இளையராஜாவுடன் இசையிரவு 32 | ‘அதிசய நடமிடும்’ - சிறகு முளைத்திடும் ‘புல்லாங்குழல்’!

By குமார் துரைக்கண்ணு

மனதுக்கு எப்போதும் நெருக்கமானவை பாடல்கள். மனிதர்களின் அதீத மகிழ்வான தருணங்களையும், துக்கமான நேரங்களையும் தவறாமல் பங்கிட்டுக் கொள்பவை பாடல்கள்தான். அதேபோல் சுயமாக ஒருவர் தம்மை தேற்றிக்கொள்ளும் ஆற்றலை பலருக்கு பாடல்கள்தான் கொடுத்து வருகின்றன . எண்ணிலடங்கா மனிதர்களின் தனிமையை தன்வயப்படுத்திக் கொள்வதை பாடல்கள் எப்போதும் தவறவிடுவதே இல்லை. அதுவும் இளையராஜாவின் பாடல்கள் என்றால் கேட்கவா வேண்டும். மனிதர்களின் நிலையுணர்ந்து அவை மெட்டு அமைக்கப்படுவதாலோ என்னவோ, கொண்டாட்ட வேலைகளிலும், அடுப்படிகளிலும், குளியலறைகளிலும், ஓய்வு நேரங்களிலும், தனியாக நடந்து செல்கையிலும் ஏதாவது ஒரு பாடலை முணுமுணுக்கத் தோணுது.

அதுவும் ஒரு சில பாடல்களைக் கேட்டு ரசித்திருப்போம். ஆனால், அந்தப் பாடல் பெரிதாக ஒலி/ளிபரப்பாகி இருக்காது. அடிக்கடி அந்தப் பாடலை மேடை கச்சேரிகளில் கேட்டிருக்க முடியாது. எப்போதாவது வரும், ஆனால் கேட்ட மாத்திரத்தில் அந்தப் பாடல் நம்மை வெகுவாக ஈர்த்துக் கொள்ளும். குறிப்பிட்ட அந்தப் பாடல் வரிகளால் ஈர்ப்பு வருகிறதா? பாடலில் இசைக்கப்பட்டிருக்கும் இசைக் குறிப்புகள் அந்த ஈர்ப்பைத் தருகிறதா? இல்லை, அந்தப் பாடலின் காட்சியமைப்பு அவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பது தெரியாது. நிஜ வாழ்க்கையில் பாடல்களோ, பின்னணி இசையோ இருப்பது இல்லையென்றாலும், நம் நினைவுகளை மீட்டுருவாக்கும் செய்யும் பல பாடல்கள் இருக்கவே செய்கின்றன.

1990-ம் ஆண்டு வெளிவந்த ‘சிறையில் பூத்த சின்ன மலர்’ படத்தில் வந்ததுதான், 'அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ' என்ற பாடல். கவிஞர் வாலி எழுதிய இந்தப் பாடலை ஜேசுதாஸுடன் இணைந்து சித்ரா பாடியிருப்பார். பொதுவாக பெண்களின் நடையை அன்னப் பறவையின் நடையோடு ஒப்பிட்டு பல பாடல்களை கேட்டிருப்போம். ஆனால் இப்பாடலில் கவிஞர் வாலி, 'அதிசய நடை' என்று முதல் அடியை எழுதியிருப்பார். இன்று வரை பலரது ஆல்டைம் பேஃவரைட் பட்டியலில் இப்பாடல் இருந்தாலும் இன்னும் சரியாக கவனிக்கப்படாத, உரிய இடத்தை அடையாத பாடலாகத்தான் இந்தப் பாடல் இருந்து வருகிறது.

தலைவன் பற்றிய நினைவுகள் தலைவியின் மனது முழுக்க இடியுடன் கூடிய பெருமழைபோல் கொட்டித் தீர்க்க, மழைநீர் நிரம்பி கண்ணாடிக் குடுவைக்குள் இருந்த மீனொன்று தவறி தரையில் வீழ்ந்து துவண்டு துடித்து தகிப்பதைப் போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இப்பாடலின் தொடக்க இசையை இளையராஜா டீடெய்லிங் செய்திருக்கும் விதம் பேரழகானது.

பாடலின் தொடக்கமே இடிமழையோசையோடுதான் துவங்கும். அதோடு ஒருசேர வந்துசேரும் கார்ட்ஸும், புல்லாங்குழலின் இசையும் பாடல் கேட்பவர்களின் மனதில் மழைச்சாரல் அடிக்கச் செய்யும். அதுவும் பல்லவி தொடங்குமுன் புல்லாங்குழலின் சின்ன ரன் ஒன்று வரும், நல்ல மழையில் முத்துகள் அதிகம் வைத்த கொலுசொன்று மெத்தைப் படிகட்டுகளில் தத்தி குதித்தோடுவதைப் போல துள்ளி துள்ளி செல்வதைப் போல புல்லாங்குழலுக்கு சிறகு முளைக்கச் செய்திருப்பார் ராகதேவன். அங்கிருந்து பாடலின் பல்லவி தொடங்கும்.

"அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம்
அழகிய முழுமதியோ
சுதியொடு லயங்களும் கூட
சதங்கைகள் ஜதிஸ்வரம் பாட
இவளென்ன எனக்கென பிறந்தவளோ" என்று எழுதப்பட்டிருக்கும். படிப்பதற்கு மரபுக் கவிதை போல் தெரிந்தாலும் படித்தவுடனே எளிதில் புரியும் சொற்களைக் கட்டி கனவுலகில் மிதக்கச் செய்திருப்பார் வாலி. பாடல் வரிகளே இவ்வளவு ரசனை மிகுந்தவையாக இருந்தாலும், அந்த ரசனைக்கு ராஜாவின் இடையிசை மேலும் அழகு சேர்த்திருக்கும். பல்லவியின் ஒவ்வொரு வரியின் முடிவிலும் புல்லாங்குழலைப் பயன்படுத்தி பாடல் கேட்பவர்களின் மனதுக்குள் இதமாக குளிரூட்டியிருப்பார் இளையராஜா.

முதல் சரணத்துக்கு முன்வரும் இடையிசை கீபோர்டில் தொடங்கும். அடுத்த சில விநாடிகளில், செனாய் இசைக்கருவியை பயன்படுத்தப்பட்டிருக்கும். காதலன் காதலி காதல் இம்மூன்றுக்குமான இணக்கத்தையும், ஏக்கத்தையும் அந்த இசை வெளிப்படுத்தியிருக்கும். அதன்பிறகு வயலின் செக்சன் பின்தொடர, புல்லாங்குழலைக் கொண்டு முதல் இடையிசையை முடித்திருப்பார் இசைஞானி.

இரண்டாவது சரணத்துக்கு முன்வரும் இடையிசை, மனதின் பரிதவிப்பை பாவிக்கும் வகையில் வயலின் செக்‌ஷனில் ஆரம்பிக்க, பின் கிட்டார் இசையை சேர்த்து மனதின் தகிப்பை மட்டுப்படுத்தியிருப்பார் ராஜா. இவை முடிந்த கனத்தில் இரண்டாவது சரணம் தொடங்குவதற்கு முன்வரும் சின்ன இடைவெளியில் புல்லாங்குழல் துள்ளிக் குதித்தோடும்போது பாடல் கேட்பவர்களின் மனதையும் மகிழ்ச்சியில் துள்ளச் செய்திருப்பார் ராகதேவன்.

முதல் சரணத்தில் வரும், "வண்டு வந்து தங்கத்தானே வண்ணத்தாமரை, ஓர் தண்டு கொண்டு நீரில் நிற்கும் உள்ள நாள் வரை" , "அந்தி வெய்யில் சாயும்போது அன்பு வெள்ளம் பாயும்போது சிந்து ஒன்று பாட துணை நான் இல்லையோ" என்ற வரிகளும், இரண்டாவது சரணத்தில் வரும், "சின்னப்பெண்ணின் வார்த்தை என்ன சங்கப் பாடலோ நீ சிந்துகின்ற பார்வை என்ன ஸ்வர்க்க வாசலோ" , "அன்றில் ரெண்டு ஒன்றை ஒன்று அட்டைப்போல ஒட்டிக்கொண்டு இன்று காணும் இன்பம் நிறம் மாறாதது" , "வளருது வளருது மோகம் விளையுது விளையுது தாகம் இனி இந்த விழிகளில் உறக்கமுண்டோ" - இந்த வரிகளெல்லாம் கவிஞர் வாலியின் காதல் கல்வெட்டுகள்.

என்னதான் மெட்டுக்கான சந்தத்துக்கு பாடல் எழுதப்பட்டிருந்தாலும், மேல் கீழாகச் சென்றுவரும் குரலும் லயமும்தான் பாடலை இதமாக்கி பாடல் கேட்பவர்களிடம் கொண்டு சேர்க்கும். அந்த வகையில் இப்பாடலில் மேல், கீழாக பாட வேண்டிய இடங்களை அத்தனை இதமாக ஜேசுதாஸும் சித்ராவும் பாடி, இப்பாடலை கேட்கும் அனைவருக்கும் மறக்கமுடியாத பேரின்பத்தைக் கொடுத்திருப்பர். மேஸ்ட்ரோவின் மாயவலை நாளும் சூழும்.

அதிசய நடமிடும் பாடல் இணைப்பு இங்கே

முந்தைய அத்தியாயம் : இளையராஜாவுடன் இசையிரவு 31 | ‘கல்யாண தேன்நிலா’ - கவிதையாய் இளைப்பாறச் செய்யும் 'கிடார்'!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

50 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்