‘மாநாடு’ என்கிற சூப்பர்ஹிட் மற்றும் ‘மன்மதலீலை’ என்கிற சுமார் ஹிட் படங்களுக்குப் பிறகு முதன்முறையாக தெலுங்கில் கால் பதித்திருக்கும் வெங்கட் பிரபு ‘கஸ்டடி’ படத்தின் மூலம் தன்னுடைய முத்திரையை பதித்தாரா என்று பார்க்கலாம்.
1996ஆம் ஆண்டு பின்னணியில் தொடங்கும் கதையில் ஆந்திராவின் ஒரு சிறிய நகரத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றுபவர் சிவா (நாகசைதன்யா). ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக முதலமைச்சரின் வாகனத்தையே மறிக்கும் அளவுக்கு துணிச்சலானவர். அவரது காதலி ரேவதி (கீர்த்தி ஷெட்டி). இருவரது காதலும் ரேவதியின் வீட்டுக்கு தெரியவருவதால் ரேவதிக்கு அவசர அவசரமாக திருமணத்துக்கு ஏற்பாடு நடக்கிறது. இதற்கிடையே ஒருநாள் எதேச்சையாக சாலையில் ஒரு தகராறில் டெரர் வில்லனான ராஜு அலைஸ் ‘ராஸூஊஊ’வை (அரவிந்த் சாமியை)அவருடம் இருக்கும் ஜார்ஜையும் (சம்பத்) கைது செய்து ஸ்டேசனுக்கு அழைத்து வருகிறார். அரவிந்த் சாமி பல அரசியல் கொலைகளை செய்த கொலைகாரர் என்றும் தான் ஒரு சிபிஐ அதிகாரி என்றும் சொல்கிறார் சம்பத்.
ராஜுவை மறுநாள் காலை பெங்களூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சம்பத்தின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் நாயகன், அங்கு வரும் ராஜுவின் ஆட்களை அடித்துப் போட்டு விட்டு அங்கிருந்து ராஜுவை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். இந்த பயணத்தில் வீட்டிலிருந்து ஓடி வரும் கீர்த்தி ஷெட்டியும் இணைகிறார். அரசாங்கத்தையே தனக்கு பின்னால் வைத்திருக்கும் ராஜுவை நீதிமன்றத்தில் நாகசைதன்யா ஆஜர்படுத்தினாரா? அவரால் நீதியை நிலைநாட்ட முடிந்ததா? இதுதான் கஸ்டடி சொல்ல வரும் கதை.
» “நான்கு காதல்களை கடந்துவிட்டேன்; எதையுமே இன்றும் மறக்கவில்லை” - பாரதிராஜா
» குட் நைட் Review: குறட்டையின் சிக்கலை பேசும் ஒரு ஃபீல்குட் படைப்பு
வெங்கட் பிரபு எப்போதும் ஒரே ஜானரில் படமெடுக்க விரும்பாதவர். அவரால் அஜித்தை வைத்து மாஸ் + கிளாஸான மங்காத்தவையும் கொடுக்க முடியும், வைபவ், பிரேம்ஜி, ஜெய் ஆகியோரை வைத்து கலகலப்பான ‘கோவா’வையும் தர முடியும். முற்றிலும் தன் பாணியிலிருந்து விலகி டைம் லூப் கான்செப்ட்டில் ‘மாநாடு’ என்ற படத்தையும் எடுக்க முடியும். அப்படிப்பட்ட வெங்கட் பிரபு இயக்கிய படமா இது என்ற சந்தேகம் படம் தொடங்கிய ஓரிரு நிமிடங்களிலேயே பார்ப்பவர்களுக்கு வந்துவிடுகிறது.
ஒருநாள் முழுக்க தன் கஸ்டடியில் இருக்கும் வில்லனை சாகாமல் பார்த்துக் கொள்ளும் ஹீரோவைப் பற்றிய கதை. வெங்கட் பிரபுவின் முந்தைய படங்களான ‘சரோஜா’, ‘மாநாடு’ போன்ற ஒரே நாளில் நடக்கும் படத்தை கொடுக்க மேற்சொன்ன கதையே போதும். ஆனால் அப்படங்களில் இருந்து திரைக்கதை என்னும் வஸ்து இப்படத்தில் கிஞ்சித்தும் இல்லை. படம் தொடங்கி அரை மணி நேரத்துக்கு கதைக்குள் நுழையாமல் இலக்கின்றி அலைகிறது. இதில் மனசாட்சியே இல்லாமல் 2 பாடல்கள் வேறு. வில்லன் அரவிந்த் சாமியின் என்ட்ரிக்குப் பிறகு நிமிர்ந்து உட்கார வைக்கும் திரைக்கதை, யூகிக்க வைக்கும் அரதப் பழைய காட்சிகளால் சலிப்பை ஏற்படுத்துகின்றன.
வில்லனை அழைத்துக் கொண்டு ஒரு பாதாள சுரங்கத்தில் ஓடும் நாயகனை, போலீஸ் உயரதிகாரியான சரத்குமார் சுற்றி வளைத்து விடுகிறார். அவர் கையில் துப்பாக்கி. தப்பிக்க வழியே இல்லை. இந்த இடத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படத்திலும் வைக்காத ஒரு காட்சியை இயக்குநர் வைக்கிறார். சரத்குமார் சுடுவதற்காக துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்தும்போது துப்பாக்கியில் தோட்டா இல்லை. வந்திருப்பது வெங்கட் பிரபு படம் தானா என்று மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது.
ஆக்ஷன் படம் என்பதை நிறுவ பரபர சேஸிங், சண்டைகள் என படம் முழுக்க இருந்தும் பார்க்கும் நமக்கு அவை எந்தவொரு பதட்டத்தையோ பரபரப்பையோ ஏற்படுத்தவில்லை. பல காட்சிகள் திரும்பத் திரும்ப வருவது போன்ற உணர்வு எழுகிறது. வழக்கமாக வெங்கட் பிரபு படங்களில் எடுபடும் பிரேம்ஜியின் காமெடி கூட இப்படத்தில் எடுபடவில்லை. ஒருகாட்சியில் பிரேம்ஜி மற்றும் வெண்ணிலா கிஷோர் இருவரும் சேர்ந்து வரும் இடம் மட்டுமே ஒரே ஆறுதல். அந்த காட்சி அக்மார்க் வெங்கட் பிரபு ஸ்டைல்.
சீரியசான இடங்களில் காமெடி செய்கிறேன் என்று வைத்திருக்கும் பல காட்சிகள் ஏற்கெனவே தத்தித் தடுமாறிக் கொண்டிருக்கும் திரைக்கதையை மேலும் தத்தளிக்க வைக்கின்றன. டெரர் வில்லனாக நமக்கு காட்டப்படும் அரவிந்த் சாமி நாயகி கீர்த்தி ஷெட்டியுடன் சேர்ந்து கொண்டு பேசும் அண்ணன் தங்கை டயலாக்குகள் எரிச்சலூட்டுகின்றன. கேமியோ ரோல் செய்திருக்கும் ராம்கிக்கு ஏஜெண்ட் பிலிப் என்று ‘விக்ரம்’ படத்தை ஸ்பூஃப் செய்து வைத்திருக்கும் காட்சிகள் எல்லாம் என்ன நினைப்பில் வைக்கப்பட்டது என்று தெரியவில்லை. எமோஷனல் அம்சங்களுக்காக வைக்கப்பட்ட ஃப்ளாஷ்பேக் காட்சிகளும் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
நாகசைதன்யா தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை பிசிறில்லாமல் செய்திருக்கிறார். கீர்த்தி ஷெட்டிக்கு படத்தில் நாயகனை வார்த்தைக்கு வார்த்தை ‘ஷிவ்வா’ என்று அழுத்தி கூப்பிடுவதை தவிர பெரிதாக வேலையில்லை. பிரியாமணி, சரத்குமார் உள்ளிட்டோர் வீணடிக்கப்பட்டுள்ளனர். படத்தின் ஒரே ஆறுதல் அரவிந்த் சாமி. படம் முழுக்க அவர் கொடுக்கும் கவுன்ட்டர்கள் அப்லாஸ் பெறுகின்றன. ஆனால் படத்தில் யாராவது அவரை ராஜு என்று கூப்பிட்டால் ராஜு இல்லை ‘ராஸூஊஊஊ’ என்கிறார்.
இளையராஜா - யுவன் கூட்டணி மற்றும் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரும் போட்டி போட்டு உழைத்துள்ளனர். ராஜா மற்றும் யுவன் பின்னணி இசையில் மிரட்டினாலும் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. சேஸிங் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரின் உழைப்பு தெரிகிறது.
இதுவரை வந்த வெங்கட் பிரபு படங்களில் சூர்யாவை வைத்து அவர் எடுத்த ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ படம் தான் சுமாரான படம் என்று சொல்வார்கள். இப்போது அதனை பின்னுக்குத் தள்ளி அந்த பெருமையை ‘கஸ்டடி’ தட்டிச் செல்கிறது. படத்தில் பல ஆச்சரியங்கள் இருப்பதாக பல பேட்டிகளில் வெங்கட் பிரபு கூறியிருந்தார். படம் முழுக்க இருந்த ஒரே ஆச்சரியம் இது வெங்கட் பிரபு படம் தானா என்பதுதான்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago