இந்து கடவுள்களை இழிவாக பேசிய வழக்கு: உதவி இயக்குநருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: இந்து கடவுள்களை இழிவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சினிமா உதவி இயக்குனர் விடுதலை சிகப்பிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஏப்ரல் 30-ம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலக்குழி மரணம் என்ற தலைப்பில் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி கவிதை ஒன்றை வெளியிட்டு பேசினார்.

இந்த பேச்சு இந்து மத கடவுள்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாக கூறி இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் பி.விக்னேஷ்வரன் என்கிற விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் அபிராமபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி விடுதலை சிகப்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடவுள்களை அவமதிக்கும் வகையில் தாம் பேசவில்லை. அரசியல் பழிவாங்கும் நோக்குடன் போலியாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறை தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கே.ஜி.திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறை விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன், விடுதலை சிகப்பிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE