மதம் சார்ந்த படம் அல்ல; மனம் சார்ந்த படம் - ‘ஃபர்ஹானா’ குறித்து இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘ஃபர்ஹானா’ திரைப்படம் மதம் சார்ந்தது அல்ல; மனம் சார்ந்தது என்று இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் கூறியுள்ளார்.

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஃபர்ஹானா’. இதில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

‘ஃபர்ஹானா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசியவதாது: "நான் சென்னை புதுபேட்டையில் வளர்ந்தவன். வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்கும் கடைகள் இருக்கும் தெருவில் தான் வீடு. அங்கு இஸ்லாமியர்கள் அதிகம். புதுபேட்டை, திருவல்லிக்கேணி என்று நான் பிரியாணி சாப்பிட்டு வளர்ந்தது எல்லாமே முஸ்லிம் நண்பர்களுக்கு மத்தியில் தான். ஆகையால், நான் எடுக்கக் கூடிய படத்தின் பின்னணி, நான் வளர்ந்த, அனுபவித்த கதையாக ஏன் இருக்க கூடாது? என்று நினைத்தேன். மதம் சார்ந்து படம் எடுக்கிறேன் என்று சர்ச்சை எழுந்துள்ளது. என்னுடைய நண்பர்களைப் பற்றி தான் எடுத்திருக்கிறேன். மதம் சார்ந்தது அல்ல; மனம் சார்ந்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கத்தி மீது நடக்கக் கூடிய கதைதான் இப்படம். என்னுடைய குழுவில் 4 பேர் இஸ்லாமியர்கள். ஏனென்றால், இஸ்லாமிய பின்புலத்தில் எடுக்கக் கூடிய படத்தில் எந்தவித தவறும் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். இப்படம் இஸ்லாமிய நண்பர்களை தாழ்த்தி எடுக்கவில்லை." இவ்வாறு நெல்சன் வெங்கடேசன் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE