‘தி வாரியர்’ முதல் ‘கஸ்டடி’ வரை: தமிழ் - தெலுங்கு பைலிங்குவல் படங்களின் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

By கலிலுல்லா

பான் இந்தியா படங்கள் ஒருபுறம் இருந்தாலும் தமிழ், தெலுங்கு கூட்டணியில் ‘பைலிங்குவல்’ படங்கள் அண்மைக்காலமாக படங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த அண்மைக்கால ‘பைலிங்குவல்’ படங்களின் ப்ளஸ், மைனஸ் குறித்து பார்ப்போம்.

கரோனாவுக்குப் பிறகான ஓடிடியின் பாய்ச்சல் இந்திய சினிமாவில் மிகப் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தை ஏற்படுத்தியதை மறுப்பதற்கில்லை. அதன் வழியே ‘பான் இந்தியா’ என்கிற பதம் பிரபலமடைந்தது. இதற்கெல்லாம் தொடக்கப் புள்ளியாக ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘பாகுபலி - தி பிகினிங்’ அமைந்ததை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கரோனோவுக்கு பிறகு ‘பான் இந்தியா’ என்ற பெயரில் பல்வேறு திரையுலகைச் சேர்ந்தவர்களை வைத்து படம் இயக்கும் முயற்சிகள் தீவிரமெடுத்தாலும், 2015-லேயே பிரபாஸ், ராணா டகுபதி ஒருபுறம் ரம்யா கிருஷண்ணன், நாசர், சத்யராஜ் என இருவேறு திரையுலக நடிகர்கள் சங்கமித்த படமாக ‘பாகுபலி’ படத்தை பார்க்க முடியும். அதேபோல ‘பைலிங்குவல்’ என்ற வார்த்தை பிரபலமடைவதற்கு முன்பே ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படமாக்கப்பட்ட முயற்சியை ராஜமவுலி கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘நான் ஈ’ படத்திலேயே நிகழ்த்திக் காட்டியிருந்தார்.

ஒருவகையில் தமிழ் - தெலுங்கு ‘பைலிங்குவல்’ படங்களுக்கு முன்னோடி என ராஜமவுலியை குறிப்பிட்டுச்சொல்ல முடியும். ‘நான் ஈ’, ‘பாகுபலி: தி பிகினிங்’ மற்றும் ‘பாகுபலி: தி கன்குளுஷன்’ படங்கள் ‘பைலிங்குவல்’ கான்செப்டில் வெற்றியைத் தழுவின. அப்படிப் பார்க்கும்போது கரோனாவுக்குப்பிறகு இந்த வகையறா முயற்சிகள் அதிகரித்துள்ளன.

தி வாரியர்: கடந்தாண்டு ஜூலையில் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் ‘தி வாரியர்’ படம் வெளியானது. 2018-ல் வெளியான ‘சண்டகோழி 2’ படத்தை அடுத்து 4 வருடங்களுக்குப்பின் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார் லிங்குசாமி. தேவி ஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் ஹிட். ஆனால் படம்..?. ரூ.70 கோடியில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ.36 கோடியை மட்டுமே வசூலித்து நஷ்டத்தை சந்தித்தது.

கணம்: ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் ஷர்வானந்த், அமலா, சதீஷ்,ரமேஷ் திலக் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படம் ‘கணம்’. இப்படம் தெலுங்கில் ‘ஓகே ஓகா ஜீவிதம்’ என்ற தலைப்பில் பைலிங்குவலாக வெளியானது. படம் தெலுங்கு சாயலையோ, தமிழ் சாயலிலோ சாயாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படமாக்கப்பட்ட விதத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பிரின்ஸ்: அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான படம் ‘பிரின்ஸ்’. தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம் குறித்து சிவகார்த்திகேயன் பேசுகையில், ‘‘தெலுங்கு இயக்குநருடன் தமிழ் நடிகர் என்ற இந்த காம்பினேஷன் பரிசாத்திய முயற்சி. இது வெற்றி பெற்றால் தொடர்ந்து இந்த ஆரோக்கியமான கூட்டணிகளில் படங்கள் வெளியாகும்’’ என நம்பிகை தெரிவித்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. ரூ.55 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.35 - 40 கோடி வரை இரண்டு மொழிகளிலும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

வாரிசு: இந்தாண்டு தொடக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’. பேமிலி சென்டிமென்டை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் உலக அளவில் ரூ.300 கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் விமர்சன ரீதியாக பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரில் வெளியானது. அதே தெலுங்கு இயக்குநர் தமிழ் நடிகர் கூட்டணி வசூலில் வென்றது என்றாலும் விமர்சன ரீதியாக நிறைவை தரவில்லை.

வாத்தி: தனுஷின் ‘வாத்தி’ இந்தாண்டு பிப்ரவரியில் வெளியானது. தெலுங்கில் ‘சார்’ என பெயரிடப்பட்ட வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். நாயகியாக சம்யுக்தா நடித்திருந்தார். படம் ரூ.100 கோடி வசூலை அள்ளியது. கல்வியின் முக்கியத்துவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் தமிழ் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை.

கஸ்டடி: ‘மன்மத லீலை’ படத்திற்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் பைலிங்குவலாக கடந்த மே 12-ம் தேதி வெளியான படம் ‘கஸ்டடி’. நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, ப்ரியாமணி, அரவிந்த் சாமி, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப்படம் வெங்கட் பிரபுவின் வழக்கமான ‘டச்’ இல்லாமல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தன. அதன் எதிரொலியாக படம் வெளியாகி 3 நாட்களில் ரூ.7 கோடியை மட்டுமே ‘கஸ்டடி’ வசூலித்துள்ளது.

பான் இந்தியாவைத் தவிர்த்து, தமிழ் - தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் ‘பைலிங்குவல்’ படங்கள் வரிசையில் ‘பிரின்ஸ்’ படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ தெலுங்கில் ‘மஹாவீருடு’ (Mahaveerudu) என்ற பெயரில் ஜூலை 14-ல் வெளியாக உள்ளது. அடுத்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் ‘ரெயின்போ’ படமும் பைலிங்குவலாக வெளியாகிறது.

இந்த தமிழ் - தெலுங்கு கூட்டணி ஆரோக்கியமானதுதான் என்றாலும் தமிழ் மக்களையும், தெலுங்கு மக்களையும் திருப்திபடுத்தியாக வேண்டும் என்ற இயக்குநரின் தடுமாற்றங்கள் அந்நிய மொழி படத்தை பார்க்கும் உணர்வை சில சமயங்களில் ஏற்படுத்தி விடுகின்றன. இந்த தடுமாற்றங்களின்றி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கும் படங்கள் எதிர்காலத்தில் பைலிங்குவல் படங்களின் மீதான நம்பிக்கையை கூட்ட உதவும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE