மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்புக்கு தற்காலிக தடை

By த.அசோக் குமார்

தென்காசி: தென்காசி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நடந்த நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்பட படப்பிடிப்புக்கு தற்காலிக தடைவிதித்து மாவட்ட ஆட்சியல் துரை.ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம், மத்தளம்பாறை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக வனப்பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உரிய அனுமதி பெறாமல் வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதால் வன விலங்குகள் பாதிக்கப்படுவதாகவும், மலைப் பகுதியில் உள்ள வன விலங்குகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலங்களில் புகுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நடந்த கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு தற்காலிக தடை விதித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நிர்வாகம், தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறை அனுமதி பெறாத காரணத்தால் படப்பிடிப்புக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE