சினிமா பாரடைசோ: மறக்க முடியாத திரையரங்க நினைவுகள்

By பால்நிலவன்

கிராமத்து வாழ்வின் முக்கிய அம்சமாக சினிமா தியேட்டர் நினைவுகளாகவே வந்த முதல் படம் சினிமா பாரடைசோ. இதனைத் தொடர்ந்து நிறைய படங்கள் உருவாக ட்ரெண்ட் செட்டிங் ஆன படம் இது.

ரோம் நகரத்தில் உள்ள சினிமா இயக்குநர் சால்வெடார் டி விடா என்பவரின் வாழ்க்கையிலிருந்து ஆரம்பிக்கிறது இப்படம். அவர் ஒரு நாள் மாலை வீடு திரும்புகிறார். தன்னோடு வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்ணோடு இரவு தூங்குவதற்குத் தயாராகும் அவருக்கு ஒரு மரணச் செய்தி காத்திருக்கிறது. இந்த இயக்குநர் பிறந்துவளர்ந்த ஊரில், ஆல்பெர்ட்டோ என்பவர் இறந்துவிடுகிறார். இச்செய்தியை ஊரிலிருந்து அவருடைய அம்மா தெரிவித்ததாக அவருடன் living together ஆக வாழ்ந்துவரும் பெண் தெரிவிக்கிறாள்.

ஆல்பெர்ட்டோ இறந்ததைக் கேள்வியுற்றதும் ஜன்னலுக்கு நேராக திரும்பிப் படுத்துக்கொள்கிறார் இயக்குநர். அவர் மனம் சொல்லொணா துயரத்தில் ஆழ்கிறது. மங்கிய இருட்டில் படுத்திருக்கும் அவர் முகத்தில் வானிலை காரணமாக ஜன்னல் வழியே தோன்றும் மின்னல் ஒளி வெளிச்சம் பளிச் பளிச் என முகத்தில் தெறிக்கிறது. துக்கம் அவரை வாட்டியெடுக்கிறது.

அப்பெண் கேட்கிறாள். "யார் அந்த ஆல்பெர்ட்டோ?"

அவரால் பதில் பேச முடியவில்லை. ஆனால் அந்த பழைய நினைவுகள் அவரோடு பேசத் துவங்குகின்றன. அதன்மூலம் அவரது சொந்த ஊர் வாழ்க்கையும், அந்த மறக்கமுடியாத இனிய சம்பவங்களும் மெல்ல மெல்ல விரிகின்றன.

இவர், சிறுவயதில் கிராமத்தில் துள்ளித்திரிந்த காலம் அது. அங்கிருந்த சினிமா தியேட்டரின் ஆபரேட்டர்தான் ஆல்பெர்ட்டோ. இவர் சிறுவனாக இருக்கும்போது அவருக்கு உதவியாளனாக பணியாற்றினார். அக்காலங்களில் தியேட்டரில் தனது நண்பர்களுடனும், ஆபரேட்டர் அறையிலிருந்தும் வெள்ளித்திரையில் மின்னிய திரைப்படங்களைப் பார்த்து பரவசப்பட்ட நினைவுகள் இப்படம் முழுவதும் வரிசையாக அணிவகுத்து வருகின்றன.

இப்படத்தின் இயக்குநர் ஜியுசெப்பி டோர்னேடோருக்கு இது இரண்டாவது படம். இவர் 1986ல் திரையுலகில் நுழைந்தார். இவருடைய முதல் படம் புரபொசர் (Professor).

சினிமா பாரடைசோ திரைப்படம் முழுவதும் சால்வெடார் சிறுவனின் கிராமத்து அனுபவங்கள்தான்.

தேவாலயத்தில் பாதிரியார் கடவுளைப் பிரார்த்திக்கும்போது மணியடிக்கும் வேலை இவனுக்கு. ஆனால் தூங்கி வழிவான். பைபிளின் ஒவ்வொரு வாசகத்தை அவர் சொல்லி முடிக்கும்போதும் மணியடிக்கவேண்டும். மணியோசை வராததைக் கண்டு பாதிரியார் திரும்பிப் பார்ப்பார். மண்டியிட்ட நிலையிலேயே இவன் தூங்கி வழிவதைக் கண்டு திட்டுவார்.

மண்டியிட்ட வாக்கில் கன்னத்தில் வைத்தபடி உறங்கும் இவன் கண்ணைத் திறக்காமலேயே மணியை எடுத்து அடித்து அதை கீழே வைத்துவிட்டு மீண்டும் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு உறங்குவான். இதைப் பார்த்து பாதிரியார் கண்டபடி திட்டுவார்.

பிரார்த்தனை நேரம் முடிந்து தப்பித்தால் போதும் என இவன் நேராகப் போகும் இடம் உள்ளூர் தியேட்டர்தான். அங்கு இருக்கும் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஆல்பெர்டோவுக்கு இந்த சின்னஞ்சிறு பையன்தான் தோஸ்து.

தியேட்டரில் புதியதாக வந்திருக்கும் படத்தை ஒருமுறை போட்டுப் பார்த்த தியேட்டர் முதலாளி அப்படத்தில் வரும் முத்தக் காட்சிகளையெல்லாம் முன்பே பார்த்து அதை நீக்குவதற்கு உத்தரவிடுவார். அவர் கையிலிருக்கும் மணியை உயர்த்தி அடிப்பதுதான் உத்தரவு. அப்போது படம் ஆரம்பிக்கும் முன் வெளிச்சத்தை துரத்தி இருளாக்க வேண்டியது இவன் வேலை. தியேட்டரின் வாயில் திரைகளையும் இவன் இறக்குவான்.

உதாரணமாமக வெர்ஸா லா விட்டா என்ற ஜான் ரெனேயின் படங்களில் உள்ள காட்சிகள் திரையில் ஓடும். அதில் காதலனும் காதலியும் வெளியிடம் ஒன்றில் சந்தித்து உணர்ச்சிவயப்பட்டு பேசிக்கொண்டிருப்பார்கள். அதைத் தொடர்ந்து காதலில் மூழ்குவதற்கு ஏதுவாக முத்தக் காட்சி வரும். அப்போது கிண்கிணி என முதலாளி மணியொலிப்பார்.

அப்போது ஆபரேட்டர் கேபின் அறையில் படம் ஓட்டிக்கொண்டிருக்கும் ஆல்பெர்ட்டோ பிலிம் ரீல் இடையில் துண்டுக் காகிதம் ஒன்றை செருகுவார், பின்னர் அந்த இடத்தைக் கண்டறியவும் காட்சியை வெட்டுவதற்கும் ஏதுவாகவும். இதை சிறுவன் அருகிலிருந்து பார்ப்பான்.

பொதுமக்களுக்கான காட்சிநேரத்தில் தியேட்டரில் திரையிடும் தருணம் வரும். மக்கள் வந்து அமர்ந்தபோது இருந்த சலசலப்பு, படம் ஆரம்பித்ததும் அடங்கிவிடும். படக் காட்சிகளுக்கு ஏற்ப அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள்.

சார்லி சாப்ளினின் குத்துச் சண்டை காட்சிகளில் ஒரு பெரிய குண்டு மனிதரை தந்திரமாக வீழ்த்தும் காமெடி காட்சிகளின்போது மக்கள் விழுந்துவிழுந்து சிரிப்பார்கள். கௌபாய் படங்களின்போது குதிரைகளில் வீரர்கள் பாய்ந்துவந்து வாள் வீச்சில் ஆட்களை வீழ்த்தும் காட்சிகளில் மக்கள் வீர உணர்வில் பொங்கி எழுவதும், திகில் காட்சிகளில் பயந்து நடுங்குவதும் பார்வையாளர்களின் பரவசத்தை அற்புதமாக படம்பிடிக்கப்பட்டிருக்கும்.

தியேட்டரில் முத்தக் காட்சி வரும் இடத்தில் குறிப்பிட்ட காட்சி கட் ஆகும்போது தியேட்டரில் உள்ள ரசிகர்கள் ஆரவாரிப்பார்கள். கோபப்பட்டு திட்டுவார்கள். அப்போது சால்வெடார் சிறுவன் மட்டும் கமுக்கமாகச் சிரிப்பான். ஏனென்றால் அங்கிருப்பவர்களில் அவன் மட்டுமே அக்காட்சியை ஏற்கெனவே முழுமையாக பார்த்தவன்.

கோட்டை போன்ற பள்ளிக்கூடத்தில் மணியொலிக்க படிக்கட்டுக்களில் மாணவர்கள் வேகமாக ஓடி வகுப்பறையில் அமர்வார்கள். சற்றே தாமதமாக வந்து அமரும் சால்வெடார் அங்கு தன் நண்பன் டீச்சரிடம் பாடத்திலிருந்து கேட்கப்படும் ஏதோ சில கேள்விகளில் வகையாக மாட்டிக்கொண்டதை கவனிப்பான்.

அவனுக்கு உதவ முயல்வான். இவன் கூறுவதை அவன் தவறாகப் புரிந்துகொண்டு மகிழ்வான். டீச்சரிடம் தான் நினைத்த தப்பான பதிலை சொல்லி அவன் அடிவாங்குவான். உள்ளூர் மாணவர்கள் எழுதும் பொதுத் தேர்வில் இவன் அங்கு பரீட்சை எழுதவந்த ஆபரேட்டருக்கு பிட் கொடுத்து உதவுவது உள்ளிட்ட பலக் காட்சிகளிலும் நகைச்சுவையே பிரதானமாக மிளிரும்.

இரண்டாம் உலகப் போரில் தன் கணவனை இழந்து தனிமையிலேயே இவனை வளர்ப்பவள் இவன் தாய். இவனை மட்டுமல்ல இவன் தங்கையையும் சிரமப்பட்டு வளர்க்கும் தாய்க்கு சில நேரங்களில் நல்ல பிள்ளையாகவும் பல நேரங்களில் தாயின் கோபத்திற்கு ஆளாகும் குறும்புத்தனங்கள் அனைத்தும் பூப்பூவான அலம்பல்.

கிராமத்தில் நிகழும் சவ ஊர்வலத்தில் பங்கேற்றுவிட்டு பாதிரியாரோடு திரும்புவான். அப்போது எதிரே சைக்கிளில் கடந்துசெல்லும் சினிமாக்கொட்டகை ஆபரேட்டர் ஆல்பெர்டோவைப் பார்த்ததும் வயிற்றுவலிபோல வந்ததுபோல் கீழே விழுந்து நடிப்பான். அவரிடமிருந்து தப்பித்து ஆபரேட்டரோடு சைக்கிளில் சந்தோஷமாக செல்வதைப் போன்ற காட்சிகள் யாவும் நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.

சிறுவனாக மட்டுமல்ல, வளரிளம் பையனாக ஆனபிறகு கிடைத்த காதலியின் நினைவுகளும் இயக்குநர் சால்வெடாருக்கு மறக்க முடியாத அனுபவங்கள்தான். தியேட்டரைவிட்டு வெளியே உள்ள சுவற்றில் இங்கிருந்தே படம் காண்பிப்பது, வளரிளம் பையனாக ஆனபிறகு ஒரே படத்தின் பிலிம் ரீல் டப்பாக்களை அடுத்தடுத்த கிராமத்து தியேட்டர்களுக்கு சைக்கிளில் வேகவேகமாக எடுத்துச் செல்வது, அழுத்தமான ஒரு காதல் கதை எனப் பலவும் குறிப்பிடத்தகுந்த முத்திரைப் பதிவுகள். இதில் சினிமா ஆபரேட்டராக நடித்திருந்த பிலிப்பி நொய்ரெட்டின் நடிப்பு உன்னதம் என்று சொல்லலாம்.

சிறுவனாக நடித்த சால்வடோர் காசியோவும் அதே சிறுவன் வளரிளம் பையனாக ஜாக்பூஸ் பெரின், அதே சிறுவன் பக்குவப்பட்ட இளைஞனாக மார்க்கோ லியோனார்டியும் தேவாலயத்தின் உச்சியில் உள்ள மணிதாங்கியிலிருந்து தியேட்டர் உள்ளிட்ட ஊரின் அழகைக் காட்டிய ஒளிப்பதிவாளர் பிளாஸ்கோ கியூராட்டோ, வெவ்வேறு காலகட்ட காட்சிகளை சிறப்பாக தொகுத்தளித்த படத் தொகுப்பாளர் மரியோ மாராவும், மாறும் காலங்களின் மறக்கஇயலாத நினைவுகளைத் தந்த இயக்குநர் ஜியாசெப்பி டெர்னாடோவும், இப்படத்தின் சிறப்புக் காரணிகள். இந்த இத்தாலியப் படத்திற்கு சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்திற்கான ஆஸ்கர் உள்ளிட்ட உலகின் பல விருதுகள் குவிந்தன.

கிட்டத்தட்ட ஜியுசெப்பி டோர்னெடோரின் நினைவுகளாகவே இப்படத்தின் கதையம்சமும் அசைபோடும் நினைவுகளும் அமைந்திருக்கிறது. இத்திரைப்படத்தை மீண்டும் மீண்டும் காண்பவர்களுக்கு அல்லது புதிய பார்வையாளர்கள் காணும்போது தாங்கள் எப்போதோ தியேட்டருக்கு சென்று மனதைப் பறிகொடுத்த நினைவுகள் கண்முன் வந்து நிழலாடும். அவர்களுக்கு மட்டுமல்ல. நமக்கும் தான்.

பழைய தியேட்டர் கலாச்சாரம் என்பது சமீப காலம் வரைகூட உலகச் சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த தியேட்டர்கள் ஒவ்வொன்றும் ஊரின் முக்கிய அடையாளங்களாக பார்க்கப்பட்டன. தியேட்டர்களுக்காகவே கட்டப்பட்ட அந்தக் கட்டிட முகப்புகள் வெகு அழகானவை. என்றாலும், கட்டிடக் கலையின் இன்னொரு அம்சமாகத் திகழ்ந்த அவை காலப்போக்கில் மெல்ல மெலல அருகிவருகின்றன.

இன்னும் சொல்லவேண்டுமெனில் நமது சுகதுக்கங்களில் கலந்துகொண்ட நண்பனைப்போலவும் தியேட்டர்கள் இருந்த காலம் உண்டு. சென்னையில் பல இடங்களில் தியேட்டர் இருந்த இடங்களில் இப்போது அவை இல்லை.

ஆனாலும் அங்கிருக்கும் பேருந்து நிறுத்தங்கள் தியேட்டர்களின் பெயர்களையே தாங்கியுள்ளன, படம்பார்த்து ரசித்த தலைமுறையினரின் நினைவுகளைச் சுமந்தபடி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

25 mins ago

சினிமா

40 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

மேலும்