எ செபரேஷன்: ஒரு படம் 81 விருதுகள்

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

விவாகரத்து கோருகிறது அந்தத் தம்பதி. “பிடிக்கலையா, குடிப்பாரா, கொடுமைப்படுத்துகிறாரா, நடத்தை சரியில்லையா?” என்று கேட்டால் “ இல்லை..இல்லை.. ரொம்ப நல்லவர்! “ என்கிறாள் மனைவி. பின்னே எதற்கு வழக்கு?

“என் மகளுக்கு வெளிநாட்டில்தான் படிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் வெளிநாடு செல்லணும். இவர் தந்தையை விட்டு விட்டு வரத் தயாராக இல்லை. அவருக்கு அல்சைமர் நோய். இவர் மகன் என்று கூட இப்போது அடையாளம் தெரியாது. நான் மகளை அழைத்துப் போகணும். அதனால் விவாகரத்து வேண்டும்”

“அப்பாவை விட முடியாது. விவாகரத்து தருகிறேன். ஆனால் மகள் என்னுடன்தான் இருக்கணும்”

“11 வயது மகள் தந்தையிடம்தான் இருக்கணும். நீயும் குடும்பத்துடன் இரு!” என்கிறது நீதிமன்றம். கோபத்தில் உள்ளூரில் உள்ள அம்மா வீட்டுக்குப் போகிறாள் மனைவி. மகள் தந்தையுடனும் தாத்தாவுடன் தங்குகிறாள்.

பகல் பொழுதில் வயதான தந்தையைப் பார்த்துக்கொள்ள ஒரு பணிப்பெண் அமர்த்தப்படுகிறாள். அவள் கர்ப்பம் தரித்திருக்கிறாள். தன் சிறு மகளுடன் வேலைக்கு வருகிறாள்.

ஒரு முறை வயதானவருக்குச் சிறுநீர் கழிக்க உதவி செய்ய நேர்கிறது. மதம் பற்றிப் பயந்துகொண்டே செய்கிறாள். “அப்பாவிடம் சொல்ல மாட்டேன்” என்று ஆறுதல் சொல்கிறாள் அந்தச் சிறு மகள். தனக்குப் பதில் தன் கணவனை அந்தப் பணிக்கு அமர்த்த முயல்கிறாள். கடன் திருப்பிக்கொடுக்காததால் அவன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைபடுகிறான்.

இடையில் ஒரு மருத்துவ அவசரத்துக்கு அந்தப் பணிப்பெண் பெரியவரைப் படுக்கையில் கட்டிவிட்டு வெளியே சென்று வருவதற்குள் அவர் கீழே விழுந்து அடிபடுகிறார். இதைப் பார்த்த கதாநாயகன் அவளை வேலையை விட்டு விலக்கி வீட்டை விட்டு வெளியே பிடித்துத் தள்ளுகிறான்.

மறுநாள்தான் தெரிகிறது. அவளுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் கிடக்கிறாள் என்று. தாய் வீட்டுக்குச் சென்ற மனைவியையும் கூட்டிக் கொண்டு அங்குச் செல்கிறான். “என் குழந்தையைக் கொன்று விட்டாய்!” என அந்தப் பணிப்பெண்ணின் கணவன் சண்டை போட்டு, வழக்கும் தொடுக்கிறான். அவள் கர்ப்பிணி என்பது தெரியாது என்றும் தான் தள்ளிவிட்டதில் அவளுக்குக் கருச்சிதைவு ஏற்படவில்லை என்றும் வாதிடுகிறான் கதாநாயகன்.

அப்பா பொய் சொல்கிறார் என்று தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகிறாள் மகள். மனைவியும் மீண்டும் இவனையே குறை கூறுகிறாள். குற்றம் நிரூபித்தால் அங்கு 3 வருடங்கள் சிறை. நோய்வாய்ப்பட்ட அப்பாவையும் பூப்பெய்தும் நிலையில் உள்ள மகளையும் ஆதரவின்றி விட முடியாது; அதனால்தான் பொய் சொல்கிறேன் என்கிறான்.

இடையில் மனைவி தரப்பு ஜாமீன் கொடுக்கவும், பணிப்பெண் கணவனுக்கு நஷ்ட ஈடு தரவும் முன்வருகிறது. நீதிதான் வேண்டும்; பணம் வேண்டாம் என்கிறான் அவள் கணவன். பணம் வாங்கினால் தன் குழந்தைக்கு ஏதாவது நேரும் என்று அஞ்சுகிறாள் அந்தப் பணிப்பெண். பணம் தருகிறேன். ஆனால் நான் தள்ளியதால்தான் கருச்சிதைவு என்று குரான் மீது சத்தியம் செய்யக் கேட்கிறான். மறுக்கிறாள் அவள். அல்சைமர் பெரியவர் தன்னை அறியாமல் சாலையைக் கடக்கும்போது அவரைக் காப்பாற்ற ஓடி வந்து ஒரு காரில் முட்டியதுதான் பாதிப்புக்குக் காரணம். முன் பகல் சம்பவத்தை அவள் யாருக்கும் சொல்லவில்லை.

அந்த வழக்கு ரத்தாகிறது. ஆனால் மீண்டும் விவாகரத்து வழக்கு எடுக்கப்படுகிறது. “நீ யாருடன் இருக்க ஆசைப்படுகிறாய்?” என்று நீதிபதி மகளைத் தனிமையில் கேட்கையில். பெற்றோர் வெளியே காத்திருக்கிறார்கள். படம் முடிகிறது.

அஸ்கர் ஃபராதி இயக்கிய இரானிய படம். 2011-ல் வெளியான படம். ஒரு ஆஸ்கர் விருதுடன் மொத்தம் 81 விருதுகளை உலகத் திரைப்பட விழாக்கள் அனைத்திலும் சேர்த்து அள்ளியது இந்தப் படம்.

ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு, வழக்கு நடக்கும் ஒரு அறை, ஒரு மருத்துவமனை அறை, பணிப்பெண் வீடு, பள்ளியின் சாலை முகப்பு என மிகக் குறைவான படப்பிடிப்புத் தளங்கள். இசை, நடனம், பாடல், சண்டை, நகைச்சுவைக் காட்சிகள் எதுவும் கிடையாது. தொலைக்காட்சி படம் போல எல்லாம் அண்மைக் காட்சிகள்.

வேகம் வேகமாக ஓடும் காமரா கதை மாந்தர்களின் தவிப்பைப் பிரதிபலிக்கிறது. மொழி புரியாமல், பாத்திரங்களின் உரையாடலை மொழிபெயர்ப்பு வாக்கியங்களாகப் பார்க்கிறோம் என்பதையும் மறந்து நம்மைக் கதைக்களத்துடன் கட்டிப்போடும் வித்தைதான் படத்தின் வெற்றி.

மகளின் வாழ்க்கைக்கு அக்கறைப்படும் நாயகி, தந்தையின் கடைசிக் காலத்தில் கடமை செய்ய நினைக்கும் நாயகன், பெற்றோர்கள் இணைய விரும்பும் மகள், பொருளாதாரச் சுமைக்காக வேலைக்கு வரும் பணிப்பெண், கருச்சிதைவுக்கு நீதி கேட்கும் அவள் கணவன், ‘என் அம்மா திருடலை’ என்று அம்மாவுக்கு ஆதரவாக இருக்கும் பணிப்பெண்ணின் மகள், நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு இந்த நாடகத்தின் மையப் பொருளாய் நின்றும் அதை அறியாத வயதான பெரியவர் என அனைவர் வாழ்வும் துயர் மிகுந்தவை.

ஆனால் அன்பும் நேர்மையும் மிக்கவர்கள். அடுத்தவர் துயர் துடைக்கவும் தயாராக இருக்கிறார்கள். இயலாமைகள் இருந்தும் இந்த மனிதாபிமானமும் நியாய உணர்வும்தான் இவர்களை வழி நடத்துகின்றன.

மனித வாழ்வின் ஒரு குறுக்கு வெட்டை இந்தப் படத்தில் காண முடிகிறது. அதனால்தான் உலகின் எந்த மொழி பேசும் மனிதனும் இந்தப் படைப்புடன் தொடர்பு கொள்ள முடிகிறது.

இந்தப் படம் ஒரு கனத்த அனுபவம். இது போன்ற எண்ணற்ற அனுபவங்கள் நம்மைச் சூழ்ந்த மனிதர்களின் கதைகளின் உள்ளன. வாழ்க்கையைப் படிக்க யத்தனிக்கும் போது நல்ல படைப்புகள் பிறக்கின்றன. இந்தத் திரைப்படத்தைப் போல!

தொடர்புக்கு: Gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்