In Times of Rain | Dir: Itandehui Jansen | Mexico | 2018 | 89'| Glimpses from Mexico | 6 Degrees | 9.15 AM - இன் டைம்ஸ் ஆப் ரெய்ன் திரைப்படமானது குழந்தையிலேயே தாயைப் பிரிந்த சிறுவனைப் பற்றி பேசுகிறது. பாரம்பரிய முறையில் ஊர் மக்களுக்கு குணப்படுத்தும் முறையில் ஈடுபடுபவரான சோலேடாட் ஒரு பழங்குடி கிராமத்தில் வசித்து வரும் பெண்மணி. அவரது மகள் அடிலே ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்த கையோடு பொருளாதார தேவைக்காக மெக்ஸிகோ நகரத்தை நோக்கி இடம்பெயர்ந்துவிடுகிறாள். குழந்தை ஜோஸ் பெரியவரிடத்தில் வளர்ந்தாலும் தாயின் ஏக்கம் சிறுவனை வாட்டுகிறது. தாயைக் காண சிறுவன் தவிக்கும்போது எதிர்பாராத சில சம்பவங்களும் நடக்கிறது. அடிலே திருமணம செய்துகொள்ளப்போவதாக தகவல் ஒன்றையும் சோலேடாட் பெறுகிறார். சிறுவனின் நிச்சயமற்ற எதிர்காலத்தை நினைத்து பாட்டி வேதனை அடைகிறாள். தன் மனவேதனையை சமாளிக்க போராடுகிறார். எனினும் மகள் வருவாள் என காத்திருக்கிறார்.
''மெக்சிகோவிலிருந்து நெதர்லாந்திற்கு சிறு வயதிலேயே குடிபெயர்ந்த நான், சமூகத்தை விட்டு வெளியேறவிருக்கும் ஒரு குழந்தையின் பார்வையில் ஒரு திரைப்படத்தை உருவாக்க விரும்பினேன். டைம்ஸ் ஆஃப் ரெயின் என்பது எழுத்தாளரின் அனுபவங்கள், என்னுடைய சொந்த அனுபவங்கள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் எங்களுடன் தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்ட பலரது அனுபவங்களால் ஈர்க்கப்பட்ட கதைகளின் ஒட்டுவேலையாகும்.'' என்கிறார் இப்படத்தின் இயக்குநரும் ஸ்காட்லாந்து ஸ்கிரீன் அகாடமி கல்லூரியின் இணைப் பேராசிரியையுமான ஐதாண்டேஹுய் ஜான்சன். கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புற மெக்ஸிகோவுக்கு பொருளாதாரக் காரணமாக இடப்பெயர்வுகள் சர்வசாதாரணமாக நிகழ்வதையும் இப்படம் ஒரு பிரச்சினையாக பேசுகிறது. இத்திரைவிழாவில் கிளிம்சஸ் பிரம் மெக்ஸிகோ என்ற தலைப்பில் பல்வேறு அரங்கங்களில் திரையிடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Bauryna Salu (Bauryna Salu) | Dir: Askat Kuchinchirekov | kazakhstan | 2023 | 106' | WC | Seasons | 11.15 PM - கஜகஸ்தான் நாட்டினில் எங்கோ ஒரு கிராமம். இங்கு மிகக் குறைந்த மக்கள் சமுதாயத்தில் கட்டுப்பாடு மிக்க பாரம்பரிய வாழ்க்கை முறைகள் மட்டும் ஏராளம். அப்படியொரு வாழ்க்கையை இத்திரைப்படம் பேசுகிறது. இப்படத்தின் பெயரான பௌரினா சாலு பழைய நாடோடி இனக்குழுவில் பிறந்தவன் யெர்சுல்தான். ஆனால் அவன் பிறந்த உடனே அவனது பாட்டியிடம் வளர்க்க ஒப்படைக்கப்பட்டுவிடுகிறான். 12 வயது வரை உப்புச்சுரங்கத்திலும் வயல்வேலைகளிலும் ஈடுபட்டு வந்த யெர்சுல்தான் திடீரென பாட்டி இறந்துவிட அவன் இப்போது தனது முன்பின் அறிமுகமில்லாத தாய் தந்தையரிடம் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
» பூமிக்கு அடியில் குகை அமைத்து ‘ரூட் நம்பர் 17’ படப்பிடிப்பு
» தாயின் மடியில்: எம்.ஜி.ஆர், சரோஜாதேவியின் பொய்க்கால் குதிரை நடனம்
இப்படம் எடுக்கக் காரணம் என்ன என்பதை இயக்குநர் குச்சிஞ்சிரெகோவ் கூறுகையில், “நான் ஒரு வயதுக்கு மேல் இருக்கும் போது என் தந்தையின் பெற்றோருக்குக் கொடுக்கப்பட்டேன். முதலில் எனது தாயார் தயங்கினார். என்னை பார்க்க வந்த கிராமத்து பெரியவர்கள் பௌரினா சலு இன வழக்கத்தை அதாவது, முதலில் பிறந்த குழந்தையை நெருங்கிய உறவினருக்குக் கொடுப்பது ஓரளவுக்கு வழக்கமாக உள்ளது தெரிவித்தனர். எனது தாத்தா என்னை அதன்பிறகு அவரது கிராமத்திற்கு அழைத்துச் சென்றார். எனக்கு 16 வயதாக இருந்தபோது நான் முதல் முறையாக என் பெற்றோரிடம் சென்றேன். என் தாத்தா இறந்துவிட்டார், என் பாட்டி நகரத்திற்குச் செல்லும்போது நான் தற்காலிகமாக அவளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அந்த சில வாரங்கள் என் வாழ்க்கையில் மிகவும் வேதனையானவை. இது ஒரு நீண்ட விருந்தினர் வருகை போல் உணர்ந்தேன். அதிர்ஷ்டவசமாக, நாங்கள் விரைவில் என் பாட்டியுடன் மீண்டும் இணைந்தோம், அவள் இறக்கும் வரை ஒன்றாக இருந்தோம். எனக்கும் என் மனைவிக்கும் அடுத்தபடியாக எனக்கு மிகவும் பிடித்த நபர் இறந்துவிட்டார்'' என்றார்.
யெல்சுல்தானாக தோன்றி மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ள அஸ்கட் குச்சிஞ்சிரெகோவ் நடிப்பு இப்படத்தின் உயிர்நாடியென போற்றப்படுகிறது. கஜகஸ்தான், கிர்கிஸ்தான் போன்ற மேய்ச்சல் நிலங்கள் மலிந்த கஜகஸ்தானின் புல்லடர்ந்த மலைவெளிகளை, பரந்துவிரிந்த வயல்வெளிகளை, பனிபடர்ந்த பாறைகளின் அழகை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சானர்பெக் எல்லுவபெக்.
Embryo Larva Butterfly (Son Hasat) | Dir: Kyros papavassou | Grece, Cyprus | 2023 | 91' | WC | Santham | 5.00 PM - காலப்பயணம் பற்றிய திரைப்படங்கள் மிகுந்த வியப்பை அளிப்பவை... இதை ஒரு பரிசோதனையாக செய்துபார்த்த காலம் போய், இப்போது வெகுஜன திரைப்பட துறையிலேயே இன்னொரு அங்கமாக மாறியுள்ளது. கிரீஸ்-சைப்ரஸ் திரைப்படமான 'எம்பிர்யோ லார்வா பட்டர்பிளை' காதலர்கள் இருவர் பற்றிய கதை. வேறு வேறு காலகட்டங்களில் அவர்கள் என்னவாக இருக்கிறார்கள் இருந்திருந்திருக்கிறார்கள் இருப்பார்கள் என்பதை முன்னுக்கு பின் மாற்றி குழப்பியடிக்கப்பட்டுள்ள கதை.
கிரீக்-சைப்ரஸ் இயக்குநர் கைரோஸ் பாப்பாவாசிலியோ தனது முதல் திரைப்படம் 'இம்ப்ரெஷன்ஸ் ஆஃப் எ ட்ரூன்டு மேன்' மூலம் கடந்த கால நினைவுகள் இல்லாத ஒரு மனிதன் தனது எப்போதோ எழுதிய கவிதைகள் நிரம்பிய நோட்புக் மூலம் நினைவுத் துண்டுகளை சிதறலாய் உணரமுடிவதை முதன்முதலில் ஒரு காலப்பயணக் கதையை சொல்லி தனது முத்திரையைப் பதித்தார். நவீன உலகை விரும்பும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தின் உந்துதலில் மீண்டும் எட்டு ஆண்டுகளுக்குப் பின் இன்னுமொரு சுவாரஸ்யமான கதையோடு களம் இறங்கியுள்ளார்.
இந்த கலைத்துப்போட்ட காதல் டிராமாவில் இன்று காதலர்களாக இருக்கும் உலகில் வாழும் பெனிலோப் இசிடோரோஸ் அடுத்தநாளே தூங்கியெழுந்திருக்கும்போது மீண்டும் அவர்கள் சந்தித்துக்கொண்டபோதும் ஒருவரையொருவர் அறிந்திராத ஒரு பழைய நாளின் பிரதிகளாக தோன்றுகிறார்கள்... இன்னொரு நாள் எதிர்காலத்தின் தோராயமான ஒரு வயதான தோற்றத்தில் விவாகரத்து பெறற நிலையில் வேறுவேறு பாதையில் செல்கிறார்கள்... வாழ்க்கையில் நமக்கு நேரும் சில பிரச்சினைகளுக்கு நாம் பலமுறை யோசித்தபிறகுதான் அதற்கு காரணம் என்ன என்பது தெரியவருவதுபோல டைம்டிராவல் பல புதிர்களை அவிழ்க்க உதவும் ஒரு சிறந்த திரைப்பிரதியாக திகழ்கிறது.
La Chimera ((La Chimera) ) | Dir: Alice Rohrwacher | Italy, France, Switzerland | 2023 | 130' | WC | Santham | 7.15 PM - இத்தாலியில் 80களில் நடக்கும் கதையான 'லா சிமெரா'வும் பரிசோதனை முயற்சி படம்தான். இது காட்சிகளின் வேறுபட்ட கலவைகளை நமக்குத் தருகிறது. வேறுபட்ட உலகங்களை, மனிதர்களை, காலங்களை ஒன்றாக இணைத்துப் பார்ப்பதில் ஒரு புதுவிதமான கலை வடிவத்திற்கு முயற்சி செய்திருக்கிறார் இத்தாலிய பெண் இயக்குநர் அலிஸ் ரோச்ர்ச்சர். இப்படத்தில் மெல்லிசையும் ஓபரா இசையும் வெவ்வேறு சூழ்நிலைகளில் கிராமிய காட்சிகளோடு இசைந்து பயணிக்கிறது.
சிறையிலிருந்து விடுவிக்கப்படும் ஆர்தர் ஓர் இளம் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர். டஸ்கனி மாகாணத்தின் ரிபெர்பெல்லா என்ற கிராமத்தை நோக்கி வருகிறான். தன் காதலியின் சோகமான நினைவுகளின் ஊடே அங்குள்ள கிராமத்தில் சிறு குடிசையில் தங்கி சில ஆய்வுகளை மேற்கொள்கிறான். உண்மையில் பூமிக்கடியில் அவனுடைய ஆய்வு நேர்மையான ஆய்வு அல்ல... நாடோடி கல்லறைக் கொள்ளையர்களுடன் தொடர்பில் இருக்கும் அவன் செய்வது ஒரு வகை திருட்டுதான். பூமிக்கடியில் புதையுண்டிருக்கும் பழங்காலப் பொருட்களை தனது டவுசிங் கம்பியைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கிறான். அதை ரகசியமாக தோண்டியெடுப்பதுதான் அவன் வேலை. அந்தப் பொருட்களை வெளியாட்களுக்கு விற்கிறான். உள்ளூர் மக்கள் அவனிடம் மிகவும் அன்பாக இருக்கிறான்.
தனிமையில் வாழும் அவனை பழைய நினைவுகள் இடைஇடையே கனவுகளைப் போல வந்து போகிறது... அது அவனின் இழந்த காதலியின் நினைவுக்காட்சிகள். மக்களும் அவனை இங்கிலிஷ்காரரே என அழைத்து நட்புடன் இருக்கிறார்கள். அவனது திரைமறைவு வேலைகளைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. அவனுடன் எல்லோரும் மிகச்சிறந்த அன்புறவை பேணுகிறார்கள்..அவன் பழைய சோகங்களிலிருந்து மீளத் தொடங்குகிறான்.
முக்கிய செய்திகள்
சினிமா
22 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago