கிளாசிக் சினிமா: 1- The Shawshank Redemption (1994)

By சல்மான்

”Hope is a good thing, maybe the best of things, and no good thing ever dies”

- Andy Dufresne

ஆண்டு 1947

தனது மனைவி மற்றும் மனைவியின் காதலன் இருவரையும் கொன்றதாக வங்கி ஊழியரான ஆன்டி டுஃப்ரேனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. அவர் ஷஷாங்க் சிறைக்குக் கொண்டுவரப்படுகிறார்.

ஷஷாங்க் சிறை கொடூர மனம் படைத்த அதிகாரிகளும், உள்ளே கொலையே நடந்தாலும் வெளியே தெரியாத கனமான சுவர்களும், அரக்கத்தனமான கைதிகளும் இருக்கும் ஓர் இடம். அங்கே தனது 20 வருடங்களைக் கழித்து விடுதலைக்காகக் காத்திருக்கும் ரெட் என்பவர் ஆன்டிக்கு நண்பனாகிறார்.

சிறைக்கு வெளியே கிடைக்கும் அனைத்து விதமான பொருட்களையும் ரெட்டால் சிறைக்கு உள்ளே கொண்டு வரமுடியும். அது சிகரெட், பீர், பிராந்தி உட்பட எதுவாக இருந்தாலும் சரி.

தனக்கு ஒரு 6 அல்லது 7 இன்ச் நீளமுள்ள ஒரு சிறிய சுத்தியல் வேண்டுமென ரெட்டிடம் ஆன்டி சொல்கிறார். மாட்டிக்கொண்டால் என்னைப் பற்றி எதையும் காவலர்களிடம் சொல்லிவிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் அதற்கு ஒப்புக் கொள்கிறார் ரெட்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு சிறைக்கு அருகில் இருக்கும் ஒரு தொழிற்சாலையின் மேற்கூரையைச் சரிசெய்யும் பணிக்கு ஆன்டி, ரெட் உள்ளிட்ட சில கைதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்தப் பணியின்போது தலைமைக் காவலர் ஒருவர், இறந்துபோன தனது தம்பி விட்டுச் சென்ற 35,000 டாலர்களை செலவு செய்வதில உள்ள சிக்கல்களைப் பற்றி தன் சக காவலர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதை தூரத்திலிருந்து கேட்கும் ஆன்டி அவரிடம் சென்று எந்த வரியும் செலுத்தாமல் அந்த 35,000 டாலர்களை முழுமையாகச் செலவு செய்ய முடியும் என்று அதற்கான சில வழிகளைக் கூறுகிறார். அதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய தான் உதவுவதாகவும் அதற்கு பதிலாக தன்னோடு பணிபுரியும் சக கைதிகளுக்கு ஆளுக்கு 3 பீர் கொடுக்க வேண்டும் என்றும் கேட்கிறார்.

அடுத்த காட்சியில் கைதிகள் அனைவரும் தொழிற்சாலையின் மொட்டைமாடியில் சூரிய ஒளியில் அமர்ந்து பீர் குடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒருநாள் இரவு கைதிகள் அனைவரும் சிறையில் திரைப்படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஆன்டி தனது அறையில் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார். திடீரென்று ஏதோ யோசனை வந்தவராக படம் பார்த்துக் கொண்டிருக்கும் ரெட்டிடம் சென்று தனக்கு 40களில் மிகப்பிரபலாக இருந்த நடிகையான ரீட்டா ஹேவொர்த்தின் போஸ்டர் ஒன்று வேண்டும் எனக் கூறுகிறார்.

கைதிகளின் அறைகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. சிறை அதிகாரி நார்டன் தலைமையில் காவலர்கள் எல்லா அறைகளையும் சோதனை செய்கின்றனர். அவ்வாறு சோதனை செய்யும்போது ஆன்டியின் கையில் பைபிள் இருப்பதை கவனிக்கும் நார்டனுக்கு ஆன்டியின் மீது ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்படுகிறது. அவரது அறையில் ஒட்டப்பட்டிருக்கும் ரீட்டா ஹேவொர்த் போஸ்டருக்கும் அனுமதி அளிக்கிறார்.

சிறையில் நூலகராக இருக்கும் முதியவர் ப்ரூக்ஸுக்கு உதவியாளராக ஆன்டி நியமிக்கப்படுகிறார். இது தவிர சிறை அதிகாரிகளுக்கு வங்கிக் கடன் சிக்கல்களுக்கு உதவுவது, வருமான வரிக்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வது உள்ளிட்ட வேலைகளையும் செய்து அதிகாரிகள் மத்தியில் நல்ல பெயரையும் சம்பாதிக்கிறார். சிறை நூலகத்தைச் செப்பனிட நிதி வேண்டி அரசாங்கத்துக்கு நார்டான் அனுமதியுடன் தொடர்ந்து கடிதங்கள் எழுதுகிறார். நார்டன் உட்பட அனைத்து சிறை அதிகாரிகளுக்கும் வரி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஆன்டி ஆலோசனை கூறுகிறார். கிட்டத்தட்ட அங்கு ஒரு சிறை ஊழியராகவே ஆகிறார் ஆன்டி.

இதற்கிடையில் சிறையில் நூலகராக இருக்கும் ப்ரூக்ஸ் 50 ஆண்டுகள் கழித்து விடுதலையாகிறார். சிறைக்கு வரும்போது ஓரிரண்டு கார்களை மட்டுமே பார்த்தவருக்கு சாலையில் ஒரே நேரத்தில் பல கார்களைப் பார்ப்பது விநோதமாக இருக்கிறது. அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு பலசரக்குக் கடை வேலைக்கு தினமும் செல்கிறார். இரவுகளில் தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறார். ஒருகட்டத்தில் தாக்குப் பிடிக்க முடியாத ப்ரூக்ஸ் சக கைதிகளுக்கு ஒரு கடிதத்தை எழுதிவைத்து விட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார்.

ஆன்டியின் தொடர் கடிதங்களுக்குப் பதிலளிக்கும் அரசாங்கம் சிறை நூலகத்துக்காக சிறிது தொகையையும் நூலத்துக்கான தேவையான பொருட்களையும் அனுப்பி வைக்கிறது. அதில் மொசார்ட்டின் ‘மேரேஜ் ஆஃப் பிகாரா’ இசைத்தட்டு ஒன்று ஆன்டிக்கு கிடைக்கிறது. அதை எடுத்துக் கொண்டு சிறைக் கைதிகளுக்கு அறிவிப்பு செய்யும் இடத்துக்கு செல்லும் ஆன்டி அந்த இசைத்தட்டை ஒலிக்க விடுகிறார். சிறை முழுவதும் மொசார்ட்டின் இசையால் நிரம்புகிறது.

கோபமடையும் சிறை அதிகாரி நார்டன் இரண்டு வாரங்களுக்கு ஆன்டியை அந்தச் சிறிய அறையில் அடைக்க உத்தரவிடுகிறார்.

நாட்கள் உருண்டோடுகின்றன. நார்டன், சிறைக்கு வெளியே நடக்கும் அரசாங்கப் பொதுப்பணித்துறைப் பணிகளுக்காக கைதிகளை வெளியே அனுப்பி அதன் மூலம் ஒரு பெரும் தொகையை ஒப்பந்ததாரர்களிடமிருந்து லஞ்சமாகப் பெற்று வருகிறார். அந்தத் தொகையை ராண்டல் ஸ்டீபன் என்ற இல்லாத ஒரு நபருக்கு அனுப்பி வரி ஏய்ப்பு செய்கிறார். இதற்கு ஆன்டியை பயன்படுத்திக் கொள்கிறார்.

ஆண்டு 1965

ஷஷாங்க் சிறைக்கு அழைத்து வரப்படும் டாமி வில்லியம்ஸ் என்ற இளைஞன் ரெட் மற்றும் ஆன்டிக்கு நண்பனாகிறான். அவனது மேற்படிப்புக்கு ஆன்டி உதவுகிறார். ஒருநாள் இதற்கு முன்னர் தன்னோடு வேறு சிறையிலிருந்த சக கைதி ஒருவனைப் பற்றியும் அவன் ஒரு வங்கி ஊழியரின் மனைவியையும் அவரது காதலனையும் கொன்றதைப் பற்றி தன்னிடம் கூறியதையும் ஆன்டியிடம் கூறுகிறான்.

அதிர்ச்சியின் உச்சிக்குச் செல்லும் ஆன்டி நேராக சிறை அதிகாரி நார்டனிடம் சென்று முறையிடுகிறார். அதை நம்ப மறுக்கும் நார்டன், ஆன்டியை ஒரு மாத காலம் சிறிய அறையில் அடைக்குமாறு காவலர்களுக்கு உத்தரவிடுகிறார். ஆன்டி நிரபராதி என்பதற்கு ஒரே சாட்சியான டாமி வில்லியம்ஸையும் சிறைக்கு வெளியே அழைத்துக் கொல்கிறார்.

ஒருமாதம் கழித்து சிறிய அறையிலிருந்து வெளியே வரும் ஆன்டி, ரெட்டிடம் ஒரு இடத்தின் பெயரைச் சொல்லி இங்கிருந்து விடுதலையானால் அந்த இடத்துக்குச் செல்லுமாறும் அங்கு அவருக்காக ஒரு விஷயம் புதைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார். அங்கு என்ன புதைக்கப்பட்டிருக்கிறது என்று கேட்கும் ரெட்டிடம் எதுவும் கூறாமல் சென்று விடுகிறார் ஆன்டி.

மறுநாள் காலையில் காவலர்களுக்கு அதிர்ச்சி. சிறையிலிருந்த ஆன்டியைக் காணவில்லை. சிறை அறையில் நின்று ஆவேசமாக கத்திக் கொண்டிருக்கும் நார்டன் சிறிய கல்லை எடுத்து கோபத்தில் ரீட்டா ஹேவொர்த்தின் போஸ்டர் மீது வீசுகிறார். அது போஸ்டரை துளைத்துக் கொண்டு உள்ளே செல்கிறது. திகைத்துப் போகும் நார்டன் போஸ்டரைக் கிழித்துப் பார்க்கிறார். போஸ்டருக்குப் பின்னால் சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய துளை இருக்கிறது. நார்டனின் ஷூ மற்றும் உடைகள், வங்கிக் கணக்கு ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு 19 ஆண்டுகளாக சிறிது சிறிதாக போடப்பட்ட அந்த துளையின் வழியே ஆண்டி தப்பித்துச் சென்றிருக்கிறார் ஆன்டி.

வெளியே சென்ற ஆன்டி, நார்டன் பணம் அனுப்பிய வங்கிகளுக்குச் சென்று ராண்டல் ஸ்டீபன் என்ற பெயரில் பணத்தை எடுத்துக் கொள்கிறார். நார்டன் பண மோசடி செய்ததற்கான ஆதாரங்களையும் அரசாங்கத்துக்கும், பத்திரிகைகளுக்கும், அனுப்பி வைக்கிறார். நார்டனைத் தேடி போலீஸார் ஷஷாங்க் சிறைக்கு வருகின்றனர். தான் அவமானப்படுவதை விரும்பாத நார்டன் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து போகிறார்.

40 ஆண்டு தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாகும் ரெட், ஆன்டி கூறிய இடத்துக்குச் சென்று தோண்டிப் பார்க்கிறார். அங்கே ஆன்டியால் எழுதப்பட்ட ஒரு கடிதமும், சிறிதளவு பணமும் இருக்கிறது. கடிதத்தில் குறிப்பிடப்பட்ட இடத்துக்கு செல்லும் ரெட் தன் நண்பனோடு இணைகிறார்.

1982 ஆம் ஆண்டு பிரபல எழுத்தாளர் ஸ்டீபன் கிங் எழுதிய 'Rita Hayworth and Shawshank Redemption’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'The Shawshank Redemption’. இயக்கியவர் ஃப்ராங்க் டெரபாண்ட்.

உலகம் முழுவதும் வெளியாகும் திரைப்படங்களுக்கு மதிப்பீடு வழங்கும் IMDB தளத்தில் இந்தப் படத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் ரேட்டிங் 9.3/10.

இதுவரை உலகம் முழுவதும் வெளியான படங்களில் அதிக முறை பார்க்கப்பட்ட படமும் இதுவே. படம் வெளியான ஆண்டு 1994. ‘ஸ்பீட்’, ’ஃபாரஸ்ட் கம்ப்’, ’தி மாஸ்க்’, ’லயன் கிங்’, ’பல்ப் ஃபிக்‌ஷன்’ போன்ற பெரிய பட்ஜெட் படங்களோடு போட்டிபோட முடியாமல் வசூலில் பின் தங்கியது. வெளியான சமயத்தில் 'The Shawshank Redemption’ வசூலித்த தொகை வெறும் 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள். படத்தின் பட்ஜெட் 25 மில்லியன். படம் தோல்விப் படமாக அறிவிக்கப்பட்டது.

படத்தில் நாயகி இல்லாதது, சிறையைச் சுற்றி மட்டுமே நடக்கும் திரைக்கதை, வாயில் நுழையாத பெயர் என்று தோல்விக்கான பல காரணங்களை பத்திரிகைகள் எழுதின. ஆனால் அடுத்த ஆண்டே அதாவது 1995 ஆம் ஆண்டில் அதிக VHS கேசட்டுகள் விற்பனையான ஒரே திரைப்படமாக 'The Shawshank Redemption’ மாறிப்போனது. பார்த்தவர்கள் திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். அதற்கு முன்பு வரை சிறந்த படமாகக் கொண்டாடப்பட்டு வந்த 'The Godfather' படத்தை பின்னுக்குத் தள்ளி இன்று வரை தலைசிறந்த உலக சினிமாக்களில் ஒன்றாக 'The Shawshank Redemption’ கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆன்டியாக டிம் ராபின்ஸும், ரெட் ஆக மோர்கன் ஃப்ரீமேனும் நடிப்பில் உச்சம் தொட்டிருப்பார்கள். மோர்கன் ஃப்ரீமேனின் பார்வையில்தான் மொத்தப் படமும் நமக்குச் சொல்லப்படுகிறது. படத்தின் ஒவ்வொரு வசனமும் இன்றளவும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவை. அதிலும் க்ளைமாக்ஸுக்கு முன்பான காட்சியில் ரெட்டிடம் ஆன்டி பேசும் வசனங்கள் காலத்தால் அழியாதவை.

ப்ரூக்ஸ், ரெட், நார்டன், டாமி என படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு சிறுகதை போன்றவை. ஆர்ப்பாட்டமில்லாத மனதை வருடும் இசை, நாமும் சிறையிலேயே இருப்பது போன்ற ஒளிப்பதிவு, நடிகர்களின் அற்புதமான நடிப்பு, ஒரு ஆக்‌ஷன் காட்சி கூட இல்லையென்றாலும் விறுவிறுப்பாக எழுதப்பட்ட திரைக்கதை, இவை அனைத்தும் படத்துக்கு மிகப்பெரும் பலமாக அமைந்தன.

விதியின் சோதனைகளுக்கு ஆட்பட்டு வாழ்வின் விளிம்பில் இருப்பவர்களுக்கு 'The Shawshank Redemption’ ஒரு எனர்ஜி டானிக். படத்தின் இறுதியில் ஆன்டி சிறையிலிருந்து தப்பிக்கும்போது நாம் விடும் நிம்மதிப் பெருமூச்சே இப்படத்தின் வெற்றி.

சினிமா ரசிகர்கள், நல்ல படங்களை விரும்புபவர்கள் இந்தப் படத்தை தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்க்கவேண்டும். ஆன்டியும், ரெட்டும் நிச்சயம் உங்களை ஏமாற்றமாட்டார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்