காதலிக்கும் அனைவருக்குமே அந்தக் காதல் திருமணத்தில் போய் முடிவதில்லை. அப்படி சேராத காதல்கள் இருவேறு திசைகளில் சென்று, பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்க நேர்ந்தால் அதுவே ‘தீராக் காதல்’. திருமணத்துக்குப் பிந்தைய காதலையும், அது குடும்பத்தில் ஏற்படுத்தும் சிக்கல்களையும் கதைக்களமாக கொண்டு வெளியாகியுள்ள இப்படம் ஒரு சினிமாவாக பார்வையாளர்களை ஈர்த்ததா?
சென்னையில் உள்ள ஓர் உயர் நடுத்தர வர்க்க குடியிருப்பில் மனைவி, குழந்தை என அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் கௌதம் (ஜெய்). அலுவலக நிமித்தமாக மங்களூருக்கு ரயிலில் செல்ல வேண்டிய சூழல் வருகிறது. நள்ளிரவில் டீ குடிக்க ஒரு ஸ்டேஷனில் இறங்கும்போது அங்கு தனது முன்னாள் காதலியான ஆரண்யாவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) யதேச்சையாக சந்திக்கிறார். ஆரண்யாவும் மங்களூருக்கு செல்வதாக கூறுகிறார். பல வருடங்களுக்குப் பிறகான அந்தச் சந்திப்பில் இருவரும் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களது சந்திப்பு மங்களூருவிலும் தொடர்கிறது. தனது கணவன் தன்னை தினமும் அடித்து கொடுமைப்படுத்துவதை தனது முன்னாள் காதலன் கௌதமிடம் சொல்கிறார் ஆரண்யா. அந்த ஒருவார காலமும் இருவரும் தங்கள் சொந்தப் பிரச்சினைகளை மறந்து காதல் வானில் சிறகடிக்கின்றனர். தன்னுடைய மனைவி வந்தனா (ஷிவதா) எந்நேரமும் அலுவலக பணியிலேயே மூழ்கியிருப்பதால் ஆரண்யாவின் வருகையில் கௌதமும் ஆறுதலை உணர்கிறார்.
பின்னர் இருவரும் சென்னை திரும்பும் நேரத்தில், இனி சந்தித்துக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுக்கின்றனர். ஆனால், ஒரு சண்டையில் கணவர் கொடூரமாக தாக்கியதால் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார் ஆரண்யா. அதன் பிறகு அடிக்கடி கௌதமை சந்திக்கும் அவர், தன்னால் பழைய நினைவுகளை மறக்க முடியவில்லை என்றும், குடும்பத்தை விட்டுவிட்டு தன்னோடு வந்துவிடுமாறும் கௌதமை நச்சரிக்கிறார். கௌதமால் கொஞ்சம் கொஞ்சமாக நிராகரிக்கப்படும் ஆரண்யா, ஒருகட்டத்தில் கவுதமின் வீடு இருக்கும் அபார்ட்மென்ட்டுக்கே குடிவந்து விடுகிறார். இதனால் இருவரது கௌதமுக்கு பல சிக்கல்கள் எழுகின்றன. அதிலிருந்து அவர் மீண்டாரா? ஆரண்யாவின் காதல் என்னவானது? அது கௌதமின் குடும்பத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது? - இப்படி பல கேள்விகளுக்கு பட்டும் படாமலும் பதில் சொல்லியிருக்கிறது ‘தீராக் காதல்’.
» மே 28-ல் 234 தொகுதிகளில் மதிய உணவு: விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு
» 60 வயதில் திருமணம்: அசாமி பெண்ணை கரம் பிடித்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி
‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய ரோஹின் வெங்கடேசனின் அடுத்த படைப்பு இது. மனைவிக்கும் காதலிக்கும் இடையே அல்லாடும் கணவன் என்ற கதைக்களம் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. எனினும், அது பார்வையாளர்களை ஈர்க்கும்படி புதிதாக வடிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கலாம்.
படம் தொடங்கியதுமே கதைக்குள் நேரடியாக நுழைந்து விடுகிறது. ஒரு பக்கம் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கணவனிடம் அனுபவிக்கும் கொடுமைகள், இன்னொரு பக்கம் ஜெய்க்கும் அவரது மனைவி ஷிவதாவுக்கும் ஓர் ஒட்டுதல் இல்லாமல் இருப்பது உள்ளிட்டவற்றை தனியாக காட்டி நேரத்தை வீணடிக்காமல் படம் தொடங்கிய ஓரிரு நிமிடங்களுக்காகவே பார்வையாளர்களுக்கு புரிய வைத்துவிடுகிறார் இயக்குநர். அதேபோல ஐஸ்வர்யா ராஜேஷ் - ஜெய் இருவருக்குமான பழைய காதல் குறித்தும், அது முறிந்த கதையையும் ஃப்ளாஷ்பேக் என்ற பெயரில் காட்டி சோதிக்காமல் வசனங்கள் வழியாகவே வைத்திருப்பது ஆறுதல்.
முதல் பாதி முழுவதும் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் - ஜெய் காதல் காட்சிகள் பார்க்கும் நமக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பலவீனமான காட்சியமைப்புகளால் ஒரு கட்டத்தில் இருவரும் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தையே பேசிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அவற்றில் எந்தவொரு அழுத்தமும் இல்லாததால், ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் மீண்டும் ஜெய்யை தேடி ஓடும் காட்சிகள் உணர்வுரீதியாக எந்தவொரு பாதிப்பையும் தரவில்லை.
அமைதியான நடுத்தர வயது குடும்பத் தலைவனாக ஜெய் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார். பழைய காதலியா, கட்டிய மனைவியா என்று ஒருவித குழப்ப மனநிலையை படம் முழுவதும் சிறப்பாக பிரதிபலிக்கிறார். படத்தில் மற்றொரு கனமான கதாபாத்திரம் ஐஸ்வர்யா ராஜேஷுடயது. தன்னுடைய பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார். எனினும் எமோஷனல் காட்சிகளில் தடுமாற்றம் தெரிகிறது. ஜெய்யின் மனைவியாக வரும் ஷிவதாவுக்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும் அதனை நிறைவாக செய்திருக்கிறார். படத்தின் கதாபாத்திரங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஜெய்யின் நண்பனாக வரும் அப்துல், ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக வரும் அம்ஜத் கான், ஜெய் - ஷிவதா தம்பதியில் குழந்தையாக நடித்திருக்கும் வ்ரித்தி விஷால் என அனைவரும் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியுள்ளனர்.
ஜெய்யின் அபார்ட்மெண்ட்டுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் குடிவரும்போது திரைக்கதை சூடு பிடிக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷை தன் மனைவியின் பார்வையில் படாமல் ஜெய் சமாளிப்பது, ஒரு கட்டத்தில் எல்லா விஷயமும் மனைவிக்கு தெரிவது என அடுத்தடுத்த காட்சிகள் விறுவிறுப்பாகவே நகர்கின்றன. எனினும், முதலில் ஜெய் ஆறுதல் சொல்வதும், பின்னர் மீண்டும் ஐஸ்வர்யாவை நிராகரிப்பதும் என காட்சிகள் ஒரே போன்று ரிபீட் ஆவது சலிப்பை ஏற்படுத்துகிறது.
அதேபோல திரும்ப திரும்ப ஜெய்யை, ஐஸ்வர்யா ராஜேஷ் லவ் டார்ச்சர் செய்யும் அளவுக்கான காரணம் அழுத்தமாக பதிய வைக்கப்படாதது பெரிய குறை. ஜெய் வீட்டுக்கு எதிரிலேயே ஐஸ்வர்யா ராஜேஷ் குடிவருவது, தன் சைக்கோ கணவனை ஓங்கி அறையும் காட்சி, ஷிவதாவிடம் ஜெய் மாட்டிக் கொள்வது ஆகிய காட்சிகளில் அரங்கம் அதிர்கிறது. ஜி.ஆர்.சுரேந்தர்நாத்தின் கூர்மையான வசனங்கள் பல இடங்களில் அப்ளாஸ் பெறுகின்றன.
சித்து குமாரின் பின்னணி இசை, ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவு, பிரசன்னா ஜிகேவின் எடிட்டிங் உள்ளிட்ட டெக்னிக்கல் அம்சங்கள் படத்தின் குறைகளை நிவர்த்தி செய்துவிடுகின்றன. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.
மொத்தத்தில் முதல் பாதியின் இழுவையை குறைத்து, இரண்டாம் பாதியின் குறைகளை நிவர்த்தி செய்திருந்தால் திகட்டாத படைப்பாக வந்திருக்கும் இந்த ‘தீராக் காதல்’.
முக்கிய செய்திகள்
சினிமா
46 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago