நடிகர் தனுஷ் திரையுலகில் அறிமுகமாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2002ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான தனுஷ், இன்று சர்வதேச எல்லைகளை கடந்து ஒரு உலகளாவிய கலைஞனாக உயர்ந்து நிற்கிறார்.
மாஸ் ஹீரோவுக்கென இந்திய சினிமா வகுத்து வைத்திருக்கும் இலக்கண விதிகளை தகர்த்தெறிந்து, மெலிந்த உடலுடனும், மீசையில்லாத முகத்துடனும் 20களில் அடியெடுத்து இளைஞர்களின் ஆதர்சமாக திகழ்ந்தவர். முதல் படத்துக்குப் பிறகு உருவம் தொடர்பான கேலி, கிண்டல்களை எதிர்கொண்டாலும், தனது இரண்டாவது படமான ‘காதல் கொண்டேனில்’ சிறுவயதில் எதிர்கொண்ட துர்சம்பவங்களால் உளவியல் சிக்கலுக்கு ஆளான வினோத் என்ற கதாபாத்திரத்தை கண்முன்னே தத்ரூபமாக காட்டியிருப்பார் தனுஷ். தனுஷ் எனும் ஒரு நடிகனை தமிழ் சினிமா அடையாளம் கண்டது இங்கேதான்.
பின்னர் ‘திருடா திருடி’, ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’, ‘சுள்ளான்’, ‘தேவதையைக் கண்டேன்’ என கமர்சியல் பாதையில் பயணித்து தனது மாஸ் ஹீரோ இமேஜுக்கான அடித்தளத்தை மெல்ல அமைக்கத் தொடங்கினார் தனுஷ். ‘திருடா திருடி’ படத்தில் இடம்பெற்ற மன்மதராசா பாடல் தனுஷை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. 2006ஆம் ஆண்டு தனது அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான ‘புதுப்பேட்டை’ தனுஷின் திரைவாழ்க்கையில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. படம் முழுவதும் தனது தனி ஆவர்த்தனத்தை சிறப்பாக நிகழ்ந்திருந்தார் தனுஷ்.
» 79 வயதில் 7வது குழந்தைக்கு தந்தையான நடிகர் ராபர்ட் டி நீரோ
» சொகுசு காரின் சாவியை காணவில்லை - ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா போலீசில் புகார்
தொடர்ந்து 'திருவிளையாடல் ஆரம்பம்', 'பொல்லாதவன்', 'யாரடி நீ மோகினி', 'படிக்காதவன்', 'ஆடுகளம்', 'வேங்கை', 'மயக்கம் என்ன' என ஒரே நேரத்தில் மாஸ் + கிளாஸ் என இரண்டு குதிரைகளிலும் சவாரி செய்தார். தனுஷ் நடித்த பெரும்பாலான படங்களை எடுத்துக் கொண்டால் எளிய குடும்ப பின்னணியை கொண்ட கதாபாத்திரத்தையே தேர்வு செய்திருப்பார். அதற்கு அவரது பக்கத்து வீட்டுப் பையன் தோற்றமும் பெரியளவில் கைகொடுத்தன. 2014ஆம் ஆண்டு வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படம் இதில் உச்சம் தொட்டது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு படித்து வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களின் மனநிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருப்பார் தனுஷ்.
தனுஷ் வெளிப்படுத்தும் முக பாவனைகள் அபாரமானவை. கமர்ஷியல் படங்களில் கூட சரியான இடத்தில் தனுஷ் வெளிப்படுத்தும் நடிப்புத் திறன் அப்ளாஸ் அள்ளும். ‘வேங்கை’ படத்தில் கிளைமாக்ஸுக்கு முன்னால் தன் அம்மா ஊர்வசியிடம் பேசும் காட்சி, விஐபி படத்தில் தன் தாய் இறந்தது தெரியாமல் வீட்டுக்கு வரும் காட்சி ஆகியவற்றை உதாரணமாக சொல்லலலாம்.
‘அசுரன்’ படத்தில் தன் வயதுக்கு மீறிய கதாபாத்திரத்தை தேர்வு செய்து வியக்க வைக்கும் நடிப்பை வழங்கி மற்ற நடிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார் தனுஷ். அந்த கதாபாத்திரத்துக்கு நம்பத்தன்மையை ஏற்படுத்தி பார்வையாளர்களை ஏற்றுக் கொள்ளச் செய்ததே தனுஷின் ஆகச் சிறந்த திறமை. ஒரு மாஸ் நடிகராக அறியப்படுபவர் நடிக்கத் தயங்கும் ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’, ‘கர்ணன்’ போன்ற அழுத்தமான கதைக்களம் கொண்ட படங்களில் தனுஷை தவிர யாரையும் கற்பனை செய்து பார்ப்பது கடினம்.
சமீபத்தில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இறுதிக் காட்சியில் தன் தந்தை அடிவாங்கும் இடத்தில் ஒரு சண்டைக் காட்சியை வைக்கக் கூடிய எல்லா சாத்தியங்களும் இருந்த ஒரு சூழலில், அதனை அந்த கதாபாத்திரத்துக்காக தவிர்த்த தனுஷ் உயர்ந்து நிற்கிறார்.
'ராஞ்சனா', ‘ஷமிதாப், ‘அத்ரங்கி ரே’ உள்ளிட்ட படங்களின் மூலம் இந்தியில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் தனுஷ். பாலிவுட் பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை தனுஷின் நடிப்பு குறித்து பல்வேறு தருணங்களில் நெகிழ்ந்து பேசிவருவதை காண்கிறோம். தென்னிந்திய நடிகர்களால் இந்தியில் ஜொலிக்க முடியாது என்ற கூற்றை உடைத்து அதையும் தாண்டி ஹாலிவுட்டில் ‘தி கிரே மேன்’ படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் நடித்த ’லோன் வுல்ஃப்’ கதாபாத்திரத்துக்கென ஒரு தனிப் படமாக எடுக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று இந்தியா மட்டுமின்றி சர்வதேச எல்லைகளையும் கடந்து 21 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் தனுஷை நாமும் வாழ்த்துவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago