புகழஞ்சலி: 90ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை யாவரையும் மகிழ்வித்த மகத்தான திரைக் கலைஞர் மனோபாலா!

By கலிலுல்லா

300-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகர்; 24 படங்களை இயக்கியவர்; தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞரான மனோபாலா மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரின் படைப்புகள் என்றென்றும் நம்முடன் உறவாடிக்கொண்டிருக்கும் என்பதில் எந்த மாற்றமுமில்லை.

மனோபாலாவின் இயக்குநர் பயணம்: நீங்கள் எவ்வளவு ஆழ்ந்த சோகத்தில் இருந்தாலும் சரி, கவலை சூழ்ந்திருந்தாலும் சரி, மனோபாலாவைக் கண்டதும் அந்த சோகங்கள் கரைவதை உணர முடியும். ஒருவித மென்னுணர்வுகளுக்கு சொந்தக்காரர் மனோபாலா. அவர் இயக்கிய படங்களுமே கிட்டத்தட்ட அப்படியான உணர்வுகளை பிரதிபலித்தவை. பெரும்பாலும் குடும்பக் கதைகளையும், காதல் கதைகளையும் திரையில் காட்சிப்படுத்தியவர்.

பாரதிராஜாவின் ‘புதிய வார்ப்புகள்’ படத்தின் மூலம் உதவி இயக்குநராக தனது கலைப் பயணத்தைத் தொடங்கியவர் 1982-ம் ஆண்டு கார்த்திக் - சுஹாசினி நடிப்பில் வெளியான ‘ஆகாய கங்கை’யின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். விஜயகாந்தை நாயகனாக வைத்து "சிறைப்பறவை", "என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்", "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்", நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த "ஊர்க்காவலன்", சத்யராஜ் நடிப்பில் "மல்லு வேட்டி மைனர்" என 80-களின் முன்னணி நாயகர்களை இயக்கி வெற்றிகண்டார். ‘டிசம்பர் 31’ என்ற கன்னட படத்தின் மூலமாகவும், ’மேரா பதி சிர்ஃப் மேரா ஹை’ (Mera Pati Sirf Mera Hai) இந்தி படம் மூலம் எல்லைகளைக் கடந்து அறியப்பட்டவர் மனோபாலா. அவர் இயக்கத்தில் இறுதியாக கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘நைனா’ படம் ஹாரர் - காமெடி பாணியில் அப்பா - மகன் உறவை பேசியது.

நடிகராக அசத்திய கலைஞன்: நடிகராக சிறு சிறு வேடங்களில் நடித்த மனோபாலாவுக்கு கைகொடுத்தது ‘நட்புக்காக’ திரைப்படம். அதில் ‘மதுரை’ என்ற கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகானுடன் இணைந்து அவர் செய்யும் வில்லத்தனங்கள் கவனம் பெற்றன.‘புதிய வார்ப்புகள்’ பட பாக்யராஜ் தொடங்கி ‘டான்’ பட சிவகார்த்திகேயன் வரை 40 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் நடிகராக அன்றைய தலைமுறை முதல் இன்றைய 2கே கிட்ஸ்களின் நாயகர்களுடன் வரை இணைந்து நடித்த பெருமை பெற்றவர் மனோபாலா.

சிறிய கதாபாத்திரமாகவே இருந்தாலும் அதை தனக்கான உடல்மொழியில் ரசிக்க வைத்துவிடுவார் மனோபாலா. குறிப்பாக ‘எதிர்நீச்சல்’ படத்தில் ‘பெயரியல் பேராசன்’, ‘நியூமராலஜினியின் தந்தை’ என்ற பட்டத்துடன் பின்னணியில் ‘அண்ணாரின் வெளிநாட்டு பயணங்களின் விவரங்கள்’ என குரல் ஒலிக்க துபாய், பாங்காக், அமெரிக்கா என அந்தந்த நாட்டு உடைகளுக்கேற்ப சின்ன நடன அசைவுடன் அவரது அந்த தோற்றமே அட்டகாசமாக இருக்கும். அதிலும் ‘குங்ஃபூ கலையின் பிறப்பிடமான சைனாவில்’ என்று சொன்னதும் குங்ஃபூ ஆடையுடன் அவரது மூவ்மெண்ட்ஸ்கள் ரசிக்க வைத்திருக்கும்.

சிவாவின் ‘தமிழ்ப் படம்’ மனோபாலாவை வேறொரு வகையில் காட்சிப்படுத்தியிருக்கும். வெண்ணிற ஆடை மூர்த்தி, எம்எஸ் பாஸ்கர் ஆகியோருக்கு தனித்தனியே ‘மாஸ்’ இன்ட்ரோ காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். ஜீன்ஸுடன், சட்டை வைத்த டீசர்ட்டை அணிந்திருக்கும் மனோபாலாவுக்கு அது பக்காவாக பொருந்தியிருக்கும். அவரது ப்ளஸே இளமை மாறாத அந்த தோற்றம்தான். ‘பாய்ஸ்’ படத்தை இமிடேட் செய்வதாக கூறி சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு மொக்கை வாங்கும் காட்சி என மனோபாலா வயதாகாக் கலைஞன்.

‘கலகலப்பு’ படத்தில் முறுக்கு மீசை, கிருதா கெட்டப்பில் சந்தானத்துடனான காமெடிக் காட்சிகளில் அதகளம் செய்திருப்பார். ‘அரண்மனை’, ‘யாரடி நீ மோகினி’, ‘துப்பாக்கி’, ‘சிறுத்தை’, ‘பிதாமகன்’ என ஏராளமான மறக்க முடியாத படங்களில் அழுத்தமான நடிப்பின் மூலம் ரசிக்க வைத்தவர் மனோபாலா. கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் காம்போ அமைத்துள்ளார்.

இயக்கம், நடிப்போடு தன்னை சுருக்கிவிடாமல் ‘சதுரங்க வேட்டை’ என்ற முக்கியமான திரைப்படத்தையும் தனது தயாரிப்பு நிறுவனமான ‘மனோபாலா பிக்சர் ஹவுஸ்’ மூலம் வழங்கியவர். ‘பாம்புச் சட்டை’, அடுத்து தற்போது ‘சதுரங்க வேட்டை 2’ படங்களின் மூலம் தயாரிப்பாளராக அடையாளம் பெற்றவர்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’ சீரியல் மூலம் வீடுகளுக்கும் சென்றடைந்தார். "அரிதாரம் பூசிப் பழகினவன்... கொஞ்ச நாள் அதை பூசாமா இருந்துட்டா அதுவே நரகம் மாதிரி ஆகிடும். அந்த மாதிரி இந்த லாக் டவுன்ல எவ்ளோ நாளைக்குத்தான் நடிக்காம வீட்லயே முடங்கிக் கிடக்க முடியும்? அதான்.. நல்ல சீரியல் கதைக்களம் அமைந்ததும் கேமரா முன்னாடி ஓடி வந்துட்டேன்” என அந்த சீரியலில் நடித்தது குறித்து குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தினார். யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வந்தார். எந்த இடத்திலும் சோர்வடைந்து ஓயாமல், இயக்குநராக, திரைப்பட நடிகராக, தயாரிப்பாளராக, சின்னத்திரை நடிகராக, ரியாலிட்டி ஷோ, யூடியூப் என காலத்திற்கு தகுந்தாற்போல மாறி அந்த தளங்களில் பயணித்து வெற்றிகண்ட மகத்தான கலைஞர் மனோபாலா. அவரின் மறைவு நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு. அஞ்சலிகள்!

வாசிக்க > “எல்லாருக்குமானவர் மனோபாலா!” - தமிழ்த் திரையுலகினர் புகழஞ்சலி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்