“மிகப் பெரிய நெருக்கடியில்தான் ‘இராவண கோட்டம்’ உருவானது” - இயக்குநர் விக்ரம் சுகுமாரன்

By செய்திப்பிரிவு

“நான் ஒரு பிடிவாதமான இயக்குநர். யாரிடமும் இரக்கம் காட்டவில்லை. அதற்காக நன்றியும் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், இனிமேலும் அப்படித்தான் இருப்பேன்” என இயக்குநர் விக்ரம் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.

கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “இராவண கோட்டம்”. மே 12-ல் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் விக்ரம் சுகுமாரன், “இந்தப் படத்தில் நான் சிரித்துக் கூட பேசவில்லை. அது கொஞ்சம் குற்ற உணர்வாக இருக்கிறது. இருந்தும் யாரும் என்னை விட்டுக் கொடுக்காமல் பேசினார்கள் அனைவருக்கும் நன்றி. இளவரசன் அண்ணனை 15 வருடங்களுக்கு முன்னதாகவே என் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்து விட்டேன். இந்தப் படத்தில் அவரை நடிக்க வைத்தது எனக்கு மிகப் பெருமையான விஷயம்.

நான் ஒரு பிடிவாதமான இயக்குநர், யாரிடமும் இரக்கம் காட்டவில்லை அதற்காக நன்றியும் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இனிமேலும் அப்படித்தான் இருப்பேன் அதுதான் என் பாவனை, எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு அது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். இந்தப் படம் மிகப் பெரிய நெருக்கடியில் தான் உருவானது. அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார் நடிகர் ஷாந்தனு. மிகப்பெரும் பாரத்தைத் தலையில் ஏற்றிக் கொண்டார், அவருக்கு இந்தப் படம் பெயர்ச் சொல்லும் படைப்பாக இருக்கும்” என்றார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “சாதியை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத் தான் படத்தை எடுத்துள்ளோம். இந்தப் படத்தில் கீழத்தெரு, மேலத்தெரு என உள்ள இரண்டு பிரிவுகளை வேறு எப்படி பதிவு செய்ய முடியும்? ராமநாதபுரத்தில் கருவேல மர பிரச்சினையைப் பற்றி பேசியுள்ளோம். இதில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. சுட்டிக்காட்டியுள்ள பிரச்சினைகளை சரிசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பதைத்தான் சொல்லியுள்ளோம்” என்றார்.

நடிகர் சாந்தனு பேசுகையில், “இந்தப் படம் ‘சக்கரக்கட்டி’ படத்திற்குப் பிறகு மக்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிற படமாக இருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகரைத் தாண்டி, தயாரிப்பு பணிகளும் நான் பார்க்க வேண்டி இருந்தது. தயாரிப்பு மிகக் கடினமான வேலை மிகவும் சிரமப்பட்டேன். படக்குழுவிற்கு நிறைய அனுபவம் இருந்தது. அனைவரும் இப்படத்திற்காகப் பல நாட்கள் தூங்காமல் வேலை செய்தனர். இந்த நான்கு வருடங்கள் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்; படம் பார்த்த பிறகு எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது.

கிராமத்துப் பையனாக நடிக்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. காலில் ரத்தம் வர நடித்தேன் எந்த படத்திலும் நான் இதைச் செய்ததில்லை. நான் மட்டும் இல்லை அனைவரும் இது போல கஷ்டப்பட்டு தான் நடித்தனர். இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர். நாங்கள் படப்பிடிப்பு நடத்திய பகுதிகளில் இரு சமூக மக்கள் வணங்கும் மரத்தை வெட்டிவிட்டார்கள். அதனால் அந்த ஊர் மக்கள் எங்களிடம் சண்டையிட்டனர்.

இப்படியாக நிறைய பிரச்சினைகள் படப்பிடிப்பு தளத்தில் நடந்தது. சொல்ல முடியாத தடைகள் படத்திற்கு வந்தது. ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு நடத்துக்கொண்டிருக்கும்போது திடீரென அங்கிருந்து நகர்ந்து சென்று தனியாக அமர்ந்து தேம்பி அழுவேன். ஒரு நிமிடம் நான் தற்கொலை செய்துகொள்ள கூட நினைத்தேன். அதை நான் ஊக்குவிக்கவில்லை. எதற்காக சொல்கிறேன் என்றால் ஒரு படம் உருவாவது சாதாரணமல்ல. உயிரை கொடுத்து உழைக்கிறோம். முள்காட்டுக்குள் நடக்கவிட்டு கபடி ஆடச்சொன்னார் இயக்குநர். “என்னால் முடியவில்லை; ரத்தம் வருகிறது’’ என்றேன். “அதெல்லாம் சரியாகிடும்” என கூறி என்னை விளையாட வைத்தார். இப்படியாக பல கஷ்டங்களைக்கடந்து படம் வெளியாவது மகிழ்ச்சி” என்றார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்