கலிபோர்னியாவின் பொடேகே வளைகுடா பகுதிக்கு புதிதாக வந்திருக்கும் மிட்ச் பெரென்னரின் குடும்பத்தினரை மட்டும் குறிவைத்து மர்மமானதொரு காரணத்தால் பறவைகள் தாக்குவதை 'த பேர்ட்ஸ்' (The Birds) திரைப்படம் பதைபதைக்க காட்டுகிறது.
மெலானி என்ற இளம்பெண் தன் தங்கையின் 11வது பிறந்த நாளுக்கு லவ்பேர்ட்ஸ் தேடி சான்பிரான்சிஸ்கோ நகரெங்கும் அலைகிறாள். நகரத்தில் பெட் ஷாப்புகளில் லவ் பேர்ட்ஸ் கிடைக்கவில்லை. அந்தக் கடை ஒன்றுக்கு வேறு ஏதோ வேலையாக வந்த மிர்ச்சியிடம் அவளுக்கு பரிச்சயம் உண்டாகிறது. அங்கு வந்த மிர்ச்சி அவளுக்கு லவ்பேர்ட்ஸ் ஒரு ஜோடியைத் தருவதாகவும் கூறுகிறான்.
மிர்ச்சி, தான் தங்கியிருக்கும் பொடேகா வளைகுடா பகுதிக்கு அவளை வரச் சொல்கிறான். அவன் சொன்ன நேரத்துக்கு அவனைத் தேடி அவள் படகில் வருகிறாள். அவன் அவளை வரவேற்கிறான். அவள் கரையை நெருங்கி படகுத் துறைக்கு வரும் இடத்தில் கடற்பறவை ஒன்று வேகமாகப் பறந்துவந்து அவளைத் தாக்குகிறது. தலையிலிருந்து ரத்தம் வர வலியோடு தடவுகிறாள். மிர்ச்சி அவளைக் கைத்தாங்கலாக வீட்டுக்குச் செல்கிறான்.
மிர்ச்சி அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். அவளிடம் லவ்பேர்ட்ஸை தருகிறான். அவளும் நன்றியோடு அதைப் பெற்றுக்கொள்கிறாள். மெலானிக்கு அவன் தனது தாய், தங்கையை அறிமுகம் செய்கிறான்.
அவள் தனது ஆசிரியையை சந்திக்க வேண்டியுள்ளதால் பிறகு எடுத்துச் செல்லலாம் என மிர்ச்சியின் வீட்டில் அதை ஒரு இடத்தில் சிறு குறிப்பை அதனுடன் எழுதி லவ் பேர்ட்ஸை மறைத்து வைக்கிறாள். தனது வகுப்பு ஆசிரியை அன்னி மேடத்தைச் சந்திக்க அவள் வீட்டுக்குச் செல்கிறாள்.
அன்னியின் வீட்டிலேயே இரவு தங்கிவிடுகிறாள் மெலானி. அவள் தங்கியிருக்கும் அன்று இரவு வெளியே பறவைகளின் இரைச்சல் கேட்கிறது. ஒரு கடற்பறவை அந்த வீட்டின் வேகமாக உள்ளேவர முயன்று முன்கதவில் தன் இறகுகளால் மோதிக்கொண்டு இறந்துவிடுகிறது.
மறுநாள் தங்கை கேத்தியின் பிறந்தநாள் விழாவில் குழந்தைகள் எல்லாம் பசுமையான தோட்டமெங்கும் ஓடிப்பிடித்து கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி மகிழும்போது கடற்பறவைகள் வட்டமிடுகின்றன. கண்ணைக் கட்டிக்கொண்டு அனைவரையும் ஓடிப் பிடிக்க முயலும் கேத்தியைத்தான் முதலில் தாக்குகிறது. பின்னர் நிறைய பறவைகள் கீழிறங்கி வருகின்றன. குழந்தைகளை மட்டுமல்ல அங்குவரும் பெற்றோர்களையும் தாக்குகின்றன.
அனைவரும் ஓடிச்சென்று மரவீட்டின் உள்ளே போய் கதவை மூடிக்கொண்டு பதுங்கிக்கொள்கின்றனர். கண்ணாடி சாளரத்தின்வழியே வெளியே பார்க்கின்றனர். மறுநாளும் வீட்டில் காலை உணவு உண்டு முடித்தபின் கனப்படுப்பின் புகைப்போக்கியின் வழியே ஏராளமான பறவைகள் பறந்துவந்து அவர்களைத் தாக்குகின்றன.
வீட்டுக்குள் எங்கும் புழங்கி அனைவரையும் வளைத்து வளைத்து தாக்குகின்றன. அனைவரும் அங்கும் இங்கும் ஓடி பறவைகளிடமிருந்து தப்பிக்க முடியாமல் திரும்பத் திரும்ப அவற்றிடமே காயப்படுகின்றனர். அங்கு வந்துள்ள பறவைகள் ஏராளமானவை என்றால் ஏதோ நூறு இருநூறு பறவைகள் அல்ல... ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள்...
இன்னொரு நாள் மெலானியின் தாய் கடைக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்புகிறாள். அந்த விசாலமான பல்வேறு அறைப் பகுதிகள் கொண்ட மரவீடு திறந்து கிடக்க வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என மெலானியின் தாய் உள்ளே கண்களைத் துழாவ விட்டபடியே பார்த்துவருகிறாள்.
டைனிங் ஹால் பகுதியில் அங்கிருந்த நீளக் கம்பியில் மாட்டப்பட்டிருக்கும் சிறிய பீங்கான் தேநீர் குவளைகள் அனைத்தும் உடைந்திருப்பதைப் பார்ப்பாள். அதைப் பார்த்து அதிர்ச்சி மேலிட்டவாறு சுற்றிலும் நோட்டமிட்டவாறே ஒவ்வொரு அறையாக செல்வாள். ஒரு அறையில் வீட்டின் பெரியவர் கண்கள் தோண்டப்பட்டு இறந்துகிடப்பதைக் காண்பாள்.. அங்கெங்கும் பறவை இறகுகள் இருக்கும்.
ஒருநாள் பள்ளிக்குச் சென்ற தங்கையை அழைத்துவர மெலானி பள்ளியின் விளையாட்டு மைதானத்தின் பெஞ்ச் ஒன்றில் காத்திருக்கிறாள். சற்றே அவள் இளைப்பாறும்போது அவளுக்குப் பின்னால் குழந்தைகள் விளையாடும் கம்பிகளின்மீது எக்கச்சக்கமான பறவைகள் வந்து அமர்வதை அவள் பார்க்கவில்லை.
ஆனால் சற்றுநேரத்தில் வானத்தை திடீரென்று பார்க்கும்போது ஒரு பறவை கடும் வேகத்தோடு பறந்துவந்து ஏற்கெனவே அமர்ந்திருக்கும் பறவைகளோடு வந்து அமரும்போதுதான் அவள் அங்கு பார்ப்பாள். ஏராளமான பறவைகளைக் கண்ட அவள் அதிர்ச்சியடைந்து பள்ளி வகுப்பறைக்குள் சென்று ஆசிரியையிடம் நிலைமையைக் கூறுவாள். பள்ளி மைதானத்து விளையாட்டு கம்பிகளின்மீது முழுவதும் காத்திருக்கின்றன.
மாணவர்கள் வேறு வழியில் பள்ளியிலிருந்து வெளியேறி ஓடும்போது பறவைகள் ஒரே வேகத்தில் பாய்ந்துபறந்துவந்து மாணவர்களைத் தாக்கத் தொடங்குகின்றன. குழந்தைகள் தப்பித்துச் செல்வதற்காக அங்குமிங்குமாக அலைபாய்ந்து ஓடுகின்றனர்.
நம்மை மிகவும் அச்சமடைய வைக்கும் காட்சிகள் படம் முழுவதும் வருகின்றன. என்றாலும் இங்கு முக்கியமாக ஒரு காட்சியை சொல்லலாம்.
மெலானி சாலையில் நடந்துபோய்க்கொண்டிருக்க திடீரென பறவைகள் தாக்க வருகின்றன. அங்கிருந்த மக்கள் எல்லாம் அலைமோதி அருகிலிருக்கும் மதுபானக் கடைக்குள் நுழைவார்கள். இவளும் அவர்களுடன் ஓடிச்சென்று கடைக்குள் தஞ்சம் புகுகிறாள்.
அப்போது அவர்கள் சன்னல் வழியே பார்த்துக்கொண்டிருக்கும்போது பெட்ரோல் பங்க் அருகில் காரை நிறுத்திவிட்டு ஒருவர் பெட்ரோல் நிரப்பிக்கொண்டிருக்கும்போது ஒரு பறவை பறந்துவந்து அவரை அடித்துவிட்டுச் செல்கிறது. அவர் கீழேவிழுவதைப் பார்த்து மதுபானக்கடைக்குள் தஞ்சம் அடைந்த சிலரும் ஓடிச்சென்று கீழே விழுந்தவரை தூக்குவார்கள்.
அப்போது பறவை அடித்ததால் பெட்ரோல் குழாயை தவறவிட்டதால் அந்த பெட்ரோல் சாலையின் குறுக்கே மெல்ல வழிந்தோடிவரும். ஆனால் கீழே விழுந்தவரை காப்பாற்றப்போனவர்கள் அந்தப் பறவை போன திசையையே பார்ப்பார்களே தவிர பெட்ரோல் வழிவதைப் பார்க்க மாட்டார்கள். அந்த நேரம்பார்த்து பெட்ரோல் வழிந்த இடத்தில் ஒருவர் காரைக் கொண்டுவந்து நிறுத்தி வெளியே வந்து நின்று சிகரெட் பிடிக்க வத்திக்குச்சியைப் பற்றவைப்பார்.
மதுபானக்கடை ஜன்னல் வழியே திடீரென இக்காட்சியைப் பார்க்க நேர்ந்த மெலானி மற்றவர்களிடம் ''அங்கே பாருங்கள் வத்திக்குச்சியை பெட்ரோல்மீது போட்டுவிடப்போகிறார்'' அவரைத் தடுத்து நிறுத்துங்கள் எனக் கேட்க ''அனைவரும் சிகரெட் பற்றவைப்பவரை வேண்டாம் பற்றவைக்காதீர்கள்'' என ஆரவாரித்து கதவைத் திறந்துகொண்டு வெளியே அம்மனிதர் ஏதோ சத்தம் என பதற்றத்தில் விரலில் பற்றவைத்த தீக்குச்சியிலிருந்து தீப்பட்டுவிடுகிறது.
அவர் கையை உதறும்போது தீக்குச்சி விழுந்து தரையில் வழிந்திருக்கும் பெட்ரோலில் பட குபீர் என அவரை மூழ்கடிக்கும்படியான தீ கொப்பளிக்கும்.
அப்போது உடனிருந்த கார்கள் எல்லாம் பட்பட் என வெடித்து எரியத் தொடங்கும். சாலையின் குறுக்கே தரையில் வழிந்திருந்த பெட்ரோலில் தீப்பற்றி பரவி ஓடி பெட்ரோல் பங்க் இருந்த பகுதிக்குச் சென்று தீ பெட்ரோல் பங்கையே அங்கிருந்த காரோடு சேர்ந்து வெடித்து எரியும்.
நகரின் மையப் பகுதியில் தீப்பரவிச் செல்லும் காட்சி ஏரியல் ஷாட்டாகவும் காட்டப்படுகிறது. அந்த நிலையிலிருந்து வானிலிருந்து ஒவ்வொரு பறவையாக திடீரென பறவைக் கூட்டமாக வானிலிருந்து தரைக்கு இறங்கி அப்பகுதியை நோக்கி பறந்து செல்லும். இந்த ஏரியல் வியூ காட்சியின்வழியே ஹிட்ச்காக்கின் பிரமாண்டம் என்ன என்பது நமக்குப் புரிபட தொடங்குகிறது.
மதுபானக்கடையிலிருந்து பெட்ரோல் பங்க் அருகிலுள்ள டெலிபோன் பூத்திற்கு வந்து தன் தந்தையிடம் பேச முன்வரும்போது பறவைகள் அவளைத் துரத்தித் தாக்கும். எப்படியோ டெலிபோன் பூத் கதவை சாத்திக்கொண்டபோது பறவைகள் படுவேகமாக பறந்துவந்து டெலிபோன் பூத் கண்ணாடிக் கதவை மோதி விழும். அவளுடைய தந்தையும் அங்கு ரத்தத்தோடு பறவைகள் மோதியபடியே வருவார். அவளை அருகிலிருந்த கடைக்குள் அழைத்துச் சென்றுவிடுவார்.
ஏற்கெனவே பறவைகளின் தாக்குதல்களால் அந்த விசாலமான கடையில் ஏராளமானோர் தஞ்சம் புகுந்திருப்பார்கள். இவர்கள் இருவரும் உள்ளேவர அவர்கள் இவர்களை மிரட்சியுடன் நோக்குவார்கள்.
அப்போது ஒரு பெண்மணி இவளைப் பார்த்து, ''ஏன் உங்களைப் பறவைகள் துரத்துகின்றன. உங்களால் எவ்வளவு பேருக்கு பாதிப்பு.... சொல்லுங்கள் நீங்கள் யார். எங்கிருந்து வந்திருக்கிறீர்கள். இங்கே ஏன் வந்து தங்கியிருக்கிறீர்கள்... நீ ஒரு சைத்தானா? இல்லையெனில் பறவை உன்னை பின்தொடர்ந்து வந்து தாக்க வேண்டும். தயவு செய்து நீங்கள் எல்லாம் இங்கிருந்து போய்விடுங்கள்'' என்பாள்.
அன்றும் மிகப்பெரிய பறவைகளின் படையெடுப்புத் தாக்குதலில் அவர்கள் வீட்டில் இன்னொரு உயிர் போய்விடுகிறது. கடைசியாக அவர்கள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறி விடுவதென முடிவு செய்வார்கள்.
பறவைகளால் இறந்த சிலரைத் தவிர மீதியுள்ளவர்கள் காரில் புறப்படுவார்கள். பறவைகள் இவர்கள் வீட்டுக்கெதிரே கொலைவெறியோடு காத்திருப்பதைப் போன்ற தோற்றத்தோடு ஆயிரக்கணக்கில் பரவியிருக்கும். ஒவ்வொருவராக காருக்குள் வந்துஅமர்வதை எந்த தாக்குதலும் இன்றி பார்த்துக்கொண்டிருக்கும். அனைவரும் வந்து அமர்ந்த பிறகு கார் செல்வதை பார்த்துக்கொண்டேயிருக்கும் அப்பறவைகள் அமர்ந்திருக்கும் காட்சி எதையோ நமக்கு உணர்த்துகிறது.
'தி பேர்ட்ஸ்' படபிடிப்புத் தளத்தில் படத்தின் கலைஞர்களிடம் வேலைவாங்கும் இயக்குநர் ஆல்பர்ட் ஹிட்ச்காக்
நாவலாசிரியர் டாஃப்னே டியு மௌரியர் 1950களில் இச்சிறுகதையை எழுதினார். இச் சிறுகதையைத் தழுவி இவான் ஹன்டர் என்பவர் இப்படத்திற்கான திரைக்கதையை உருவாக்கினார். அந்தத் திரைக்கதை பல ஆண்டுகள் சிறு படமாக எடுக்கும் முயற்சிக்கான சரியான ஆதரவின்றி கிடப்பிலேயே இருந்தது.
ஏற்கெனவே பேர்ட்ஸ் சிறுகதையை திரைக்கதை ஆக்கியிருப்பதை அவர் கேள்விப்படுகிறார். அதை ஏதாவது செய்யமுடியுமா என யோசிக்கிறார் ஹிட்ச்காக்.
அதற்கு முன்பாக 1961ல் ஒரு சம்பவம். கலிஃபோர்னியாவின் கடலோர கேபிடோலா நகரத்தின் வீட்டுக்கூரைகள் எங்கும் கடற்பறவைகள் எக்கச்சக்கமாக இறந்துகிடப்பதை ஹிட்ச்காக் கேள்வியுற நேரில் பார்க்க நேர்கிறது. அதையொட்டி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த பறவைகள் உண்ட உணவில் விஷம் இருந்திருப்பதை காண்கிறார்.
மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாகும் ஹிட்ச்காக் ஒரு திரைப் படைப்பாளியாகவும் இருக்கும் பட்சத்தில் மனதில் ஏதோ ஒரு குழப்பம் கருவாக உருவாக நேரம்பார்த்துக்கொண்டிருப்பதை உணர்கிறார்.
அதன்பின்னரே டாஃப்னே டியூ மௌரியர் எழுதிய 'பேர்ட்ஸ்' சிறுகதை திரைக்கதை ஆக்கப்பட்டிருப்பதைக் காண்கிறார். மிகச்சிறப்பாக எழுதப்பட்டுள்ள அத்திரைக்கதையை தகுந்த அனுமதியோடு அதை இவர் கையில் எடுக்கிறார். அப்புறமென்ன ஹிட்ச்காக் கைப்பட்டாலே அது வேறொரு உலகத்தை உருவாக்கிவிடுமல்லவா?
இத்தகைய சவால் மிகுந்த திரைப்படத்தை எடுப்பதுதான் தனது நீண்டநாள் லட்சியம் என நினைத்த ஆல்பர்ட் ஹிட்ச்காக். தகுந்த தொழில்நுட்பமும் கதைக்கு ஈடுகொடுக்கும் சிறந்த கலைஞர்களுக்கும் அவருக்குக் கிடைக்கும் வரை காத்திருந்து அத்திரைக்கதைக்கு 1963ல் உயிர்கொடுத்தார்.
மெலானி எனும் ஓர் இளம்பெண்ணின் திகிலான உணர்ச்சிப்பிரவாகத்தை டிப்பி ஹெட்ரென் வெளிப்படுத்தியுள்ள விதம் திரைப்படத்தோடு நம்மை கட்டிப்போட வைக்கிறது. ஹாலிவுட்டின் ராட் டாய்லோர், ஜெஸிக்கா டேண்டி உள்ளிட்ட கலைஞர்களின் நடிப்பும் பொடேகே பேவின் வாழ்விடத்திற்கே நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது.
இப்படத்தின் ஒளிப்பதிவை ராபர்ட் பர்க்ஸ் தவிர வேறு செய்திருந்தாலும் அதிரவைக்கும் காட்சிஇயல்பை இவ்வளவு நேர்த்தியாக தந்திருக்கமுடியுமா என்பது சந்தேகம்தான். ராபர்ட் பர்க்ஸ் ஏற்கெனவே ஹிட்ச்காக்கின் படம் ஒன்றுக்காக ஆஸ்கர் விருது பெற்றவர் என்பதும் இங்கு சொல்லியாக வேண்டும்.
இப்படத்திற்கென சிறப்பு விளைவுக் காட்சிகள் பெரும்பாலும் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் இதற்கென அப் ல்வெர்க்ஸ் போன்ற நிபுணர்களைக்கொண்டு உருவாக்கப்பட்டது. பறவைகளின் ஆக்ரோஷ இரைச்சல்களுக்காகவென்று மிக்சர் ட்ராடோனியம் எனும் எலட்ரானிக் இசைக்கருவியும் பயன்படுத்தப்பட்டது.
இரைக்காக அல்லாமல் இந்தப் பறவைகள் ஆட்களைக் கொத்துகின்றன. வானில் பறக்கவேண்டிய பறவைகளின் சுதந்திரத்தில் தலையிட்டால் விளைவுகள் இப்படித்தான் விபரீமாகுமோ எனும்படியாக பறவைகளின் கோபம் மனிதர்களைத் துரத்தி கொத்தி ரத்தக்களறியாக்குகின்றன.
அவற்றை அனாவசியமாக சுட்டுக்கொல்ல நினைப்பதற்கும் எதிரான திசையிலிருந்துதான் இப்படத்தின் நோக்கம் வேர்கொண்டுள்ளதோ என ஒருவாறாக நாம் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. படம் முழுவதும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான அனுபவமே நமக்கு கிடைக்கிறது.
சில நேரங்களில் இயற்கையை உடைக்கும் மனிதனுக்கு இது ஒரு அதிர்ச்சிக் குறியீடா என்றும் நமக்குத் தோன்றுகிறது. இப்படியெல்லாம் எதுவும் யோசிக்காமல் வித்தியாசங்களை நேசிக்கும் ரசிகனுக்கும் இப்படம் ஒரு அதிரடி விருந்தை ஹிட்ச்காக் படைத்துக்கொடுத்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago