“மனிதகுலம் மீதான அன்பு...” - மசூதியில் நடந்த இந்து திருமண வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

கேரளாவில் மசூதியில் நடைபெற்ற இந்து திருமண வீடியோவை பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘மனிதகுலத்தின் மீதான அன்பு நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும்’ என நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று அந்த ட்ரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த ட்ரெய்லர் கடும் எதிர்ப்புக்குள்ளானது. இப்படம் வரும் மே 5-ஆம் தேதியான நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படியான சூழலில் ‘காம்ரேட் ஃபரம் கேரளா’ என்ற ட்விட்டர் ஐடியிலிருந்து வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேரவல்லி முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலில் சரத் ​​சசி மற்றும் அஞ்சு அசோக் தம்பதிகளுக்கு நடைபெற்ற திருமணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மசூதியில் நடைபெற்ற இந்த திருமணம் முழுக்க முழுக்க இந்து சடங்குகளின் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மணப் பெண்ணின் பெற்றோர் மசூதியின் நிர்வாகத்தை நாடியுள்ளனர். இதையடுத்து நிர்வாகம் சார்பில் 10 சவரன் நகை மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கப்பணம் கொடுக்கப்பட்டதுடன் மசூதியிலேயே திருமணம் நடத்த அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் அந்த பள்ளிவாசலில் புரோகிதர் வரவழைக்கப்பட்டு சடங்குகள் நடத்தப்பட்டு மணமகன், மணமகளுக்கு தாலி கட்டுகிறார். தொடர்ந்து 1000 பேருக்கு சைவ உணவும் பறிமாறப்படுகிறது. மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் இத வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தத் திருமணமானது 2020-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி அதாவது 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘காம்ரேட் ஃபரம் கேரளா’ என்ற ஐடியில் ‘மற்றொரு கேரளா ஸ்டோரி’ என கேப்ஷனிடப்பட்டுள்ள இந்த வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் அவர், “மனிதகுலத்தின் மீதான அன்பு நிபந்தனையற்றதாகவும் குணப்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார். இந்து, கிறிஸ்தவ பெண்கள் மதமாற்றப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாக கூறி ‘கேரளா ஸ்டோரி’ போன்ற படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் சூழலில் ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த ட்வீட் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE