“அது பாலையாவால் மட்டுமே முடியும்; என்னால் முடியாது” - ரஜினி பேச்சு

By செய்திப்பிரிவு

“எனது நண்பர் பாலையா பார்வையாலே கொல்லுகிறார். அவர் தொட்டாலே கார் பறந்து செல்கிறது. இதை நான், சல்மான் கான், ஷாருக்கான், அமிதாப் பச்சன் யார் செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், பாலையாசெய்தால் ஏற்றுக்கொள்வார்கள்” என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

ஆந்திராவின் மறைந்த முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமராவின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நேற்று விஜயவாடாவில் நடைபெற்றது. என்.டி ராமராவ் குடும்பத்தினர் நடத்திய இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தரேஸ்வரி, என்டி ராமராவ் மகன் பாலகிருஷ்ணா ஆகியோர் உட்பட ராமாராவ் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், “என்டிஆரின் ‘பாதாள பைரவி’ (Pathala Bhairavi) படம் தான் நான் சிறுவயதில் முதன்முறையாக பார்த்த படம். பெரிய திரையில் இப்படத்தை பார்த்து ரசித்தேன். படத்தில் பைரவி கதாபாத்திரம் எனக்குள் பெரியப பாதிப்பை உண்டாக்கியது. என்னுடைய முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் என்னுடைய முதல் வசனமே ‘பைரவி வீடு இது தானா?’ என்பது தான்.

பல்வேறு படங்களில் நடித்த பிறகு என்னிடம் வந்து சேர்ந்தது ‘பைரவி’ திரைப்படம். இந்தப்படத்தின் டைட்டிலே கேட்டதும் எனக்கு நினைவுக்கு வந்தவர் என்டிஆர் தான். நான் பேருந்து நடத்துனராக இருந்தபோது ‘குருக்‌ஷ்ட்ரம்’ (Kurukshtram) என்ற நாடகத்தில் என்டிஆர் போல் நடித்தேன். என்னுடைய நண்பர்கள் நாடகத்தைப்பார்த்து என்னை உற்சாகப்படுத்தி, பெரிய வில்லனாக வருவாய் என்றனர்.

நான் நடிக்க வந்ததற்கு விதையாக அமைந்த சம்பவம் இது. என்டிஆருடன் இணைந்து ‘டைகர்’ படத்தில் பணியாற்றியபோது எனக்கு பதற்றமாக இருந்தது. அப்போது நான் அதிகம் கோவப்படும் நபராக இருந்தேன். தயாரிப்பாளர்கள் முன்பணத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு என்னை படத்திலிருந்து நீக்கும்படியும் சொன்னார்கள். அப்போது என்னை நன்றாக கவனித்துக் கொள்ளும்படியும், என் எதிர்காலத்தை பாதிக்க விரும்பவில்லை என்றும் கூறியவர் என்.டி.ஆர். அவரிடமிருந்து நான் ஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன்” என்றார்.

பாலையா குறித்து பேசுகையில், “எனது நண்பர் பாலையா பார்வையாலே கொல்லுகிறார். அவர் தொட்டாலே கார் பறந்து செல்கிறது. இதை நான், சல்மான் கான், ஷாருக்கான், அமிதாப் பச்சன் யார் செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் பாலைய்யா செய்தால் ஏற்றுக்கொள்வார்கள். ஏனெனில் தெலுங்கு மக்கள் பாலையாவை என்டிஆராக பார்க்கிறார்கள். அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து பல சாதனைகளை நிகழ்த்த வேண்டுமென இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE