‘கேப்டன் மில்லர்’ முதல் ‘ஓஜி’ வரை - ப்ரியங்கா மோகனுக்கு வரிசை கட்டும் படங்கள்

By செய்திப்பிரிவு

நடிகை பிரியங்கா மோகன் தமிழ் திரையுலகில் பிஸியான நடிகையாக உருவெடுத்திருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் திரைக்கு வர காத்திருக்கின்றன.

கடந்த 2019-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘ஓந்த் கதே ஹெல்லா’ (Ondh Kathe Hella) படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் ப்ரியங்கா அருள் மோகன். அதே ஆண்டு, ‘நானிஸ் கேங் லீடர்’ (Nani's Gang Leader) படத்தின் மூலம் தெலுங்கில் நடிகையாக அறிமுகமானார். 2021-ம் ஆண்டில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி. இப்படியாக நடிகையாக சினிமாவில் நுழைந்த அடுத்தடுத்த படங்களில் கன்னடம், தெலுங்கு, தமிழ் படங்களில் கால் பதித்தார்.

தமிழில் அவரது நடிப்பில் கடந்தாண்டு ‘எதற்கும் துணிந்தவன்’, ‘டான்’ படங்கள் வெளியாகின. இந்நிலையில் அடுத்தடுத்து முண்ணி நடிகர்களுடன் நடிக்கிறார் ப்ரியங்கா மோகன். அதன்படி ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷூடன் நடித்து வருகிறார். அடுத்ததாக எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜெஆர்30’ என அழைக்கப்படும் தலைப்பிடப்படாத படத்தில் நடிக்கிறார். பவன் கல்யாணனின் ‘ஓஜி’ படத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து கவின் நடிக்கும் படத்தில் நாயகியாக ப்ரியங்கா மோகனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE