திரும்பிப் பார்க்கிறோம் 2018: உலக சினிமாவில் உயரம் தாண்டிய சில படங்கள்...

By பால்நிலவன்

இந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வெவ்வேறு மொழிகளில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தாலும் உலக சினிமா ரசிகர்களை கவர்ந்த படங்கள் என்று சிலவற்றைத்தான் சொல்லமுடியும்.

உலகின் பல்வேறு திரைவிழாக்களில் பங்கேற்று ஏராளமான விருதுகளை பெற்றால்தான் சிறந்த படமா? ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டால்தான் முக்கிய சினிமாவா என்றெல்லாம் ஆதங்கம் எழுகிறது என்றாலும் உலக சினிமா என்ற வரலாற்றுத் தடத்தில் இடம்பெற்ற தகுதிவாய்ந்த புதிய படங்களைப் பற்றி இங்கு பேசித்தான் ஆக வேண்டும்.

முதலில் புகழ்பற்ற இயக்குநர்களின் சில படங்களைப் பார்ப்போம். கொரிய இயக்குநர் கிம் கி டுக், துருக்கிய இயக்குநர் நுூரே பில்கே செலான், ஈரானிய இயக்குநர் ஜாபர் பனாஹி ஆகியோரின் படங்கள் இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தின.

 

கிம் கி டுக்

சமீப வருடங்களாக பலகோடி ரசிகர்களை தன்படங்களைப் பற்றி பேசவைத்த தென்கொரிய இயக்குநர் கிம் கி டுக் இயக்கிய புதிய படம் Human, space, time, time and human. அவரது முந்தைய படங்களுக்கே உண்டான புதுமையும் அதிர்ச்சியும்மிக்க ஒரு வினோதமான கதை இதிலும் உண்டு.

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஒரு போர்க் கப்பலில் பலதரப்பட்ட மக்கள் உல்லாச சுற்றுலா செல்பவர்களின் பயணம் எவ்வளவு  வித்தியாசமாக எதிர்பாராத அனுபவங்கள் உணர்வுகளுக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை ஒரு நவீன ஓவியம்போல கிம் கி டுக் இப்படத்தில் தீட்டிக்காட்டியுள்ளார்.

தனது முந்தைய படங்களுக்கு பெருமளவில் விருதுகளை பெற்றதைப்போல் இப் புதிய படம் விருதுகள் எதையும் பெறவில்லையெனறாலும் கிம் கி டுக் படங்களின் மீதான காதல், அனைத்துலக சினிமா ரசிகர்களுக்கும் இன்னும் ஒரு போதையாகவே இருப்பதைக் காணமுடிகிறது. தொடர்ந்து புதுமைகளை செய்துகொண்டே இருக்கும் கிம்கிடுக் விரைவில் ஹாலிவுட் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.

நூரி பில்கே செலானின்

கேன்ஸ் திரைப்படவிழாவில் பாம் டி ஓர் விருது பெற்ற மிகச் சிறந்த இயக்குநர் நூரி பில்கே செலானின் புதிய படம் The wild pear tree. இவருடைய பழைய படங்களான த்ரி மங்கிஸ், ஒன்ஸ் டைம் ஆப் அனடோலியா, விண்டர் ஸ்லிப்ஸ் போன்றவற்றின் மூலம் மிகவும் தனது வித்தியாசமான ரசிகர்களைத் தக்கவைத்துக் கொண்டவர் இவர்.

'தி வொயில்ட் பியர் ட்ரீ' திரைப்படம் பெரிய அளவில் ஏமாற்றம் தரவில்லை என்றே தோன்றுகிறது. இப்படம், எழுத்தாளராக உருவாக வேண்டும் என்று கனவில்  இருக்கும் இளைஞனைப் பற்றியது. தனது படைப்பை பதிப்பிக்கத் தேவையான பணத்தைத் திரட்ட கடுமையாக உழைக்கிறான். ஆனால் அவனது தந்தை வைத்துவிட்டுப் போன கடன் பிரச்சினைகள் தொடர்கின்றன.

கடன்களை அடைக்க சினான் முயற்சிக்கும் அதே நேரத்தில் தனது விதியும் தனது அப்பாவின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதை சினான் உணர்கிறான்.

மிகச் சிறந்த ஒளிப்பதிவுக் கோணங்களை அபரிதமான நிலப்பரப்பு காட்சிகளைத் தருவதில் இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. இப்படத்திலும் காமிரா அழகுக் காட்சிகள் நம் கண்ணைக் கவர்ந்து இதயத்தைத் தொடுகின்றன.

கிராண்ட் ப்ரீ,  பாம் டி ஓர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படம் இது.

ஜாபர் பனாஹி

உலகத் திரைப்பட பாதையில் ஈரான் தனக்கென்று உருவாக்கிக்கொண்ட இடம் மிகமிக முக்கியமானது.

உலகின் சிறந்த இயக்குநர்களாகவே திகழும் ஈரானிய திரைப்பட இயக்குநர்களான அப்பாஸ் கியராஸ்டமி, மக்மல்பஃப், தாருஹ் மெஹ்ருஜ், மஜீத் மஜீதி போன்றவர்களின் பாதையில் ஒரு புதிய தடத்தைப் பதித்து வருபவர் இயக்குநர் ஜாபர் பனாஹி.

அவர் திரைப்படம் எடுக்க தடை இருப்பதால் ஒரு முழுமையான திரைப்படமாக இல்லாதப் படங்களை ஆவணப் படம்போன்ற படங்களை அவர் இயக்கி வருகிறார்.

பெரும்பாலும் ஒவ்வொரு படத்திலும் அவர் அவராகவே தோன்றுவார். அதில் புனைவுக்கான திரைக்கதை எதுவுமின்றி உண்மைத்தன்மையுடன் காட்சிகள் படமாக்கப்படும். இத்தகைய அவரது பல படங்களுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதில் துரதிஷ்டம் என்னவெனில் அவருக்கு விருதுகள் கிடைத்தால் அதை எந்த நாட்டுக்கும் சென்று அதை பெற முடியாது. அவருக்கு வெளிநாட்டுக்கு செல்ல தடை உள்ளது.

படங்களைத் திரையிடவும் விருதுகள் பெறவும் அவரது பிரதிநிதிகளே செல்கிறார்கள். அத்தகைய ஒரு  பாணியில் வெளிவந்திருப்பதுதான் ''த்ரீ ஃபேசஸ்'' திரைப்படம்.

3 faces

நடிப்பின்மீது ஆர்வம்கொண்டு டெஹ்ரான் நாடகப் பள்ளியில் பயிலும் ஒரு இளம்பெண்ணை, அவருடைய குடும்பத்தினர் அழைத்துக் கொண்டுபோய்  விடுகின்றனர். அந்தப் பெண் உதவி கேட்டு அழும் வீடியோவைப் பார்க்கிறார் பெஹ்னஸ் ஜஃபரி. அந்தப் பெண்ணுக்கு உதவி செய்வதற்காக, படப்பிடிப்பை நிறுத்திவிட்டு இயக்குநர் ஜாஃபர் பனாஹியுடன் கிளம்புகிறார் பெஹ்னஸ்.

வடமேற்கிலுள்ள கிராமத்துக்கு காரில் பயணம் செய்து, அந்த இளம்பெண்ணின் மலைக்கிராம மக்களைச் சந்தித்துப் பேசுகின்றனர். பழங்கால மரபுகள் இன்னும் கடினமாகிவிட்டன என்பதை அந்தப் பயணத்தின் மூலம் இருவரும் உணர்ந்து கொள்கின்றனர்.

அண்டால்யா கோல்டன் ஆரஞ்சு திரைவிழாவில் இப்படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதை இயக்குநர் ஜாபர் பனாஹி பெற்றுள்ளார். 4 விருதுகள் 5 பரிந்துரைகளைப் பெற்ற படம் இது.

விருதுகளை அள்ளிக்குவித்த 'தி ஹெய்ரெஸஸ்' (The Heiresses)

பூமிப்பந்தின் எங்கோ ஒரு மூலையில் தென்அமெரிக்க கண்டத்தின் கீழ்ப்பகுதியில் உள்ளது பராகுவே.

வரைபடத்தில் பொலிவியாவுக்கும் சிலிக்கும் பொதுவான இடத்தில், அவற்றின் அருகிலேயே தொற்றிக்கொண்டு நிற்கட்டுமா போகட்டுமா என்றிருக்கும் அந்த நாட்டிலிருந்து வந்த ஒரு படம்தான் 'தி ஹெய்ரெஸஸ்'

உலகின் பல நாட்டு திரைவிழாக்களுக்கும் சென்று 31 விருதுகளையும் 25 பரிந்துரைகளையும் பெற்று திரும்பியிருக்கிறது.

இப்படத்தின் இயக்குர் மெர்செல்லோ மார்டினிஸி லண்டன் பிலிம் ஸ்கூலில் படித்தவர். இவரது படங்கள் நினைவுகள், அடையாளம் மனித உரிமை ஆகியவற்றை கலவையாகக் கொண்டிருக்கும்.

இப்படமும் குடும்பத்திலிருந்து தனியே பிரிந்திருக்கும் 60 வயதைக் கடந்த இரு பெண்களின் அடையாளச் சிக்கலை அவர்களது நினைவுகளைப் பேசுகிறது.  தங்களுடைய பணக்கார குடும்பங்களிலிருந்து பிரிந்து 30 ஆண்டுகளாக அவர்கள் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் இருவருக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படவே, தங்களுடைய உடைமைகளை இழக்க ஆரம்பிக்கின்றனர். கடன் காரணமாக, இருவரில் ஒரு பெண் மோசடி புகாரில் சிறைக்கு செல்ல நேரிடுகிறது. அதன்பிறகு, மற்றொரு பெண் அங்குள்ள பணக்கார வயதான பெண்களுக்கு டாக்ஸி ஓட்டி வருமானம் ஈட்டுகிறார்.

பல ஆண்டுகளாக தன் தோழியின் அரவணைப்பிலும் ஆதரவிலும் இருந்த அவர், புதிய மனிதர்களுடன் பழகுவதன் மூலம் தன்னையே கண்டுணர்கிறார். சிறந்த திரைப்படத்திற்கான விருதை உலகெங்கிலும் பல்வேறு திரைவிழாக்களில் அள்ளிக் குவித்த படம்.

விருதுகள் பெற்றால்தான் முக்கியமான படமா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. விருதுகள் பெறாமலேயே நல்ல படங்கள் நிறைய வந்துள்ளன. ஆனால் விருதுகள் பெறும்போதுதான் ஒரு படம் உலகின் கவனத்தை தன்வசம் திருப்புகிறது. அத்தகைய சீரிய உத்திகளையும் மிகுந்த பொறுப்புணர்வோடும் சுவாரஸ்யத்தோடும் ஒரு திரைப்படம் தனக்குள் கொண்டிருக்க வேண்டும். ''தி ஹெரஸஸ்ஸஸ்'' அந்த இலக்கணத்திற்கு தகுதிவாய்ந்த ஒரு படைப்பே.

ஆஸ்கர் போட்டிக்குச் செல்லும் Yomeddine

சினிமா உலகின் பெருமைக்குரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும்போதும் ஒரு படம் உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறது.

“யோமிடைன்” என்பது அரபி மொழியில் தீர்ப்பு வழங்கப்படும் நாள் என்று பொருள். கதையின் நாயகன் பெயர் பேஸ்ஹே. எகிப்து நாட்டில் நடக்கும் கதையாகும்.

பேஸ்ஹே தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர். சிறுவயதில் இருந்தே தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழும் பகுதியில் பேஸ்ஹே இருந்தவர்.

தனது மனைவி மறைவுக்குப்பின் அந்த இடத்தில் வாழ பேஸ்ஹேவுக்கு பிடிக்கவில்லை, இழந்த தனது குடும்பத்தினரை சந்திக்கப் புறப்படுகிறார். ஒரு கழுதை  பூட்டப்பட்ட வண்டியில் தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு வேறு இடம் நோக்கி முதல்முறையாக புறப்படுகிறார். அப்போது ஒபாமா என்ற ஆதரவற்றச்  சிறுவன் பேஸ்ஹேவுடன் சேர்கிறான். இருவருக்கும் இடையே உருவாகும் நட்பும், அதன்பின் பேஸ்ஹே தனது குடும்பத்தினரை தேடிக் கண்டுபிடித்தாரா என்பதுதான் மீதமுள்ள கதையாகும்.

எகிப்து நாட்டின் பாலைவன, வெயில், பிரமீடுகள், மக்களின் வாழ்க்கை முறை தெளிவாகத் தரப்பட்டுள்ளது. குறிப்பாக  தொழுநோயால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவரை உண்மையாக நடிக்க வைத்திருப்பது Yomeddine படத்தின் சிறப்பாகும்.

வாழ்வின் சிடுக்குளையும் வலிகளையும் உள்வாங்கிய மனிதனின் வாழ்க்கையை, காலம் வழங்கிய அருவருப்பான தோற்றத்தை ஏற்றுக்கொள்ள நேர்ந்த ஒரு மனிதனின் கதை இது.

அலாதியாக உலகை ரசித்தபடியே, மற்றவர்களுக்கு நம்பிக்கையை விதைத்தபடி நடைபோடும் ஒரு நாடோடி வாழ்க்கையை உள்ளார்ந்த மனித உணர்வுகளோடும் துணிச்சலோடும் சொன்ன படம் என்பதால், திரையிட்ட சர்வதேச திரைவிழாக்கள் எங்கும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை இப்படம் பெற்று வருகிறது.

இப்படம் ஆஸ்கர் விருதுக்காக சிறந்த வெளிநாட்டு படப் பிரிவில் போட்டியில் பங்கேற்றுள்ளது. கேன்ஸ் திரைவிழாவிலும் சிறந்த படத்திற்கான 'பாம் டி ஓர்' விருதுதேர்வு பட்டியலில் இடம்பிடித்தது.

 

 

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

52 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

மேலும்