ரெட் ஜெயன்ட் சொத்து ரூ.2,000 கோடியா? - அண்ணாமலைக்கு உதயநிதி ரியாக்‌ஷன்

By செய்திப்பிரிவு

“இப்போது கூட 3 நாட்களுக்கு முன்பு ஒருவர் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.2,000 கோடி என்று கூறியுள்ளார். இங்கிருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் உண்மை தெரியும். அது குறித்து நான் பேச விரும்பவில்லை” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தக்சின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு’ (Dakshin Media & Entertainment Summit 2023) சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், “கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக சினிமா சார்ந்த நிகழ்வுகளிலிருந்து விலகியிருக்கிறேன். இந்த திரைத்துறையில் 2007-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பயணித்திருக்கிறேன். ரெட் ஜெயன்ட் மூவிஸ் கிட்டத்தட்ட 15 வருடமாக இயங்கி கொண்டிருக்கிறது. 15 படங்களை நேரடியாக தயாரித்திருக்கிறேன்; தயாரித்திருந்தேன். 15 படங்கள் நடித்துள்ளேன். தவிர, நல்ல படங்களை வெளியிட்டிருக்கிறேன்.

இப்போது கூட 3 நாட்களுக்கு முன்பு ஒருவர் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2 ஆயிரம் கோடி ரூபாய் என கூறியிருக்கிறார். இங்கிருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் உண்மை என்னவென்று நன்றாகவே தெரியும். அது குறித்து நான் பேச விரும்பவில்லை. ஒரு தயாரிப்பாளருக்கு மற்றொரு தயாரிப்பாளரின் கஷ்டம் தெரியும். உங்கள் எல்லோருக்கும் தெரியும் ரெட் ஜெயன்டின் மதிப்பு என்ன என்பது. போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டு செல்கிறார்கள்” என்றார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட 12 பேரின் சொத்துப் பட்டியல் என்ற சில விவரங்களை வீடியோ பதிவாக வெளியிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை தொடங்கியபோது, அவருக்கு எந்தவித தொழிலும், சொத்தும் கிடையாது. தற்போது ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மதிப்பு ரூ.2,010 கோடி” என குறிப்பிட்டிருந்தார். அவரது குற்றச்சாட்டு குறித்து உதயநிதி இப்போது பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE