உலகம் முழுவதும் மக்களை வசியப்படுத்திய நவீன சாதனங்களில் சினிமாவுக்குப் பெரிய இடம் உண்டு. எத்தனையோ பேரின் வாழ்வில் ஓர் அங்கமாகவே சினிமா ஆகிவிட்டது. ஒரு திரை நட்சத்திரத்தை தன் வாழ்நாள் ஆதர்சமாக கொண்டவர்களின் கதைகளை எத்தனை முறை சொன்னாலும் சலிக்காது என்பதற்கு 'ரெட் கார்பெட்' ஒரு சிறந்த உதாரணம்.
எப்போதோ கொடிகட்டி வாழ்ந்த நடிகர்களின் பெரும்பாலான பழைய படங்கள் இப்பொழுதெல்லாம் தியேட்டரில் திரையிடுவதுமில்லை, திரையிட்டாலும் பழைய வரவேற்பைப் போன்று இப்போது இருப்பதுவும் இல்லை. தனக்குப் பிடித்த பழைய நடிகனின் படங்கள் தியேட்டரில் பார்த்த காலங்கள் மறக்கமுடியாத வசந்த நினைவுகளாக பலர் இன்றும் நினைவுகூர்கிறார்கள். அதேபோன்று தியேட்டருக்கு போய் படம்பார்த்த, என்றைக்கோ வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் மீண்டும் வாழவும் அவர்கள் மனம் ஏங்குகிறது.
அப்படி அந்தச் சம்பவங்களை நினைத்து ஏங்குவதின் மூலம் தங்கள் பழைய இளமை நாட்களை மீண்டும் மீட்டெடுத்துவிட முடியும் என்று அவர்கள் நம்புகிறார்களா? அல்லது அப்படங்களை மீண்டும் பார்ப்பதின்மூலம் தங்கள் பழைய நினைவுகளை அசைபோட முடிந்ததில் சிறு சந்தோஷமா என்பதெல்லாம் புரியாத புதிர்தான். ஆனாலும் மீண்டும் அசைபோடக் கிடைத்த நினைவுகள் எப்போதும் சுகமானவைதான்.
தன் மகன் பிறந்த நாளுக்கு தனக்குப் பிடித்த மஸரோபி என்ற புகழ்பெற்ற பிரேசில் நடிகனின் படத்திற்கு தன் மகனை அழைத்துச் சென்று காட்டுவதாக வாக்குறுதி அளிக்கிறான் மலைப்பிரதேசத்தில் வள்ளிக்கிழங்குகளைப் பயிரிட்டு வாழும் விவசாயியான குயின்சின்ஹோ.
''என்னது சினிமாவுக்கா. மாடு கன்றுகளை யார் விட்டுட்டு எப்படி வர்றது?'' என்று கோபப்படும் அவனது மனைவி பின்னர் அக்கம்பக்கத்து விவசாயப் பெண்களிடம் சொல்லிவிட்டு உற்சாகமாக அவனுடன் புறப்படத்தான் செய்கிறாள். சில நாட்கள் சமைத்துச் சாப்பிட ஏதுவாக பண்டங்கள் பாத்திரங்களை ஒரு கழுதையில் பொதிகளை ஏற்றிக்கொண்டு மலைப்பாதை இறக்கத்தில் ஒற்றையடிப் பாதையில் செல்லும் விவசாயியின் குடும்பம் வழியிலேயே தெரிந்த பண்ணை வீட்டில் இரவைக் கழிக்கிறது. இரவில் அக்கிராம வாசிகளுடன் கிதார் வாசித்து ஆடிப்பாடி மகிழ்ந்துவிட்டு உண்டு, உறங்கியபிறகு, மறுநாள் காலையில் ஒரு டெம்போவேனில் கழுதையையும் ஏற்றிக்கொண்டு மலையடிவார நகரத்திற்கு வருகிறார்கள்.
அங்கிருந்து அவர்கள் பயணம் கால்நடையாகவும் பார வண்டிகளின் உதவியோடும் நகர்கிறது. அவர்கள் விரும்பியபடி மஸரோபி என்ற தங்கள் அபிமான நடிகனின் படத்தை தியேட்டரில் பார்த்தார்களா? வெறும அலைச்சால்தான் மிச்சமா என்பதையெல்லாம் மீதியுள்ள ஒன்றரை மணிநேரப் படம் நமக்கு மிகப்பெரிய பாடமே எடுத்துவிடுகிறது. அதுவும் மிக மிக சுவாரஸ்யமான பாடம்.
மலைக்கிராம வாழ்க்கையின் நடைமுறைகள், பண்பாடுகள், நம்பிக்கைகள் போன்றவை மிகவும் அழகாக காட்டப்பட்டுள்ளன. மலை அடிவாரத்தில் தென்படும் நகரங்கள், நெடுஞ்சாலைகள் புதிய பாதைகள் பழமை வாய்ந்த நகரங்கள் எனப் பயணம் நீள்கிறது.
பழைய சினிமா ரசனை என்ற ஒரு மேடையை வைத்துக்கொண்டு ஒரு அப்பாவி ரசிகனின் மனநிலை வாழ்நிலை, ஆசை, அபிலாஷைகள் மூலம் அவனது பயணத்தில் இன்றைய பிரேசிலை நம் கண்முன் நிறுத்துவது எளிதான வேலையல்ல; தனது அபிமான நடிகனின் படம் பார்க்கச் செல்லும் பயணத்தில் இப்படத்தின் நாயகனும் அவனது மனைவியும் மகனும் எதிர்கொள்ளும் பல்வேறு அனுபவங்கள் இன்றைய வாழ்க்கையின் புதிய போக்குகளையும் முன்பின் தெரியாத நகரத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதையும் மிக அருமையாக காட்டிச் செல்கிறது.
குயின்சின்ஹோ குடும்பம் ஒரு சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நுழையும் போது அக்கடை சிப்பந்தி, ''என்ன பந்தயம் மிஸரோபி படத்தை உங்களால் பார்க்கமுடியாது, வேண்டுமானால் எங்கள் கடையில் உள்ள தொலைக்காட்சியை வாங்கிச் செல்லுங்கள் அதைவிட நல்ல படங்களைப் பார்க்கலாம்'' என்று சவால் விடுகிறார். அக்கடைக்காரரிடம் சண்டை போட்டுக்கொண்டு சரேலென அவர்கள் கிளம்பிடுவார்கள்.
மழை வருவது போலிருக்க, ஒரு பாலத்தின் கீழே ஒதுங்கும்போது, ''மஸரோபி நீதான் எனக்கு வழிகாட்டணும். என் மகனுக்கு உன்னை காட்டறதா சொல்லி கூட்டி வந்திருக்கேன்'' என்றெல்லாம் புலம்பும்போது நமக்குச் சிரிப்புதான் வருகிறது.
ஒரு பாரவண்டியில் இவர்களை ஏற்றிச்செல்பவனிடம் குயின்சின்ஹோ அற்புதமானதொரு நட்பைப் பெறுகிறான். தியேட்டர்கள் இன்று அரிதாகிவிட்டன என்பதை அவனுக்குக் கூறும் அப்பார வண்டியோட்டி தனது கதையை விவசாயிடம் கூறுவான். அவன் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்ததாகவும் மெஷின்களின் அபரிமித வருகைக்குப் பிறகு வேலையிழந்த பலரில் தானும் ஒருவன் என்று கூறியதோடு இன்று நிலமற்ற தொழிலாளர்களின் இயக்கத்தில் ஒரு உறுப்பினனாகச் சேர்ந்து அரசியல் போராட்டங்களில ஈடுபடுவதாகக் கூறுவான்.
அவனிடம் ஒரு பழத்தைச் சாப்பிடத் தரும் குயின்சின்ஹோ, தான் ஒரு நிலமுள்ள விவசாயி என்றும் ஃபார்மோசோ மலைப்பக்கம் வரும்போது, பால்தசார் மகன் குயின்சின்ஹோ என்று விசாரித்தால் எல்லாருக்கும் தெரியும் என்றும் கூறி தனது வீட்டுக்கு வரும்படியும் அழைப்பு விடுத்துவிட்டு நன்றி செலுத்தி வண்டியோட்டியிடமிருந்து விடைபெற்று மேலும் தேடலைத் தொடர்வான்.
மக்களுக்கான பொழுதுபோக்கு மையங்களாகத் திகழ்ந்த திரை அரங்குகளின் இன்றையை நிலையை ஒரு ஆய்வுக்கட்டுரையில் பயன்படுத்தவேண்டிய அத்தனை தரவுகளையும் இத்திரைப்படம் உள்ளடக்கி வைத்துள்ளது. ஒரு இடத்தில் ஒரு கடைக்காரர் குயின்சின்ஹோவிடம் சொல்வார், ''தியேட்டர்களுக்கு மக்கள் வருவதில்லை. அதனால் அவை இன்று திவாலாகிவிட்டன. பல தியேட்டர்கள் ஷாப்பிங் மால்களாக மாறிவிட்டன. இன்னும் சில தியேட்டர்களோ தேவ திருச்சபைகளாக, சர்ச்சுகளாக மாறிவிட்டன. சர்ச்சுகளுக்குக் கூட மக்கள் பணம் கொடுத்துச் செல்லத் தயாராக இருக்கிறார்கள். அதனால் தியேட்டரைவிட பலமடங்கு வருமானம் சர்ச்சுகளுக்குக் கிடைக்கின்றன'' என்பார்.
ஒரு வகையில் ஏமாற்றம் மிஞ்சினாலும் இன்னொரு வகையில் மஸரோபி ஷாப் என்ற பெயரில் ஒரு கடையைப் பார்த்ததும் சற்றே குயின்சின்ஹோவின் மனம் ஆறுதலடைகிறது.
அங்கே சென்று தனது மகனுக்கு மஸரோபி படத்தைக் காட்டுவதாகக் கூறி அழைத்து வந்துள்ள பயணத்தைப் பற்றிச் சொல்லி ''இந்நகரில் தியேட்டர் ஏதாவது உள்ளதா?'' என்று கேட்பான். ''இரண்டு தியேட்டர்கள் உள்ளன. ஆனால், அங்கு புதிய படங்கள்தான் போடுவார்கள், பழைய நடிகரான மஸரோபியின் சிறந்த ரசிகர்கள் ஒன்றாக சங்கமிக்கும் ஒரு இடம் இந்த வீதியின் கடைசியில் உள்ள மதுபான விடுதியாகும். அங்கு அவர்கள் கிதார் இசைத்தபடி அவரது நினைவுகளை ஆளாளுக்குப் பகிர்ந்துகொள்வார்கள். நீங்கள் சென்று விசாரித்தால் ஏதாவது வழி கிடைக்கும்'' என்று கூறுவதோடு, பழைய படங்கள் ஞாயிறுதோறும் மதியம் திரையிடும் ஒரு தேவாலயததையும் அக்கடைக்காரர் அவனுக்கு அடையாளம் காட்டி வழிசொல்லி அனுப்புவார்.
அவர் கூறியபடி அங்கு சென்றாலும் கிதார் இசையில் மயங்கிவாறு தன்னைப் பற்றி பேச ஆரம்பிப்பான். அதற்குள் நாட்டின் புகழ்பெற்ற கிதார் இசைக்கலைஞன் கடைக்குள் நுழைய அவனைப் பார்த்துவிட்ட மகிழ்வில் எல்லாவற்றையும் மறந்துவிடுவான். அவன் பின்னாலேயேபோக அவன் போகுமிடம் சுடுகாடு என்பதை அறிந்து அங்கிருந்து ஓட்டமெடுப்பான். தனது மனைவி, குழந்தைகளைத் தேடி சர்ச் ஒன்றின் அருகே இரவு உறங்கியவர்களை ஒரு குடும்பம் அழைத்துச் சிற்றுண்டி வழங்குவார்கள். அவர்கள் பேச்சுவாக்கில் இங்கு இறந்துபோன பழைய கிதார் இசைக்கலைஞன் ஆவி சுற்றுகிறது எனக்கேட்டு குயின்சின்ஹோவின் உடல் நடுங்கத் தொடங்கும்.
இப்படத்தில் சினிமா ரசனையை அழுத்தமாகச் சொன்ன அளவுக்கு கிதார் இசை ரசனையும் சொல்லப்பட்டுள்ளது. அதேநேரம் அப்பகுதி மக்களிடையே கடவுள் நம்பிக்கையும் பேய்கள் உள்ளிட்ட பல்வேறு பில்லி, சூன்யத்தை நம்பும் பழக்கமும் இருப்பதையும் காணமுடிகிறது.
சிறந்த கிதார் வாத்தியக் கலைஞனான குயின்சின்ஹோ ஒரு வனாந்தரப் பகுதியில் மரத்தடியில் குடும்பத்தோடு மீன் சுட்டு சாப்பிட்டுக்கொண்டிருப்பான். ஒரு வழிப்போக்கன் சின்னஞ்சிறு பவளப் பாம்பின் அருமையைச் சொல்லி அவன் விரல்களில் அப்பாம்பு தவழ்ந்தால் கிதார் தந்தியை மீட்டும் விரல்களின் இசை ஆற்றல் பெருகும் எனக்கூற அதனை ஏற்று அதன்படி பாம்பை தனது விரல்களில் தவழவிட்ட பிறகு ஒரு தெருமுனை சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து விளையாட்டாக கிதார் வாசிப்பான்.
அப்போது அவனது இசையைக் கேட்ட பொதுமக்கள் ரசித்து ஆரவாரித்து கைதட்டுவார்கள். அந்நேரம் திடீரென பணம் குவிகையில், ''ஆஹா! இவன் சிறந்த இசைக்கலைஞனாகவே ஆகலாமே?'' என்றெல்லாம் நமக்குத் தோன்றுகிறது.
அப்பணத்தைக் கொண்டு ஒரு சாலையோர மோட்டலுக்கு வெளியே கழுதையைக் கட்டிவிட்டு உள்ளே போய் பஃபே உணவு முறையில் எக்கச்சக்கமான வகை உணவுகளை மூவரும் உண்டு மகிழும்போது நீண்டநேரமாகப் பின்தொடரும் ஒரு நயவஞ்சகனின் வார்த்தைகளில் விழும் குயின்சின்ஹோவின் சினிமா கனவு தவிடுபொடியாகிறது.
அந்த நயவஞ்சகன் தன்னை அவர்கள் விரும்பும் புகழ்பெற்ற நடிகனின் உறவினன் என்று சொல்லி அவர்களை ஏமாற்றுவான். அவன் பேச்சை நம்பி அவனைப் பின்தொடர மிஸரோபி படம் அந்த முகாமில் திரையிடுவார்கள், நீங்கள் அங்கு போய் இரவை அனுபவியுங்கள் என பொய் சொல்லி, இந்தக் கழுதையும் பொதியும் எனது வீட்டிலேயே இருக்கட்டும் என யாரோ ஒருவரின் வீட்டைக் காட்டி ஏமாற்றி மறைந்துவிடுவான்.
அங்கு சென்றபிறகு எதிர்பாராத பிரச்சினைகள் எக்கச்சக்கமாக பெருகும். ஒரு இரவிலேயே விவசாயியின் குடும்பம் சிதறிவிடும். நயவஞ்சகன் காட்டும் இடம் ஒரு முகாம் போன்று உள்ளது. மறைவான டென்ட் கொட்டகைகள். நிலமற்ற தொழிலாளர்களின் ரகசியச் சந்திப்புகள் நிகழும் இடம் அது. அந்த பாரவண்டி நண்பனை மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது. அதுதான் அந்த நண்பனின் வீடு.
மலைக்கிராமம், பெருநகர வாழ்க்கை என்றெல்லாம் நகரும் இப்படத்தில் நாட்டின் நலிவுற்ற நிலமற்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளும் அவர்களது போராட்டங்களும் ஆங்காங்கே தலைகாட்டுகின்றன. ஒரு கட்டத்தில் விவசாயி குடும்பத்தினருக்கு அது தலைவலியாகிறது. பார வண்டியில் சந்தித்த நிலமற்ற தொழிலாளர் கூட்டத்தைச சேர்ந்த பார வண்டியோட்டி நண்பன் அவர்களை அழைத்துச் சென்று இரவு தங்க வைக்க அங்கு படம் காட்டப்படுகிறது. ஆனால் அது மிஸரோபியின் படம் அல்ல, தொழிலாளர் கூட்டத்தின் புரட்சிகர இயக்கத் தலைவரின் பேச்சு.
ஏமாந்துவிட்டோமே என குயின்சின்ஹோ வெறித்துப்போய் பார்த்துக்கொண்டிருக்கும் அந்நேரம் போலீஸ் அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்து துப்பாக்கிச் சூடு நடத்த பார வண்டியோட்டி உயரிழக்கிறான். இதனால் குயின்சின்ஹோ வெகுண்டு ஆர்ப்பாட்டம் செய்ய போலீஸ் அவனைப் பிடித்துச் சென்றுவிடுகிறது. கலவரத்தின்போது போலீஸார் துரத்த மகன் எங்கோ தப்பியோடி காணாமல் போகிறான். மனைவி தனது அத்தை வீட்டுக்குச் சென்றுவிடுகிறாள்.
இப்படத்தில் மஸரோபியின் வெறிபிடித்த ரசிகனாகத் தோன்றி அவனது புகழை வழியெங்கும் பேசிக்கொண்டு செல்லும் நாயகனாகத் தோன்றிய ஜாக்ஸன் ஆன்டியூனெஸ் நடிப்புதான் இப்படத்தின் ஆதார சுருதி. மகனைத் தேடி அருகருகான நகரங்களை நோக்கி, லாரிகளில் பயணித்து எங்கெங்கோ அலைகிற காட்சியில் ஆன்டியூனெஸ் நம் இதயத்தைப் பிழிந்துவிடுகிறார். அப்பாவியை விடுவியுங்கள் என்று வழக்கறிஞர்கள் கூற, சிறையிலிருந்து நாயகனை நீதிபதி விடுவித்துவிடுகிறார்.
வெளியே வந்தபிறகு பல்வேறு நகர சந்தடிகளில் அலைந்து கடைசியில் எதிரபாராமல் உலகின் பழமை வாய்ந்த மிகப் பிரம்மாண்டமான லேடி ஆப் அபரெசிதா மாதா கோயிலை பிரமிப்போடு பார்க்கிறான். நம் மனதிலும் ஈரம் கசிகிறது. ஆலயத்திற்குள் சென்று அமர்ந்து கதறுகிறான். ''தாயே என் மகனைத் தேடி அலைந்த எனக்கு நீ இருக்கும் இக்கோயிலை நாடி வரவழைத்துவிட்டாய். உலகின் முக்கியமான மாதாகோயிலில் இவ்வளவு நெருக்கமாக உன்னைக் கண்டு உன் எதிரே வந்து வழிபடுவேன் என்று நான் கனவிலும் நினைத்ததில்லையே... இது எப்படி சாத்தியமாயிற்று... உனது கருணையேகருணை, என் மகனை திருப்பிக்கொடு குடும்பத்தை ஒன்றுசேர்த்துவிடு'' என மனமுருகி வணங்கும் இடத்தில் ஒரு படி மேலே சென்றுவிடுகிறது. சிக்கல்கள் வந்தாலும் சிதைந்துவிடாமல் வாழ்க்கைப் பற்றிய நம்பிக்கையை அளிக்கிறது இத்திரைப்படம்.
மஸரோபி என்ற நடிகன் பிரேசிலின் சார்லி சாப்ளின் என்கிறார்கள். ஆனால் அதெல்லாம் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் அவரது ரசிகனாக இப்படத்தின் நாயகனையே காட்டுகிறார்கள். நாயகனின் ரசனைகள், அபிலாஷைகள், கனவுகள், லட்சியங்கள், அன்றாட வாழ்க்கைப்பாடுகள் இதெல்லாம் அந்த மஸரோபியை அவர் எப்படிப்பட்ட உயர்ந்த நடிகராக அந்நாட்டு மக்களின் இதயத்தில் இடம்பிடித்த நடிகராக இருக்க வேண்டும் எனக் காட்டி விடுகிறது.
என்ன படம் இது ஒரு பழைய சினிமா நடிகனின் படத்தை தேடிப்போவதும் நகரங்களை அங்கங்கே வேடிக்கைப் பார்த்துச் செல்வதும் ஒரு கதையா என்று நினைக்கும் உலக சினிமா ரசிகனைக்கூட பிரேசிலின் அழகிய வாழ்க்கைப் பயணத்தைக் காட்டி வீழ்த்திவிடுகிறார் இயக்குநர் என்பதில்தான் இப்படத்தின் வெற்றி நிறைந்திருக்கிறது.
நயவஞ்சகர்களின் பித்தலாட்டத்தில் கடுமையான சிக்கல்களைச் சந்தித்தாலும், கடவுள் நம்பிக்கை கொண்டு எளிய வாழ்க்கை வாழும் நல்ல மனிதர்களின் அரவணைப்பையும் பெறுவதைப் பல இடங்களில் காட்டுகிறார்கள்.
இப்படம் வலுவான கதை என்று சொல்வதைவிட வலுவான திரைக்கதை என்றுதான் சொல்ல வேண்டும். கதை சொல்லப்பட்ட நேர்த்தி முக்கியமானது. பார்வையாளனை நகரவிடாமல் செய்யும் அதி அற்புத பாணியை இயக்குநர் லூயிஸ் ஆல்பெர்ட்டோ பெய்ரா கையாண்டுள்ளார். கடைசிக் காட்சிகளில் குயின்சின்ஹோ மிகவும் விவேகமாகச் செயல்படுவது இயக்குநரின் முத்திரைக் காட்சி.
தியேட்டராக இருந்து மாறிய ஒரு தேவாலயத்தில் ஆறுதல் பெற சென்ற இடத்தில் மஸரோபியின் படச்சுருள் கேன்களைக் கண்டு ஆனந்தம் அடைகிறான் குயின்சின்ஹோ. அங்குள்ள அலுவலத்திலிருந்து கேட்டுப்பெற்று வாங்கிவருகிறான். மகனைத் தேடி இரவெல்லாம் அலைய ஒரு இடத்தில் மகனையும் கண்டடைகிறான்.
நகரின் பிரபல தியேட்டரான 'சினி பாத்' என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர் நிர்வாகிகளிடம் மிஸரோபி திரைப்படத்தை திரையிடக் கோரி வேண்டுகிறான். அவர்கள் மறுக்க மறுக்க கடைசியில், ''புதுசு புதுசா எடுக்கற மட்டமான படங்களைத் திரையிட்டு மக்களையும் மட்டமான ரசனையில வச்சிருக்கற மட்டான தியேட்டர்காரங்கள் எவ்வளவு கேவலமானவர்கள்'' என்று கத்துவான். அதைப் பலரும் வேடிக்கை பார்ப்பார்கள்.
இறுதியாக வாசலில் அமர்ந்து தன்னைச் சங்கிலிகளோடு பிணைத்துக்கொண்டு ''மஸாரபி படத்தைத் திரையிட வேண்டும்'' என்று போராட்டத்தில் ஈடுபடத் தொடங்குவான். அவனது போராட்டத்தை மீடியாக்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகின்றன.
இதனால் அன்றைய தினம் நாடே அவனைத் திரும்பிப் பார்க்கிறது. தியேட்டர் அதிபர், நேரில் வந்து மஸரபியின் படத்தைத் திரையிடுவதாகவும் பிரேசிலின் சார்லி சாப்ளினாகத் திகழ்ந்த மாபெரும் நடிகனுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக இன்று ஒருநாள் இலவசக் காட்சியாக திரையிடுவதாகக் கூறி அவனது போராட்டத்தை முடித்துவைக்கிறார். என்றாலும் தனக்கு ''ரெட் கார்பெட்' வரவேற்பு கிடைத்தால்தான் போராட்டத்தைக் கைவிடுவேன்... ஏனெனில் இதற்காக நான் காடுமேடெல்லாம் அலைந்து வந்துள்ளேன். ரெட் கார்பெட் வரவேற்பு கிடைக்கும்வரை சங்கிலிகளை அவிழ்க்க மாட்டேன்'' எனக் கூறுகிறான்.
அவனது கோரிக்கையை எல்லோரும் கைதட்டி ஆரவாரித்து வரவேற்கிறார்கள். தொலைக்காட்சி பார்க்கும் அவனது மனைவியும் மனைவியின் அத்தையும் வியப்பின் உச்சத்திற்கே செல்கிறார்கள். எக்கச்சக்கமான மீடியா மக்கள் பொதுமக்கள் தள்ளுமுள்ளுக்கிடையே தியேட்டர் அதிபர் சிரித்தபடியே ''அப்படியே ரெட் கார்பெட் வரவேற்பு அளிக்கிறேன் தயவுசெய்து சங்கிலிகளை அவிழுங்கள்'' எனக் கேட்கிறார்.
டெய்சீராவின் கிதார் இசைப் பின்னணி பாடல்களும் யூலி பர்டின் வினிசியஸின் கேமராவும் இயக்குநர் லூயிஸ் ஆல்பெர்ட்டோ பெய்ராவின் திரைக்கதைக்கு மிகச் சிறந்த துணையாய் நிற்கின்றன. இப்படத்தில் மிஸரோபியை ரசிக்க வந்த ரசிகனுக்கு மிஸரோபியின் ரசிகனாக வரும் ஜாக்ஸன் ஆன்டியூனெஸ் நடிப்பும் திகட்டத் திகட்ட இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது.
காலம் கடந்தாலும் ரசனைகள் மாறுவதில்லை, தன் அபிமான நடிகன் மீது மதிப்பு வைத்த ரசிகனும் மாறுவதில்லை என்பதை விவசாயி குயின்சின்ஹோவின் குடும்பம் முதல் வரிசையில் அமர்ந்து ரசிக்க, நகரத்தின் சினிமா ரசிகர்களும் அன்றைய தினம் மிஸரோபியை ரசிக்க வைத்ததன் மூலம் கலக்கல் கிளைமாக்ஸை வழங்கி நிரூபித்துவிட்டார் இயக்குநர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago