தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் முன்னணி நாயகியாக வலம் வர தொடங்கியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ‘சாமி 2' படப் பிடிப்பில் இருந்து ‘நடிகையர் திலகம்' படப்பிடிப்புக்காக புறப்பட்டுக் கொண்டு இருந்தவரிடம், பிறந்த நாள் (அக்டோபர் 17) வாழ்த்துகளோடு உரையாடத் தொடங்கியதில் இருந்து...
சாவித்திரி வேடத்தில் நடிப்பது எப்படியிருக்கிறது?
நடிகையர் திலகம் சாவித்திரியைப் போல நடிப்பது உண்மையில் கடினம்தான். அவரைப் போல நடித்திருக் கிறேனா என்பதை நான் சொல்லக் கூடாது. இப்படத்துக்காகவே அவரு டைய படங்களைத் திரும்பப் பார்த்தேன். ஒரு காட்சியில் கூட கண், உதடு என எதுவுமே சும்மா இருக்கவில்லை. ஏதாவது ஒன்று வித்தியாசமாகச் செய்திருக்கிறார்.
‘பார்த்தாலே பைரவி' என்ற படத்தில் ஒரு சிறு நடனம் ஆடியிருப்பார். அதை அப்படியே முதல் நாள் படமாக்கினார்கள். அந்தப் படத்தில் அவரது நடனத்தைப் பார்த்துப் பார்த்து நடனமாடியது மறக்க முடியாத அனுபவம்.
கீர்த்தி சுரேஷ்தான் சாவித்திரியாக நடிக்க வேண்டும் என்று எப்படித் தேர் வானது?
‘தொடரி' படம் பார்த்துவிட்டுத் தயாரிப்பு தரப்பில் அழைத்துப் பேசினார்கள். சாவித்திரி மேடத்தின் வாழ்க்கை கதையில் நடிப்பது பெரிய பொறுப்பு. அதனால் முதலில் பயந்தேன். நிறைய யோசித்தேன். ஆனால், தயாரிப்பு தரப்பில் ‘நீங்கள் மட்டுமே சரியாக இருப்பீர்கள்’ என்றார்கள்.
சாவித்திரி மேடத்தின் மகள் விஜய சாமுண்டீஸ் வரியும் ‘நீங்கள் நடித்தால் சரியாக இருக்கும்' என்றார். முதலில் லுக் டெஸ்ட் ஒன்று எடுத்தோம். அப்போது தான் ‘நம்மாலும் முடியும்’ என்கிற நம்பிக்கை எனக்கு வந்தது. சாவித்திரி மேடம் ஒல்லியாக இருப்பது போன்ற காட்சிகள் எடுத்தாகிவிட்டது. கொஞ்சம் புஷ்டியாக இருக்கும் காட்சிகளுக்காக, உடல் எடையை அதிகரிக்காமல் மேக்கப் மூலமாக நடிக்க உள்ளேன்.
பவன் கல்யாண் - த்ரிவிக்ரம் என்பது ஒரு வெற்றிக் கூட்டணி. அக்கூட்டணியில் எப்படி நீங்கள் இணைந்தீர்கள்?
த்ரிவிக்ரம் சாரைச் சந்தித்துக் கதை கேட்டபோது, ரொம்பப் பிடித்திருந்தது. ஒப்புக்கொண்டேன். அதுமட்டுமல்லாமல், வெற்றிக் கூட்டணியை எப்படித் தவிர்ப்பது?
படப்பிடிப்பு சமயத்தில் பவன் கல்யாண் சார் - த்ரிவிக்ரம் சார் இருவரும் பேசிக் கொள்வது அவ்வளவு அழகாக இருக்கும்! ‘பைரவா' படத்தில் நன்றாக நடித்திருந்தீர்கள் எனப் பவன் கல்யாண் சார் பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது.
தெலுங்கு என்றாலே ஹீரோயின் கிளாமராக நடனமாட வேண்டியிருக்குமே..?
இன்னும் 5 ஆண்டுகள் கழித்து, இதே கேள்வியைக் கேட்டாலும் ஒரே பதில்தான். கிளாமராக நடிப்பதில் ஆர்வமே இல்லை. எப்போதுமே நடிக்க மாட்டேன். இதில் உறுதியாக இருக்கிறேன்.
‘சண்டக்கோழி - 2', ‘சாமி 2' படங்களைப் பற்றி...
‘சண்டக்கோழி -2' கதையைக் கேட் கும் முன்பே, ‘அதில் மீரா ஜாஸ்மின் கதாபாத்திரம் அனைவராலும் ரசிக்கப்பட்டதாயிற்றே. நமது கதாபாத்திரம் எப்படியிருக்குமோ’ என்று யோசித்துக் கொண்டேதான் கதை கேட்டேன்.
லிங்குசாமி சார் பிரமாதமாக என் கதாபாத்திரத்தைச் செதுக்கி வைத்திருந்ததை அவர் கதை சொன்ன பிறகு தெரிந்துகொண்டேன். ரொம்ப கலகலவென்ற பெண்ணாக இதில் நடித்திருக்கிறேன்.
அதே போல் ‘சாமி- 2'வில் த்ரிஷாவுக்கு முக்கியமான கதாபாத்திரம். அவர் இல்லாமல் 'சாமி' இல்லை. இதில் எனது கதாபாத்திரம் தனியாகக் கதையோடு வரும். அதுவும் முக்கிய மானதுதான்.
சூர்யாவின் தீவிர ரசிகையாக இருந்து கொண்டு, அவரோடு நடித்த அனுபவம் குறித்து..?
‘தானா சேர்ந்த கூட்டம்' இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மிச்சம் இருக்கிறது. சூர்யா சாரைப் பார்த்தவுடனே ‘நான் உங்களுடைய தீவிர ரசிகை சார்' என்றேன். சந்தோஷப்பட்டார். ‘கஜினி' படம் பார்த்தபோது என் அம்மா என்னிடம் ‘நான் இவருடைய அப்பா சிவகுமார் சாரோடு நடித்திருக்கிறேன்’ என்று சொன்னபோது, 'இவரோடு நான் நடித்துக் காட்டுறேன் பார்’ என்று ஜாலியாகச் சொன்னது இப்போது நிஜமாகியுள்ளது.
நீங்களும், உங்க அம்மாவும் சேர்ந்து நடிக்க எந்த இயக்குநரும் அழைக்க வில்லையா?
இதுவரை யாரும் அப்படி ஒரு கதை சொல்லி அழைக்கவில்லை. ‘ராமலீலா' படம் மூலம் அப்பா நடிகராகிவிட்டார். ‘நிமிர்' படத்தில் கலை இயக்குநர் பிரிவில் அக்காவும் பணிபுரிந்து வருகிறார். பாட்டியும் நடித்துவிட்டதால் மொத்த குடும்பமும் கலைக் குடும்பம் ஆகிவிட்டோம்
சமூக வலைதளங்களில் வலம் வரும் ‘தொடரி' மீம்ஸ் எல்லாம் பார்க்கிறீர்களா?
ஆரம்பத்தில் மீம்ஸ்களைப் பார்த்து, நம்மை நாம் நிறைய மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். பிறகுதான்... கலாய்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். எனது முக பாவனைகளை வைத்து அவ்வளவு மீம்ஸ் வந்துவிட்டது! சிரிக்கும்போது ‘ஐயோ... மீம்ஸ் போட்டுவிடுவார்களே' என்று நினைத்துச் சிரித்தால் அது செயற்கையாகி விடும். ‘அளவாகச் சிரியுங்கள்’ என்று நண்பர்களெல்லாம் சொன்னபோது, 'அப்படியெல்லாம் இருக்க முடியாது’ என்று கூறிவிட்டேன்.
நாயகனுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில், நாயகிக்கான முக்கியத்துவமான காட்சிகள் அவ்வளவாக இருக்காது. ஒரு படத்தில் நடிக்கலாம் என்பதை எதை வைத்துத் தீர்மானிக்கிறீர்கள்?
அப்படிப் பார்த்தால் எந்த மொழியிலும் எந்தப் படத்திலுமே நடிக்க முடியாது. நாயகனுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில், குறைவான காட்சிகளில் நாயகி வந்தாலும், அந்தக் காட்சி நன்றாக இருந்தால் அதுவே நல்ல விஷயம்தான்.
எல்லோரும் ரசிக்கிற நல்லதொரு படத்தில் நாமும் ஓர் அங்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். திரையுலகம் என்பதே ஆண் ஆதிக்கம் நிறைந்ததுதானே!
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago