கந்துவட்டி கொடுமையின் வலியை கட்டாயம் பதிவு செய்வேன்: இயக்குநர் சுசீந்திரன் நேர்காணல்

By கா.இசக்கி முத்து

 

‘அ

றம் செய்து பழகு’ - இந்த விளம்பர வாசகம் பிடித்திருந்ததால், என் புதிய படத்துக்கு அதையே பெயராக வைத்தேன். ‘அந்த வாசகத்தை வைத்து நிறைய விளம்பரம் செய்திருக்கிறோம். அந்தத் தலைப்பு வேண்டாமே’ என்று மீனாட்சி மிஷன் மருத்துவ நிர்வாகத்தினர் கூறினார்கள். அதனால், மாறியதுதான் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற பெயர்.. என படத்தின் பெயர் மாற்றத்துக்கான காரணத்தோடு உரையாடத் தொடங்கினார் இயக்குநர் சுசீந்திரன்.

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் கதைக்களம் மருத்துவத் துறையாமே?

மருத்துவத் துறையை அடித்தளமாகக் கொண்ட கதைதான். அதைச் சொல்லி, சின்ன கருத்து ஒன்றும் கூறியுள்ளேன். நேரடியாக கூறினால் ‘கருத்து சொல்றான்’ என்பார்கள், அதே கருத்தை கமர்ஷியல் கலந்து சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள். அதேநேரம், சமூகக் கருத்தை கமர்ஷியல் கதைக்குள் கூறுவது கடினம். என்ன கதை என்று பார்வையாளர்கள் ஊகிக்கமுடியாத வகையில் திரைக்கதை அமைத்துள்ளேன். சந்தீப் கிஷன் வெகு இயல்பாக, எதார்த்தமாக நடித்திருக்கிறார்.

தமிழ் - தெலுங்கில் ஒரே நேரத்தில் இயக்குவது கஷ்டமாக இருந்ததா?

அறைக்குள் காட்சியைப் படமாக்குவதில் கஷ்டம் இல்லை. வெளிப்புற படப்பிடிப்புதான் சற்று கடினமாக இருக்கும். ஏனென்றால், வண்டியின் நம்பர் பிளேட், விளம்பரப் பலகைகள், போலீஸார் சீருடை என ஒவ்வொன்றையும் மாற்றியாக வேண்டும். இரு மொழியிலுமே பிரதான கதாபாத்திரங்கள் போக, மற்ற கதாபாத்திரங்களை மாற்றியிருக்கிறேன். ஒரே நேரத்தில் இரு மொழியிலும் இயக்குவது கடினம்தான் என்றாலும் நிறைய கற்றுக்கொண்டேன்.

‘மாவீரன் கிட்டு’ திரைப்படம் எதிர்பார்த்த வசூலைப் பெறாததில் வருத்தம் இருக்கிறதா?

‘நான் மகான் அல்ல’ வெளியானபோது, பலத்த மழை. நல்ல வசூல் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அதையே 6 மாதம் கழித்து தெலுங்கில் வெளியிட்ட போது பெரிய அளவு வெற்றி. ‘ஜீவா’ வெளியான நேரத்தில், ஜெயலலிதா கைது செய்யப்படுகிறார். தொடர்ந்து 2 நாட்கள் திரையரங்குகள் வேலை நிறுத்தம்.

‘மாவீரன் கிட்டு’ வெளியான நேரத்தில், மருத்துவ மனையில் ஜெ. சேர்க்கப்படுகிறார். அதைத் தொடர்ந்து சூழல் பரபரப்பானது. படம் பிரச்சினையின்றி வெளியாகியும் ஓடவில்லை. இயற்கையின் சூழலை நாம் எதுவும் செய்ய முடியாது. ‘மாவீரன் கிட்டு’ படம், வசூல்ரீதியாக வெற்றி பெறவில்லையே தவிர, இயக்குநராக எனக்கு நல்ல பெயர். மேலும், நாம் எவ்வளவு சிரமப்பட்டு ஒரு படம் இயக்கினாலும்கூட, மக்களிடையே என்ன வகையான வரவேற்பு கிடைக்கிறதோ, அதை ஏறற்கத்தான் வேண்டும். ‘வேதம் புதிது’ படத்தில் பாரதிராஜா துணிச்சலாக ஒரு கதை சொன்னதுபோல, நானும் வெவ்வேறு களத்தில் படம் இயக்க ஆசைப்படுகிறேன். வருங்காலத்தில், நாம் என்ன படம் செய்திருக்கிறோம் என்று பார்க்கும்போது, நமது படங்கள் நம் பெயரைச் சொல்ல வேண்டும். எனவே, எனக்கான படங்களை இயக்கிக்கொண்டே இருப்பேன். வாழ்க்கையை ஓட்ட கமர்ஷியல் படங்களும் இயக்குவேன்.

அடுத்து இயக்கிவரும் ‘ஏஞ்சலினா’ குறித்து..

‘ஏஞ்சலினா’ ஒரு புதிய கதைக் களம். ‘ஆதலால் காதல் செய்வீர்’ போல, இளைஞர்கள் மத்தியில் கட்டாயம் கொண்டாடப்படும்.

விலங்குகள் நல வாரியம், தணிக்கை பிரச்சினை ஆகியவற்றால் இயக்கு நரின் சுதந்திரம் பறிபோனதாக நினைக் கிறீர்களா?

‘ஜீவா’ படத்தில் முதுகைத் தடவிப் பார்க்கும் காட்சிக்கு, தணிக்கையில் பெரும் வாக்குவாதமே நடந்தது. இறுதியில், ‘‘நீங்கள் சொல்ல வரும் விஷயம் புரிகிறது. ‘இப்படத்தில் எந்தவொரு சமூகத்தையும் குறிப்பிடவில்லை. தனி நபரை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம்’ என்று படத்தின் தொடக்கத்தில் கார்டு போடுங்கள்’’ என்றார்கள். ஏற்றுக்கொண்டேன்.

என் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படக் கூடாது என, சண்டையிட்டு அக்காட்சியை வைத்தேன். படம் எடுத்து முடித்த பிறகு, ‘விதிமுறைகளை மீறியுள்ளீர்கள்’ என்று கூறுவதற்கு பதிலாக, தணிக்கையில் என்ன விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள் என்றெல்லாம் தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர் கள் சங்கத்துக்கு முன்கூட்டியே தெரிவிப்பது நல்லது.

பெரிய கதாநாயகர்களிடம் இருந்து பாராட்டு பெறும் அளவுக்கு, அவர்களது பட வாய்ப்புகளை நீங்கள் பெறுவ தில்லையே..

பெரிய கதாநாயகர்கள் பேசுவார்கள், பாராட்டுவார்கள். கதை கேட்கிறேன் என்பார்கள். ஆனால், அதற்குப் பிறகு எந்த அழைப்பும் இருக்காது.

‘ஹேப்பி நியூ இயர் சார்.. நம்ம படத்துக்கு சார் என்ன சொன்னார் சார்’ என்று மேனேஜரை பின்தொடரும் ஆள் நான் இல்லை. அவர்கள் ஏன் கூப்பிடவில்லை என்ற காரணத்தை அறிந்துகொள்ளும் அவசியமும் இல்லை. என்னைப் பற்றி பலரும் அவர்களிடம் வேறு விதமாக கூறியிருக்கலாம்.

அதுபற்றிய கவலை, வருத்தமும் இல்லை. எனக்கு நல்ல படம் இயக்க வேண்டும். நான் என்னவாக வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ அது ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற முதல் படத்திலேயே கிடைத்தது. இவர்களை வைத்து படம் இயக்கியே ஆகவேண்டும் என்ற வெறி எல்லாம் இல்லை. ஒவ்வொரு படத்தையும் சரியாக செய்ய வேண்டும் என்ற வெறி மட்டுமே எனக்குள் இருக்கிறது.

அனிதா தற்கொலை, கந்துவட்டி கொடுமை ஆகியவற்றுக்கு எதிராக ட்விட்டரில் கருத்து தெரிவித்தீர்கள். அச்சம்பவங்களை முன்வைத்து படம் இயக்கும் திட்டம் இருக்கிறதா?

அந்தச் சம்பவங்களை முன்வைத்து படம் இயக்க அனைவருமே ஆசைப்படுவார்கள்.

அதையே நானும் ஏன் செய்ய வேண்டும்? தவிர, அதற்கான தலைப்பை பதிவு செய்யப் போனால், ஏற்கெனவே அதை 10 பேர் பதிவு செய்திருப்பார்கள். அந்தச் சம்பவங்களின் வலி எனக்கும் இருக்கிறது.

அதை என் படத்தில் கட்டாயம் பதிவு செய்வேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

சினிமா

12 mins ago

சினிமா

20 mins ago

சினிமா

33 mins ago

சினிமா

41 mins ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்