குட் நைட்: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

ஐடி-யில் பணியாற்றும் மோகனுக்கு (மணிகண்டன்), குறட்டைதீராத பிரச்சினையாக இருக்கிறது. இதனால், காதலும் கைவிட்டுப் போகிறது. மோகனின் அக்கா (ரேச்செல் ரெபெக்கா) கணவர், ரமேஷ் (ரமேஷ் திலக்), வீடுகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவியைப் பொருத்தும் வேலை பார்க்கிறார்.

அப்படி அவர் செல்லும் வீட்டின் மாடியில் பெற்றோரை இழந்த அனு(மீதா ரகுநாத்), தனியாக வசிக்கிறார். ரமேஷுடன் அந்த வீட்டுக்குச் செல்லும் மோகனும் அனுவும் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறார்கள். மோகனின் குறட்டையால் தூக்கம் இழக்கும் அனுவுக்கு உடல்நலப் பிரச்சினைகள் வருகின்றன. குற்ற உணர்வால், தனது குறட்டை சரியாகும் வரை தனி அறையில் தூங்குகிறார் மோகன் . இதையடுத்து நடக்கும் விஷயங்கள் இருவர்உறவிலும் விரிசலை ஏற்படுத்துகின்றன. இறுதியில் குறட்டைப் பிரச்சினை தீர்ந்ததா? இருவரும் திருமண வாழ்வை நிம்மதியாகத் தொடர்ந்தார்களா என்பது மீதிக் கதை.

குறட்டையை மையமாக வைத்து அழகான, உணர்வுபூர்வமான ‘ஃபீல்குட்’ படம் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன். குறட்டைதான் மையம் என்றாலும் அதைச் சுற்றி நாயகனின் குடும்பம், நாயகிக்கென தனித்துவப் பின்னணி, அழகான காதல் காட்சிகள், திருமண வாழ்வில் ஏற்படும் இயல்பான பிரச்சினைகள் என திரைக்கதையை ரசிக்கும்படியாக நகர்த்திச் சென்றிருக்கிறார்.

நாயகனின் அம்மா, அக்கா, அக்கா கணவர், நாயகியை அரவணைக்கும் தாத்தா - பாட்டியாக இருக்கும் வீட்டுஉரிமையாளர்கள் என அனைத்து கதாபாத்திரங்களும் அழகாகவும் முழுமையுடனும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. நாயகனுக்கும் அவர் அக்கா கணவருக்குமான நட்பும் கிண்டலும் கலந்த உறவு, ரசிக்க வைக்கிறது.

இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்துக்கு மேல் கதையைத் தேவைக்கதிகமாக நீட்டிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. நாயகனுக்கு தனது குறட்டைப் பிரச்சினை குறித்த கவலை, நாயகி மீதான கோபமாக மாறுவதும் அது இருவரையும் பிரிவுவரை இழுத்துச் செல்வதும் வலுவான காரணத்துடன் சித்திரிக்கப்படவில்லை. நாயகனுக்கு அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சினைகளும் திரைக்கதையை, இரண்டரை மணி நேரம் நீட்டிப்பதற்கான உத்தியாகவே பார்க்க வேண்டியுள்ளது.

மணிகண்டன், கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி யதார்த்தமான நடிப்பைத் தந்திருக்கிறார். தனது பிரச்சினையால் மனைவி உடல்நலம் பாதிக்கப்படுவதை உணர்ந்து அழும் காட்சிகளில் மனதைத் தொடுகிறார். அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கும் அதே நேரத்தில் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத நாயகியாக மீதா ரகுநாத் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார்.

ரேச்செல் ரெபெக்கா, ரமேஷ்திலக், நாயகியின் வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், அவர் மனைவியாக நடித்திருப்பவர் என அனைவரும் சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. பின்னணி இசையும் காட்சிகளுக்கான உணர்வைக் கச்சிதமாகக் கடத்துகிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களும் கதையின் ‘ஃபீல்குட்’ தன்மைக்குத் துணைபுரிந்திருக்கின்றன.

திரைக்கதை சார்ந்த சில குறைகள் இருந்தாலும் அதைக் கடந்து படத்தில் புன்னகை பூக்கவும் கைதட்டி சிரிக்கவும், உணர்வுபூர்வமாக ஒன்றவும் வைக்கும் தருணங்கள் ஏராளமாகஉள்ளன. வாழ்வில் எதிர் கொள்ளும் சிலபிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுதான்ஆக வேண்டும் என்பதில்லை. அவற்றுடன் வாழப் பழகுவதும் அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கானவழியாக இருக்க முடியும் எனும் செய்தி பிரச்சார நெடியில்லாமல் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்காகவே ‘குட் நைட்’டை மனதார வரவேற்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்