2018: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

உயிர் பயத்தில் ராணுவத்தில் இருந்து ஊருக்குத் திரும்பும் அனூப் (டோவினோ தாமஸ்), டீச்சர் மஞ்சுவைக் (தன்வி ராம்) காதலிக்கிறார். கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்கிறார்கள் மத்தானும் (லால்), அவர் மகன் வின்ஸ்டனும் (நரேன்).

அந்தத் தொழிலை வெறுத்து மாடலிங் ஆசையில் இருக்கிறார் இன்னொரு மகன் நிக் ஷன் (ஆசிப் அலி). குடும்பத்தை விட்டு மக்களைக் காக்கும் அரசு பணியில் இருக்கிறார் ஷாஜி (குஞ்சாக்கோ போபன்), தமிழ்நாட்டில் இருந்து வரும் லாரி டிரைவர் சேதுபதி (கலையரசன்), சேனல் செய்தியாளர் நூரா (அபர்ணா பாலமுரளி), வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் கோஷி (அஜு வர்க்கீஸ்).. இவர்களும் இன்னும் சில முரண்பட்ட கேரக்டர்களும் கேரளாவைப் புரட்டிப் போட்ட பேய் மழை நாட்களில், எப்படி ஒன்று கூடி எதிர்பாராத ஹீரோக்களானார்கள் என்பதுதான் கதை.

மலையாளத்தில் வெற்றிபெற்ற படத்தை தமிழ் உள்ளிட்ட மொழிகளில், டப் செய்து இப்போது வெளியிட்டிருக்கிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் கேரளாவை உலுக்கி எடுத்தது பேய் மழை. அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வெள்ளத்தில் தத்தளித்தது மாநிலம். நிலச்சரிவு, உயிரிழப்புகள், இடப்பெயர்வு என கொடும் நிகழ்வு அது.

அந்த நிஜ சம்பவத்துக்கு உயிரும் உணர்வும் கொடுத்து எமோஷனலான ஒரு படத்தை, இப்படி தந்ததற்காகவே, இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் உள்ளிட்ட படக்குழுவைப் பாராட்டலாம்.

கொஞ்சம் தடுமாறி இருந்தாலும் ஆவணப்படமாகிவிடும் ஆபத்து நிறைந்த திரைக்கதையை கையாண்ட விதம் அபாரம். படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்.

ஒவ்வொருவருக்கும் உயிரோட்டமான கதையைக் கொடுத்து, கடைசிவரை அதைச் சரியாக இணைத்திருக்கும் அழகான திரை எழுத்து படத்தின் கூடுதல் பலம். முதல் பாதி கொஞ்சம் குழப்பத்தைத் தந்தாலும் இரண்டாம் பாதிக் கதையின் வெள்ளத்தில், நாமும் சுகமாக மூழ்கிவிடுகிறோம்.

மகனுக்குப் பெண் கேட்டுச் சென்ற மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த லாலை, ஏளனமாகப் பேசுகிறார் ஒரு குடும்பத் தலைவர். அவர் வீட்டை வெள்ளம் சூழ்ந்து உயிருக்குத் தவிக்கும்போது படகில் வந்து மீட்கும் லாலை நோக்கி அவர் கைகூப்பும் இடம், ராணுவத்தில் இருந்து ஓடி வந்ததால் ஊரே ஏளனமாகப் பேச, வெள்ள நிகழ்வில் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் உயிரைக் காப்பாற்றப் போராடும் டோவினோவுக்கு கிடைக்கும் மரியாதை, கணவனைப் பிரியும் நிலையில் இருக்கும் மனைவி, பிறகு அன்பு செலுத்த தொடங்கும் இடம் என ஒவ்வொரு காட்சியும் மனதைத் தொடுகிறது.

அனைத்து கேரக்டருக்கும் சிறப்பான நடிகர்களைத் தேர்வு செய்திருப்பதும் தேர்ந்த நடிப்பை அவர்கள் வழங்கியிருப்பதும் அழகு. நிஜ காட்சிகளையும் செட் அமைத்து உருவாக்கியவற்றையும் ஒன்றிணைத்து படமாக்கி இருக்கும் விதம், வியப்பு.

எது நிஜம், எது அரங்கம் என பிரித்தறிய முடியாத காட்சி அனுபவங்களுக்குப் பின்னுள்ள ஸ்பெஷல் எபெக்ட்ஸ் கலைஞர்கள், படம் முடிந்த பின்னும் காதில் ஒலிக்கும் மழை சத்தத்தைக் கொண்டு வந்தசவுண்ட் இன்ஜீனியர், நோபின் பால், வில்லியம் பிரான்சிஸின் இசை, கதைக்குள் இழுத்துப்பிடித்து அமர வைக்கும் அகில் ஜார்ஜின் நேர்த்தியான ஒளிப்பதிவு என ஒவ்வொருவருக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.

துண்டு துண்டாக வரும் முதல் பாதி, திரும்பத் திரும்ப நடக்கும் மீட்புக் காட்சிகள் கொஞ்சம் சலிப்பைத் தந்தாலும் குறைகள் தாண்டி கொண்டாடப்பட வேண்டிய படம் இது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE