தீராக் காதல்: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

கல்லூரிப் பருவக் காதலர்களான கவுதம் (ஜெய்), ஆரண்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) இருவரும் ஒரு ரயில் பயணத்தில் யதேச்சையாக, சந்தித்துக்கொள்கிறார்கள். கவுதமுக்கு அன்பான மனைவியும் (ஷிவதா), அழகான குழந்தையும் (விருத்தி விஷால்) அமைந்திருக்க, ஆரண்யாவுக்கோ கொடுமைக்காரக் கணவர் (அம்ஜத் கான்) வாய்க்கிறார்.

மங்களூருவில் பணி நிமித்தமாக சில நாள்கள் தங்கியிருக்கும் கவுதமும் ஆரண்யாவும் அடிக்கடி சந்தித்துக்கொள்வதால் அவர்களுக்கிடையிலான காதல் புத்துயிர் பெறுகிறது. அது எல்லை மீறுவதற்கு முன் இருவரும் விலகி, இனி சந்திக்கவே கூடாது என்று முடிவெடுக்கிறார்கள்.

ஆனால் சென்னை திரும்பியதும் ஒரு சிறிய பிரச்சினைக்காகத் தன்னை அடித்துத் துன்புறுத்தும் கணவரை விட்டு விலகி மீண்டும் கவுதமின் வாழ்க்கையில் நுழைகிறார் ஆரண்யா.

குடும்பத்தைப் பிரிய விரும்பாத கவுதம் தனித்துவிடப்பட்ட முன்னாள் காதலியையும் முற்றிலும் ஒதுக்க முடியாமல் தவிக்கிறார். இந்த ஊசலாட்டத்தால் கவுதமின் குடும்ப வாழ்க்கைப் பாதிக்கப்பட்டதா? இறுதியில் ஆரண்யாவுக்கு என்ன ஆகிறது? என்பதைச் சொல்கிறது மீதிக் கதை.

இயக்குநர் ரோஹின் வெங்கடேசனும் எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்திரநாத்தும், காதலில் தோற்று வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டவர்களிடையே, முந்தைய காதல் மீண்டும் துளிர்ப்பதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் முன்வைத்து கதை-திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். சற்று எல்லை கடந்திருந்தால்கூட ஆபாசத்தைத் தொட்டிருக்கக்கூடிய கதைக்களத்தை மிகுந்த கவனத்துடன் கையாண்டு ஒழுக்கநெறிகளையும் கண்ணியத்தையும் மீறாத திரைப்படமாகக் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

படத்தில் பழைய காதலர்களுக்கு இடையிலான சில தருணங்கள் மிக அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரம் மிக மெல்லிய முடிச்சைக் கொண்ட இத்தகைய கதைகளில் கதாபாத்திரங்களுக்கு ஏற்படும் மனமாற்றங்களும் உளரீதியான போராட்டங்களுமே திரைக்கதையை முதன்மையாக நகர்த்திச் செல்பவை.

அந்த வகையில் இந்தக் கதையில் ஆரண்யாவுக்கு ஏற்படும் மனமாற்றத்தையும் அதனால் கவுதமுக்கு ஏற்படும் மனப் போராட்டங்களையும் அனைவரும் தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையில் அழுத்தமாகப் படைக்கத் தவறியிருக்கிறார்கள்.

மனைவி, குழந்தையுடன் நிம்மதியான வாழ்க்கையில் இருக்கும் முன்னாள் காதலனை அவர்களைப் பிரிந்து தன்னை ஏற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தும்போது ஆரண்யா கதாபாத்திரத்தின் மதிப்பு சரிந்துவிடுகிறது.

மனைவிக்கும் முன்னாள் காதலிக்கும் இடையிலான கவுதமின் ஊசலாட்டமும் உரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் படத்தின் இரண்டாம் பாதி பெருமளவு தொய்வடைந்துவிடுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ், கணவனின் கொடுமைகளை எதிர்கொள்ளும் போதும் காதலனைப் புரிந்துகொள்ளும் போதும் பிற்பாதியில் தனிமையின் வலியிலிருந்து விடுபடப் போராடும்போதும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜெய்யும் கதாபாத்திரத்தின் மன ஊசலாட்டத்தைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அலுவலகப் பணி அழுத்தத்தையும் மீறி வீட்டுக் கடமைகளை விட்டுக்கொடுக்காத
குடும்பத் தலைவியாக ஷிவதா பாந்தமான நடிப்பைத் தந்திருக்கிறார். முதன்மைக் கதாபாத்திரங்களின் முதிர்ச்சியான நடிப்பு படத்தின் திரைக்கதைக் குறைகளைப் பொறுத்துக்கொள்ள உதவுகிறது.

ஜி.ஆர்.சுரேந்திரநாத்தின் வசனங்கள் பல இடங்களில் அழுத்தமாகவும் கவனம் ஈர்க்கும் வகையிலும் அமைந்துள்ளன. சித்துகுமார் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் திரைக்கதைக்கு அழகாகப் பொருந்தியுள்ளன.

ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவும் கண்களுக்கு இதமளிக்கிறது. கலை இயக்கம் சில இடங்களில் கவனம் ஈர்த்தாலும் வெவ்வேறு அலுவலகங்களும், வீடுகளும் ஒரே மாதிரித் தோற்றம் அளித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘தீராக் காதல்’ தெவிட்டாமல் இனித்திருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE