CIFF 2023 | ‘தி ஒர்ஸ்ட்’ முதல் ‘அனதர் கன்ட்ரி’ வரை: டிச.17-ல் என்ன படம் பார்க்கலாம்? - பரிந்துரைப் பட்டியல்

By பால்நிலவன்

1. The Worst Ones (Les Pirase) | Dir: Lise Akoka Romane Gueret | France | 2022 | 99' | Santham | 9.30 AM - ஒரு திரைப்பட இயக்குநர் கோடை விடுமுறையின்போது வடக்கு பிரான்ஸில் உள்ள பிகாஸோ நகரில் ஒரு படப்பிடிப்புப் பணிகளை தொடங்குகிறார். இதில் தொழில்முறை அல்லாத நடிகர்கள் பங்கேற்றால் நன்றாக இருக்கும் என கருதுகிறார். கோடை விடுமுறையில் விளையாடிக்கொண்டிருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிறார்களையே தேர்ந்தெடுக்கறார். தனது கதாபாத்திரங்களாக சரியான ஆட்களை அல்ல; கவனப் பற்றாக்குறை, அதீத செயல்தன்மைகளால் பாதிக்கப்பட்டவர்கள், வளர்ப்புக் குழந்தைகள், வீட்டை விட்டு வெளியேறிய பையன்கள்... என ஏதேதோ போதாமையில் தவிக்கும் மாணவர்களையே அவர் தனது படப்பிடிப்புக்கு அழைத்துக்கொள்கிறார். அவர்களில் முறையே லில்லி, மேலிஸ், ஜெஸ்ஸி மற்றும் ரியான் ஆகிய இரண்டு பெண்களையும் இரண்டு ஆண் குழந்தைகளையும் தேர்வு செய்கிறார்.

இயக்குநர் இப்படி குறைபாடு உடையவர்களாகப் பார்த்து தேர்ந்தெடுத்தது நடிக்கவைத்து படப்பிடிப்பு நடத்துவது சரியில்லைய என உள்ளூர்வாசிகள் நினைக்கிறார்கள். அவர் ஏன்த இப்படி "மோசமானவற்றை" தேர்ந்தெடுத்தார்? இதுதான் உள்ளூர் அமைப்புகளின் கேள்வியாகவும் கவலையாகவும் இருக்கிறது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள், விதிவிலக்கானவர்களின் நிஜமான வாழ்க்கையிலிருந்தே கதைப்போக்குகளை உருவாக்கிக்கொண்டு காட்சிப்படுத்துவதில் உண்மையான உணர்ச்சி இருப்பதை காண்கிறார். தனது திரைப்படத்திற்கான காட்சியமைப்புகள் எதிர்பார்த்ததைவிட மிக நன்றாகவே பொருந்திவிட்டது என மகிழ்கிறார். இதனால் ''இவர்கள் சரியில்லை'' என்ற மற்றவர்கள் பார்வைக்கு கிடைத்த பிம்பம் உடைகிறது. குறைபாடுகள் கொண்ட மாணவர்கள் என கூறப்பட்டவர்கள் எவ்வளவு தீர்க்கமாக தங்கள் பங்களிப்பை செய்கிறார்கள் என்பதும் புலப்படுகிறது. கேன்ஸ் விழாவில் பாம் டி ஓர் விருது பிரிவுக்கு இணையாகக் கருதப்படும் 'அன் சர்ட்டெய்ன் ரிக்கார்டு' பிரிவில் பிரிக்ஸ் விருது பெற்ற திரைப்படம்.

2. The Palace (The Palace) | Dir: Roman Polanski | Italy, Switzerland, Poland, France | 2023 | 100' | Santham | 11.40 AM - இரண்டாம் உலகப்போரின் உக்கிரத்தை அதன் இடிபாடுகளை பியானிஸ்ட் திரைப்படம் மூலம் நம் கண் கொண்டுவந்த இயக்குநர் ரோமன் போலன்ஸ்கியை அவ்வளவு எளிதில் நாம் மறந்துவிடமுடியாது. 1933ல் பிறந்த ரோமன்ஸ் போலன்ஸ்கி தனது 89 வயதிலும் தி பேலஸ் என்ற ஒரு நகைச்சுவையான படம் ஒன்றை இந்த ஆண்டு அளித்துள்ளார். 1962 லிருந்து இந்த ஆண்டு வரை அவர் எடுத்தது மொத்தமே 23 படங்கள்தான். ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் தனது திரைச் சித்திரத்தை சினிமா வரலாற்றின் மைல்கல்லின் முத்திரையாக பதிப்பவராகத் திகழ்கிறார். இடைப்பட்ட வாழ்க்கையில் வலிமிகுந்த சில சர்ச்சைகள், சறுக்கல்கள்... நாடு கடந்த வாழ்க்கை என அலைபாய்ந்த வாழ்க்கைப் பின்புலம் அவருடையது.

போலன்ஸ்கியின் முழுப்பெயர் 'ரேமாண்ட் ரோமன் தியெரி போலன்ஸ்கி' என்பதாகும். ஒரு பிரெஞ்சு மற்றும் போலந்து திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர் ஆவார். அகாடமி விருது, இரண்டு பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள், பத்து சீசர் விருதுகள், இரண்டு கோல்டன் குளோப் விருதுகள், அத்துடன் கோல்டன் பியர் மற்றும் பால்ம் டி'ஓர் உள்ளிட்ட பல விருதுகள், பாராட்டுகளைப் பெற்றவர். பியானிஸ்ட் திரைப்படத்திற்கு முன்னதாக 1962களில் அவர் கொடுத்த நைப் இன் த வாட்டர் திரைப்படம் ஆண் பெண் உறவு சிக்கலில் எழும் உளவியல் மாறாட்டங்களை சைகாலஜிக்கல் த்ரில்லர் வகையில் உலக திரைப்பட வரலாற்றில் தனி இடம் பிடித்தது.

உலகின் மிகப்பெரிய திரைப்பட இயக்குநர்கள் புதுப்புது ஜானர்களில் தடம்பதிப்பதில் வல்லவர்கள். 'தி பேலஸ்' திரைப்படத்தில் ஒரு புத்தாண்டு இரவை எதிர்கொள்ளும் ஒரு ஆடம்பரமான சுவிஸ் ஹோட்டல் ஒன்றில் சங்கமித்திருக்கும் பல்வேறு விருந்தினர்களின் கொண்டாட்டத்தை காட்சிப்படுத்தியுள்ளார். ஆனால் கொண்டாட்டத்திற்கு பின்னுள்ள உழைப்பின் ஆதாரமாக திகழும் ஹோட்டல் தொழிலாளர்களின் வாழ்க்கையை அழுத்தமாக பேசியுள்ளார் என்பதுதான் இப்படத்தின் சிறப்பு.

3. Harvest Moon (Ergej irekhgüi namar) | Dir: Amarsaikhan Baljinnyam | Mongolia | 2022 | 90' | Serene | 4.45 AM - உலகின் மிகப்பெரிய ஸ்டெஃபி வெளியாகத் திகழும் மங்கோலிய மேய்ச்சல் நிலத்தைக் காண 'ஹார்வெஸ்ட் மூன்' திரைப்படம் ஓர் அற்புதமான வாய்ப்பு. மங்கோலியாவில் மிகப்பெரிய திரைப்படத் தொழில் என்றெல்லாம் எதுவும் இல்லை. அங்கு வருடத்திற்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு மிகவும் குறைவான படங்களே எடுக்கிறார்கள். ஆனாலும் அப்படி எடுக்கப்படும் படங்கள் தங்கள் நிலத்தின் அழகை, கால்நடை வளர்ப்பை, மனித மதிப்புகளை அழியாத ஓவியங்களாக படைத்துத் தந்துவிடுகிறார்கள். 'ஹார்வெஸ்ட் மூன்' திரைப்படம் நகரிலிருந்து கிராமத்திற்கு தனது தாயின் வழி மாற்றாந்தந்தையைக் காண வரும் துல்கா என்ற இளைஞனைப் பற்றி பேசுகிறது. கிராமத்திற்கு வந்த இளைஞன் தந்தையின் கால்நடைகளை மேய்ப்பதிலிருந்து கிராம நிலவியலோடு தன்னை பொருத்திக்கொள்கிறான். ஒரு நாள் மாலை, துல்கா தனது செல்போனில் வந்த மிஸ்டு கால்களை தாமதமாகப் பார்க்கிறான். ஒன்று துல்கா தந்தையாகிவிட்டதாக அறிவிக்கும் ஒரு பெண்ணிடம் இருந்து. மற்றொன்று அவரது மாற்றாந்தந்தையின் நண்பர்களில் ஒருவரிடமிருந்து, அவரது தந்தை தனது கடைசி நாட்களில் வாழ்கிறார் என்று அவனுக்குத் தெரிவிக்கிறார்.

அங்கு குதிரையில் சுற்றித் திரியும் 10 வயது சிறுவன் ஒருவன் முதலில் சண்டையில் ஆரம்பித்து பிறகு இளைஞன் துல்கா வுடன் நட்பாகிறான். அவனே அவனுக்கு கிராமத்தின் பல்வேறு அனுபவங்களைப் பெற உற்ற துணையாகிறான். சில நாட்களில் உடல்நலமில்லாத துல்காவின் மாற்றாந்தந்தை இறக்கும் தருவாயில் அவரது வயல்களை பார்த்துக்கொள்வதாக துல்கா ஒப்புதல் அளிக்கிறான். சொந்த ஊருக்கு சென்று தனது குழந்தையை காணத்துடிக்கும் துல்காவிற்கு இப்போது புதிய சில கடமைகளும் சேர்ந்துவிட்டன. ஒரு அறுவடையை எதிர்நோக்கியிருக்கும் நேரத்தில் இன்னும் சில பிரச்சினைகளையும் அவன் எதிர்நோக்க தயாராகிறான். மங்கோலியாவின் சார்பாக சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான 2023 ஆஸ்கருக்கு சமர்ப்பிக்கப்பட்ட படம் இது.

4. 20000 Spieces of Bees | Dir: Estibaliz Urresola Solaguren | Spain | 2023 | 128' | Seasons | 11.30 AM - 73வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் பியர் போட்டிக்காக இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது, இப்படத்தில் லூசியா பாத்திரத்தை ஏற்ற ஒன்பது வயது சோபியா ஓட்டேரோ சிறந்த முன்னணி நடிப்பிற்காக வெள்ளி கரடியை வென்றார். தனது முதல் படத்திலேயே துணிச்சலாக ஒரு சிறு பெண்ணின் வாயிலாக மூன்றாம்பாலினத்தவரின் வலிகளை யாவரும் ஏற்றுக்கொள்ளும்விதமாக படைத்துள்ளார் ஸ்பானிய பெண் இயக்குநரான எஸ்டிபாலிஸ் உர்ரெசோலா சோடாகுரென்.

எஸ்பாடிலிஸ் உர்ரெசோலா, பயின்றது திரைப்பட இயக்கம், திரைப்பட வணிகம். இரண்டிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்ற கையோடு ஸ்பெயின் நாட்டின் பாஸ்க்நாட் பிராந்திய தொலைக்காட்சிகளில் 2011 முதல் பணியாற்றி வந்தார். ஆவணப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அவருக்கு விருதுகளை அள்ளித்தந்தது. குறும்படங்களிலும் ஆர்வம் மேலிட அதற்கும் வரவேற்பு கிடைத்தன. சின்ன சின்ன இந்த முயற்சிகளுக்குப் பின்னர் தனது முதல் திரைப்படத்தை ஒரு மூன்றாம் பாலின மாறுபட்ட மனநிலைகளை உணர்வுபூர்வமாக பேசியுள்ளார் இத்திரைப்படத்தில்.

மூன்றாம் பாலினமும் சமூகத்தின் இன்னொரு அங்கம்தான். தேனீக்களில் நம் கண்ணுக்குப் புலப்படாத இருபதாயிரம் இனம் இருப்பதைபோல மனிதப் பிறவியிலும் நாம் அரவணைத்துச் செல்லவேண்டிய இனங்கள் பல உண்டு. இத்திரைப்படம் தன் அடையாளம் தேடும் எட்டு வயது சிறுமியான லூசியாவின் கதையை இப்படம் விவரிக்கிறது. தேனீ வளர்ப்புடன் ஒரு கிராமத்து வீட்டில் கோடை காலத்தில், அவர் தனது குடும்பப் பெண்களுடன் சேர்ந்து தனது பெண்மையை ஆராய்கிறார்.

பெண்ணின் தனிமை என்ற வகையில் நான்கு சுவர்களுக்குள் அல்லாமல் ஒரு கட்டத்தில் குடும்ப எல்லைகளைக் கடக்கிறது. ஒரு மலைக்கிராமத்தின் இயற்கை எழில் மிகுந்த பின்னணியில் இப்படம் மூன்றாம் பாலின சிறுமியின் கதையையும் அவளது அடையாளம் அவளது குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் எழிலார்ந்த சித்தரிப்புடன் படைத்துள்ளார் எஸ்டிபாலிஸ் உர்ரெசோலா.

5. Another Country | Dir: Molly Reynolds | Australian | 2023 | 75' | Anna | 11.45 AM - ஆஸ்திரேலிய நாட்டின் தொல்குடிகள் பற்றிய திரைப்படங்கள் என்றால் அது இயக்குநர் ரோல்ஃப் டி ஹீர் மற்றும் அவரது படத்தின் பிரதான வாழும் பழங்குடி கதைமாந்தரான டேவிட் குல்பிலில் தான். ஆஸ்திரேலிய தொல்குடி பற்றிய முக்கியமான படமாக ரோல்ஃப் டி ஹீர் இயக்கி டேவிட் குல்பிலில் நடித்த 'டென் கேனோஸ்' படம் சினிமா ஆர்வலர்களுக்கு நன்கு தெரிந்த ஒரு படமாகும். இருவரும் இணைந்து பணியாற்றிய சைக்காலஜிகல் அபராஜினல் த்ரில்லர் படமான தி ட்ராக்கர் படம் மிகமிக முக்கியமான ஒன்றாகும்.

அனதர் கன்ட்ரியில் தோன்றும் டேவிட் குல்பிலில்

இயக்குநர் ரோல்ஃப் டி ஹீரின் இயக்கத்தில் 2014ல் வெளிவந்த 'சார்லீஸ் கன்ட்ரி'யின் தொடர்ச்சியாகவே 'அனதர் கன்ட்ரி' என்ற இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் இயக்குநர் மோல்லி ரெனாட்ஸ் தெரிவித்துள்ளார். அதனாலேயே சார்லீஸ் கன்ட்ரி படத்தில் தோன்றிய ஆஸ்திரேலிய தொல்குடி கலைஞரான டேவிட் குல்பிலில் இதில் பிரதான பாத்திரம் ஏற்றுள்ளார். வலிமையான கதையம்சங்கள் கொண்ட திரைப்படங்களை ஏற்கெனவே இவர்கள் தந்திருக்கிறார்கள் என்பதால் இது ஆவணப்படம் என்றாலும் ஒரு திரைப்படத்திற்கான சுவாரஸ்யத்தையே கொண்டுள்ளது. இப்படத்திற்கான திரைக்கதையை மூத்த இயக்குநர் ரோல்ஃப் டீ ஹீர் மற்றும் இப்படத்தின் இயக்குநான மோல்லி ரெனால்ட்ஸ் மற்றும் டேவிட் குல்பிலில் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கின்றனர்.

மோல்லி ரெனாட்ஸ் இயக்கத்தில் வெளியான 'அனதர் கன்ட்ரி'யிருந்து ஒரு காட்சி

இப்படத்தில் ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியான ராமிங்கினிங்கில் பெரும்பான்மையாக வாழ்ந்த பழங்குடியினம் பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. பழைய கலாச்சாரத்தின் மீது ஒரு புதிய (மேற்கத்திய) கலாச்சாரத்தை வலுக்கட்டாயமாக திணிப்பதன் மூலம் அவர்களுடைய இயல்பு வாழ்க்கை தாக்குதலுக்கு ஆளானது. ஆஸ்திரேலிய தொல்குடி மக்களின் வாழ்க்கை முறை வெளியாட்களால் குறுக்கிடப்பட்டபோது, ​​​​அதன் விளைவாக அனைத்து விதமான விஷயங்களுடனும் மோதல்கள் ஏற்பட்ட ஒரு நீண்ட வரலாற்றுக் கதையைச் சொல்கிறார் டேவிட் குல்பிலில். தற்போதுள்ள மக்களின் வாழ்வியலோடு இணைந்து அம்மக்களின் நேரடி கலாச்சார தன்மைகளுடன் பிணைந்து டேவிட் குல்பிலில் 'மற்றொரு நாடு' என்ற கதையைச் சொல்வது மிகுந்த வலிமிகுந்ததாக உள்ளது, தொல்குடி திரைப்படங்களுக்கே முன்னுதாரணமாகத் திகழும் ஆஸ்திரேலிய படங்களின் வரிசையின் இன்னுமொரு அரிய படைப்பு.

இயக்குநர் ரோல்ப் டீ ஹீர் மற்றும் அவரது இயக்கத்தில் டேவிட் குல்பிலில் நடித்த சார்லிஸ் கன்ட்ரி போஸ்டர்.

மிகச்சிறந்த நிகழ்த்துக் கலைஞரான டேவிட் குல்பிலில் தனது 69 வயதில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள முர்ரே பிரிட்ஜ் பகுதியில் நவம்பர் 2021ல் காலமானார். ஆஸ்திரேலிய தொல்குடிகளின் தனித்துவத்தைப் போற்றும் வகையில் இந்த முறை CIFF 2023 விழாவில் பல்வேறு திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

சினிமா

59 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்