பிரச்சினைகளில் சிக்கிய விஜய்யின் 7 படங்கள்: ஓர் அலசல் பார்வை

By கா.இசக்கி முத்து

2011-ம் ஆண்டிலிருந்து வெளியான விஜய் படங்கள் யாவுமே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியே வெளியாகியிருக்கிறது. இதற்குக் காரணம் விஜய்யாக இல்லாவிட்டாலும், கதைக்களம், பணப்பிரச்சினை என பல காரணங்கள் அடங்கியிருக்கிறது. அவ்வாறு பிரச்சினைகளில் சிக்கிய விஜய் படங்கள் என்ன? ஏன் என்று பார்க்கலாம்

காவலன் (2011) : 'சுறா' படத்தின் பெரும் தோல்வியால் ஏற்பட்ட நஷ்டத்தை விஜய் கொடுக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இறுதியில் விஜய்யுடன் பேசி பணத்தைத் திரும்ப அளிக்க ஒப்புதல் அளித்தவுடனே 'காவலன்' வெளியானது. முன்னதாக இரண்டு முறை வெளியீடு என அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

துப்பாக்கி (2012): படத்தின் வெளியீட்டிற்கு எந்த ஒரு பிரச்சினையுமே இல்லை. ஆனால், படம் வெளியானவுடனே முஸ்லிம் அமைப்புகள் பலரும் தங்களை இழிவுபடுத்தியிருப்பதாகப் போராட்டத்தில் இறங்கினார்கள். ஒட்டுமொத்த முஸ்லிம்களே தீவிரவாதிகள் என 'துப்பாக்கி' படத்தில் சித்தரித்திருப்பதாக தெரிவித்தார்கள். ஆனால், விஜய்யும், படக்குழுவினரும் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் தமிழக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைச் சுமுகமாக முடித்தார்கள்.

தலைவா (2013): இப்பட வெளியீட்டின் போது விஜய் அரசியலுக்கு வரவுள்ளார் என்று தகவல்கள் வெளியானது. அச்சமயத்தில் 'தலைவா' படத்தின் தலைப்புக்கு கீழே 'TIME TO LEAD' என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. இதனால், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. இறுதியாக 'TIME TO LEAD’ என்ற வார்த்தையை நீக்கியவுடன் மட்டுமே படமும் வெளியானது. ஆனால், தமிழக வெளியீட்டிற்கு முன்பாகவே இதர மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் வெளியாகிவிட்டது. இப்படத்தின் சர்ச்சைக்குப் பிறகே, விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாக வெளியான செய்திகள் குறையத் தொடங்கின. 'தலைவா' வெளியீட்டிற்கு உதவிய தமிழக அரசுக்கு நன்றி என்று விஜய் கையை கட்டிக் கொண்டு பேசிய வீடியோத் தொகுப்பை வைத்து பலரும் கிண்டல் செய்தார்கள். படமும் படுதோல்வியைச் சந்தித்தது.

கத்தி (2014): இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன், ராஜபக்சேவின் நண்பர் என்று பல்வேறு அமைப்புகள் 'கத்தி' படத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கின. சென்னை சத்யம் திரையரங்கம் உள்ளிட்ட பல இடங்களில் கற்கள் வீசப்பட்டதால் பெரும் சர்ச்சை உருவானது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய நிலையை அறிக்கையாக வெளியிடவே பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக வெளியாகி படமும் பெரும் வெற்றியடைந்தது.

புலி (2015): விஜய்யின் மேலாளரான பி.டி.செல்வகுமார் தயாரித்திருந்தார். ஆனால், படம் வெளியாகும் நாளுக்கு முன்பாக அப்படம் சம்பந்தப்பட்ட நபர்களின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. மேலும், இறுதியாக பைனான்சியர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அளிக்க முடியாததால், திட்டமிட்டபடி வெளியாகாமல் வெளியீட்டு தேதியன்று மதியமே வெளியானது. படம் படுதோல்வியைச் சந்தித்தது.

தெறி (2016): விநியோகஸ்தர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால், தமிழகத்தின் மிகப்பெரிய விநியோக ஏரியாவான செங்கல்பட்டில் வெளியாகவில்லை. ஆனால், அங்கு வெளியாகாவிட்டாலும், மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது தெறி.

மெர்சல் (2017): படம் தயாராகி தணிக்கை செய்யப்பட்டது. வெளியீட்டுத் தேதி அறிவித்தவுடன், விலங்குகள் நல வாரியத்தின் கடிதத்தால் சர்ச்சை எழுந்தது. இறுதியாக விலங்குகள் நல வாரியத்தின் சிக்கல், தணிக்கைக் குழுவின் சிக்கல்களைக் கடந்து தமிழகத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து ஜிஎஸ்டி வரி வசனங்கள், மருத்துவர்களை தவறாகச் சித்திரித்து இருப்பது போன்றவற்றால் பெரும் பிரச்சினை உருவாகி இருக்கிறது. இப்பிரச்சினையால் தமிழகத்தில் வசூல் பெருமளவில் அதிகரித்திருக்கிறது என்பதுதான் இந்தப் பிரச்சினையின் சுவாரஸ்யம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

9 mins ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்