நம்மில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் ஏதோவொரு ஒரு காலகட்டத்தில் ஒருமுறையேனும் காதல் வயப்பட்டிருப்போம் இல்லையா? அது ஒரு நாளாகவும் இருக்கலாம், ஒரு ஆண்டாகவும் இருக்கலாம். அதன் பிறகு ஒருகட்டத்தில் அந்தக் காதலின் பிடியிலிருந்து நாம் விலகியிருப்போம். ஆனால் அந்தக் காதலின் நினைவுகள் மட்டும் என்றும் நீங்காமல் நம் உள்ளத்தின் ஒரு மூலையில் தேங்கிவிடும். அப்படித் தேங்கிவிடும் நினைவுகளை அவ்வப்போது ஏதேனும் ஒரு விஷயம் மீட்டெடுக்கும். அது ஒரு நிகழ்வாக இருக்கலாம், நபராக இருக்கலாம், இசையாக இருக்கலாம், அல்லது ஒரு திரைப்படமாக இருக்கலாம். அப்படி மூழ்கிக் கிடக்கும் நினைவுகளை மேலே கொண்டுவரும் ஒரு அழகான காதல் கதையே இந்த ‘பிரிட்ஜஸ் ஆஃப் மேடிஸன் கவுண்ட்டி’.
1992 ஆம் ஆண்டு ராபர்ட் ஜேம்ஸ் வால்லர் என்பவர் எழுதிய ‘பிரிட்ஜஸ் ஆஃப் மேடிஸன் கவுண்ட்டி’ என்ற நாவல் உலகமெங்கும் விற்றுத் தீர்ந்து 20 ஆம் நூற்றாண்டின் ’பெஸ்ட் செல்லர்’ என்று பத்திரிகைகளால் பாராட்டப்பட்டது. பிறகு இந்த நாவல் அதே பெயரில் 1995 ஆம் ஆண்டு க்ளிண்ட் ஈஸ்ட்வூட் திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றியும் பெற்றது.
இனி ‘The Bridges of Madison County’ திரைப்படம்.
சில நாட்களுக்கு முன்பு இறந்துபோன தங்கள் தாயாரின் சொத்துகளைப் பிரித்துக் கொள்ள அண்ணன் தங்கையான மைக்கேல் மற்றும் கரோலின் சிறுவயதில் அவர்கள் வாழ்ந்த வீட்டுக்கு வருகின்றனர். அங்கே அவர்களின் தாய் பிரான்செஸ்கா தனது அஸ்தியை அவர்களின் வீட்டுக்கு சற்று தொலைவில் இருக்கும் ரோஸ்மேன் பாலத்தில் கரைக்கவேண்டும் என்று தன்னிடம் தெரிவித்ததாக கூறும் பிரான்செஸ்காவின் வழக்கறிஞர், அவர்களிடம் சில கடிதங்களைக் கொடுக்கிறார். அதில் ஒரு பெட்டியின் சாவி அவர்களுக்குக் கிடைக்கிறது. அந்தப் பெட்டியில் சில கேமராக்களும், சில டைரிகளும், தாங்கள் இதுவரை பார்த்திராத பிரான்செஸ்காவின் சில புகைப்படங்களும் அவர்களுக்குக் கிடைக்கின்றன. குழம்பிப் போகும் கரோலினும் மைக்கேலும் அந்த டைரியைப் படிக்கத் தொடங்குகின்றனர்.
ஆண்டு 1965
கிராமத்துப் பெண்ணான பிரான்செஸ்கா தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அமெரிக்காவின் இயோவா என்ற கிராமத்தில் வசித்து வருகிறாள். இத்தாலியப் பெண்ணான பிரான்செஸ்கா ஒரு போரின் போது அவளது கணவனால் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டவள். விவசாயியான அவளது கணவர், மற்றும் பதின்பருவத்தில் இருக்கும் இரண்டு பிள்ளைகளே அவள் உலகம். வீட்டைத் தாண்டி பெரும்பாலும் வெளியே செல்வதே அவளுக்கு அரிதான விஷயம்.
ஒருநாள் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு அவள் கணவர் 4 நாட்கள் கண்காட்சிக்குச் செல்கிறார். அவர்களை வழியனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழையப் போகும் பிரான்செஸ்கா ஒரு காரின் சத்தத்தைக் கேட்டு திரும்புகிறாள். காரிலிருந்து ஒரு மனிதன் இறங்குகிறான். தன் பெயர் ராபர்ட் என்றும் நேஷனல் ஜியோகிராபிக் இதழின் போட்டோகிராபர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அவன், அந்தப் பகுதியிலுள்ள ஒரு பாலத்திற்குச் செல்ல வழி கேட்கிறான்.
பெரும்பாலும் வீடே கதி என்று கிடக்கும் பிரான்செஸ்கா வழி சொல்லத் திணறுகிறாள். 2 மைல் தொலைவில் இருக்கும் அப்பாலத்தை தானே வந்து காண்பிப்பதாகவும் கூறுகிறாள். இருவரும் பாலத்தை நோக்கி காரில் கிளம்புகின்றனர். காரில் அவர்களுக்குள் போலித்தனமில்லாத சுவாரஸ்யமான உரையாடல் நிகழ்கிறது. அந்த உரையாடலின் மூலம் ராபர்ட் விவாகரத்தானவன் என்று பிரான்செஸ்கா தெரிந்து கொள்கிறாள்.
பிரான்செஸ்காவின் சொந்த ஊரைப் பற்றிக் கேட்கிறான் ராபர்ட். அது இத்தாலியில் உள்ள பாரி எனப்படும் யாருக்கும் தெரியாத ஒரு சிறிய கிராமம் என்று சொல்கிறாள். அதற்கு அவன் தனக்கு அந்த கிராமம் தெரியும் என்றும் வேறு ஒரு ஊருக்குச் செல்லும் வழியில் அந்த கிராமத்தின் அழகைக் கண்டு அங்கேயே சில நாட்களைக் கழித்ததாகவும் சொல்கிறான் ராபர்ட். ஒரு ஊரின் அழகுக்காக அங்கேயே தங்கினீர்களா என்று மீண்டும் மீண்டும் கேட்கிறாள் பிரான்செஸ்கா. அத்தைகய ஒருவனை அவள் தன் வாழ்நாளின் சந்தித்திருக்கவில்லை என்பதை உணர்கிறாள்.
பாலத்தைப் புகைப்படம் எடுக்கும் ராபர்ட்டை தன்னையும் அறியாமல் பிரான்செஸ்கா ரசிக்கத் தொடங்குகிறாள். 50 வயதைக் கடந்த அவன் பேச்சு, நடவடிக்கைகள் அனைத்தும் அவளை ஈர்க்கின்றன. ராபர்ட்டை தன்னோடு விருந்து சாப்பிடுமாறு பிரான்செஸ்கா அழைக்கிறாள். அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றிய பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்கள். இத்தனை நாள் ஒரு சாதாரண குடும்பத் தலைவியாக இருந்த பிரான்செஸ்கா ராபர்ட்டோடு இருக்கும் தருணங்களில் தன்னை ஒரு விசேஷமான பெண்ணாக உணர்கிறாள். அடுத்த நாளும் ராபர்ட்டை விருந்துக்கு அழைக்கிறாள்.
இவ்வாறாக அவர்களையே அறியாமல் அவர்களுக்குள் காதல் ஊற்றெடுக்கிறது. அந்த 4 நாட்களும் தன் வாழ்க்கையின் ஒட்டுமொத்த சந்தோஷங்களையும் அனுபவிப்பதாக பிரான்செஸ்கா உணர்கிறாள். உன்னைச் சந்திப்பதற்காகவே என் வாழ்க்கையின் இத்தனை நாட்களையும் கழித்தேன் என்று அவளிடம் கூறும் ராபர்ட் அவளைத் தன்னோடு வந்துவிடுமாறு அழைக்கிறான்.
அடுத்த நாள் காலையில் தன்னுடைய உடைகளை எடுத்து பெட்டிக்குள் வைக்கும் பிரான்செஸ்கா தான் ராபர்ட்டோடு சென்று விட்டால் தன் குடும்பத்தின் நிலை என்னவாகும் என்பதை ஒரு கணம் சிந்திக்கிறாள். தன்னால் வர இயலாது என்றும் இந்த நான்கு நாட்களை தன் வாழ்நாள் முழுவதும் நினைத்துக் கொண்டிருப்பேன் என்று ராபர்ட்டிடம் கூறுகிறாள். அவளது நிலையைப் புரிந்து கொள்ளும் ராபர்ட் அங்கிருந்து சென்றுவிடுகிறான். மறுநாள் காலையில் பிரான்செஸ்காவின் கணவர் மற்றும் பிள்ளைகள் வீட்டுக்குத் திரும்பி வருகின்றனர். ராபர்ட்டின் நினைவுகளாலேயே பீடிக்கப்பட்டிருக்கும் பிரான்செஸ்கா மீண்டும் ஒரு சராசரிக் குடும்பத் தலைவியாக மாறுகிறாள்.
அன்று தன் கணவனுடன் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க நகருக்குள் செல்கிறாள் பிரான்செஸ்கா. அவளைக் காரில் இருக்கவைத்து விட்டு அவளது கணவன் மட்டும் பொருட்களை வாங்க உள்ளே செல்கிறார். தூரத்தில் கொட்டும் மழையில் நனைந்தபடி ஒரு உருவம் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதாக உணரும் பிரான்செஸ்கா, அது யாரென்று பார்க்கிறாள். ராபர்ட். அந்த ஊரை விட்டுக் கிளம்புவதற்கு முன் பிரான்செஸ்காவைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறான். அவளைத் தூரத்திலிருந்தே பார்த்துவிட்டு காரை எடுக்கிறான். உணர்ச்சிப் பெருக்கெடுத்து தேம்பி அழுகிறாள் பிரான்செஸ்கா.
சிக்னலில் அவர்களது காருக்கு முன்னால் ராபர்ட்டின் கார் நின்று கொண்டிருக்கிறது. பச்சை சிக்னல் விழுந்தும் அந்த கார் நகரவில்லை. பிரான்செஸ்கா தனக்குக் கொடுத்த ஒரு கழுத்துச் சங்கிலியை எடுத்து காரின் கண்ணாடியில் மாட்டுகிறான் ராபர்ட். இந்தக் காட்சியை தனது காரில் இருந்தபடியே பார்த்து அழும் பிரான்செஸ்காவின் கைகள் தன்னையறியாமல் காரின் கைப்பிடியைத் திறக்கச் செல்கின்றன, திடீரென ராபர்ட்டின் கார் கிளம்புகிறது. பிரான்செஸ்காவின் கார் செல்லும் திசைக்கு எதிர் திசையில் சென்று மறைகிறது. அதுவே ராபர்ட்டை அவள் பார்க்கும் கடைசித் தருணம்.
ப்ரான்செஸ்காவின் கணவர் இறந்த சில நாட்களில் அவளுக்கு ராபர்ட்டின் வக்கீலிடம் இருந்து ராபர்ட் எழுதிய ஒரு கடிதமும் சில பொருட்களும், சில புகைப்படங்களும் வருகின்றன. அதோடு ராபர்ட் இறந்துவிட்டதாக ஒரு குறிப்பும் இணைக்கப்பட்டிருக்கிறது. சில வருடங்களில் பிரான்செஸ்காவும் இறந்து போகிறாள். தன் வாழ்க்கையில் நடந்த அந்த 4 நாட்களையும் பற்றி பிரான்செஸ்கா எழுதிய குறிப்புகளைப் படிக்கும் அவள் பிள்ளைகள், அஸ்தியை அவளது ஆசைப்படி மேடிஸன் கௌண்டியின் ரோஸ்மேன் பாலத்தின் அருகில் கரைக்கின்றனர்.
படம் முழுக்க முழுக்க பிரான்செஸ்காவின் பார்வையிலேயே நமக்குச் சொல்லப்படுகின்றது. அவளது எண்ண ஓட்டங்கள், உணர்வுகள் சரியான முறையில் நமக்குக் கடத்தப்படுகின்றன. பிரான்செஸ்காவாக நடித்திருப்பவர் ஹாலிவுட்டின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான மெரில் ஸ்ட்ரீப். இப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார் ஸ்ட்ரீப். படம் முடிந்தாலும் நம்மால் ப்ரான்செஸ்காவை மறக்கமுடியாது.
அடுத்ததாக க்ளிண்ட் ஈஸ்ட்வுட். இவரது பெயரைக் கேட்டதுமே நமக்கு ஞாபகத்துக்கு வருவது ’கௌபாய்’ தான். நம்மூரில் வெளியான ’ஜக்கம்மா’, ’வேட்டைக்காரன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் படங்களே முன்னோடி. ’இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்’ ஈஸ்ட்வுட்டுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வில்லனான நாசரின் பெயரை ‘கிளிண்ட் கிழக்குக் கட்டை’ என்று வைத்திருப்பார் சிம்புதேவன்.
பெரும்பாலும் அதிரடி ஆக்ஷன் படங்களிலேயே நடித்து வந்த ஈஸ்ட்வுட் தனது வயதான காலத்தில் முழுக்க முழுக்க ஒரு காதல் கதையைத் தேர்ந்தெடுத்து அதை இயக்கி அதில் தானே நடிக்கவும் செய்தார்.
நம் சூழலுக்கு இந்தக் கதையைப் பொருத்திப் பார்ப்பது சாத்தியமா என்று தெரியவில்லை. சற்று பிசகினாலும் கூடா நட்பு என்று சர்ச்சையாகும் கதைக்களம் என்றாலும் படத்தின் இறுதியில் பிரான்செஸ்காவின் அழுகையில் நாமும் பங்கு கொள்வதே இந்தப் படத்தின் வெற்றி.
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago