் மட்டுமல்ல நாமும் விழிபிதுங்குகிறோம்.

படம் முழுவதும் நகைச்சுவைக் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை.. படத்தின் ஆரம்பத்தில் ஒரு கார்டு ''ஒரு திரைப்படம் சிரிப்போடு, கொஞ்சம் கண்ணீரோடும்'' என்று வருகிறது. சிரித்துசிரித்து கண்ணீர் வரும், இச்சிரிப்புக்குப் பின்னால் உள்ள சோகங்களை சிந்தித்தால் கண்ணீர்வரும் என்றுகூட இதை எடுத்துக்கொள்ளலாம்.

படத்தின் துவக்கத்திலேயே ஒரு சாரிட்டி மருத்துவமனை காட்டப்படும். ஓர் இளம்தாய் குழந்தையோடு வெளியே வர காத்திருக்கிறாள். அவளுக்காக கிராதிகேட் திறந்துவிடப்படுகிறது. அவள் வெளியேறிய பிறகு மறுபடியும் கேட் மூடப்படுகிறது.

''பாவத்தில் பிறந்த குழந்தை'' என்ற பொருளில் மருத்துவமனையின் வாயில்காக்கும் பெண் உடன் பணியாற்றும் ஒருவரிடம் கூறி சற்றே நக்கலாக சிரித்தபடியே கேட்டுக்கு பூட்டுபோடுவாள். அதிலிருந்தே அக்குழந்தை நம் இதயத்தில் பச்சக் என்று உட்கார்ந்துகொள்கிறது.

சாரிட்டி மருத்துவமனையிலிருந்த வெளியே வரும் தாய் குழந்தையை முதலில் ஒரு காரின் பின்இருக்கையில் வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறாள். அச்சமயம் திருடர்கள் வந்து காரை திருடி எடுத்துச் சென்றுவிடுவர்.

பின்னர் அந்த இளம்தாய் ஒரு பூங்காவில் அமர்ந்து மனம் திருந்தி குழந்தையை மீண்டும் காரிலிருந்து எடுத்துக்கொள்ள ஓடிவருகிறாள். ஆனால், அங்கு குழந்தையையும் காரையும் காணமுடியவில்லை. அவள் தவிக்கிறாள்.

அதேநேரத்தில் அந்தப் பெண், குழந்தை பெற காரணமான ஓவியன் தன் வீட்டில் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறான். அவள் நினைவாக அவளுடைய புகைப்படத்தை எடுத்துப் பார்க்க முயல அப்புகைப்படம் கனப்படுப்பில் விழுந்து தீயில் கருகும் இடங்களும் நம் இதயத்தை அசைத்துப் பார்க்கின்றன.

ஆரம்பத்தில் இவர்களைத் துரத்தும் போலீஸ்தான் பிற்காலத்தில் சாப்ளினை அக்குழந்தையிடம் அழைத்துச் செல்லக்கூடியவராகவும் வருவது பார்வையாளனை சற்றே நெகிழச் செய்கிறது.

சாப்ளினிடம் இதுநாள் வரை வளர்ந்த குழந்தை ஒரு நாய்வண்டி போன்ற ஒன்றில் போட்டு இழுத்துச் செல்லப்படுவான். இக்காட்சியில் அச்சிறுவன் சாப்ளினைப் பார்த்துக் கதறுவான். மேலும் நீதிமன்றத்தில் குழந்தையைத் தேடிவரும் தாயை வினோதமாக சிறுவன் பார்க்கையில் தாயின் கண்கள் அன்பில் விரிகிறபோது நம் கண்களையும் அவை ஈரப்படுத்திவிடுகின்றன.

இப்படத்தில் ஆதரவற்ற குழந்தையாக நம்மை வாட்டியெடுக்கும் சிறுவனாக நடித்த ஜாக்கி கூகனும் கைவிடப்பட்ட அபலைப் பெண்ணாக வரும் எட்னா பர்வியான்ஸும் பார்வையாளர்களின் இதயத்திலிருந்து அவ்வளவு சீக்கிரம் அகலமாட்டார்கள்.

தனது அற்புத நடிப்பாற்றலால் மட்டுமல்ல எழுதி, இயக்கி, இசையமைத்து, தயாரித்து மௌனப்படத்தை இன்றுவரையிலும் பேசவைத்திருப்பவர் சார்லி சாப்ளின்தான். 1921ல் அவர் இயக்கிய முதல் படமும் இதுவே. 1921-ல் வந்திருந்த தி ஃபோர் ஹார்ஸ்மேன் ஆஃப் தி அப்போகாலிப்ஸ்' திரைப்படத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது இப்படம்.

மேலும் கலாச்சார, வரலாற்றிய, அழகியல்மிக்க நினைவுச்சின்னம் இது என அமெரிக்க காங்கிரஸ் கூறியதோடு இத்திரைப்படத்தின் படச்சுருள்களை அமெரிக்க அரசாங்கம் நிர்வகித்துவரும் தேசிய திரைப்பட பதிவுக்கழக லைப்ரரியிலும் பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை என்பது யாரையும் புண்படுத்தாமல் ஒரு படி மேலே போய் சமூகம், வாழ்க்கை போன்ற பெரிய விஷயங்களுக்கு எளிய அர்த்தங்களைத் தர வேண்டும். அத்தகைய ஒரு சிறந்த திரைக்கதையின் வகைமாதிரி உதாரணமாய் 'தி கிட்' திகழ்ந்துகொண்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்