‘‘நடிகர் விமலுக்கு பொறுப்பு வேண்டும்” - இயக்குநர் அமீர் கருத்து

By செய்திப்பிரிவு

“பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களுக்கே புரமோஷன் தேவைப்படும் சூழலில், ‘குலசாமி’ படத்தின் நாயகன் விமல் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டிருக்க வேண்டும்” என இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.

விமல் , தான்யா ஹோப் நடிப்பில், ‘பில்லா பாண்டி’ படங்களை இயக்கிய சரவண சக்தி இயக்கத்தில், விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம் 'குலசாமி'. ஏப்ரல் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநரும் நடிகருமான அமீர், “பொன்னியின் செல்வன் படத்திலேயே ஐஸ்வர்யா ராய் தொடங்கிய பெரிய நடிகர்கள் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். அதையும் தாண்டி மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், லைகா என இவ்வளவு இருந்தும், அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது ரஜினியும், கமலும்தான்.

தற்போது படத்தின் இரண்டாம் பாகம் வர இருக்கிறது. தற்போது அந்த நடிகர்கள் புரமோஷனுக்காக சென்று கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பார்க்கும்போது இவ்வளவு பெரிய படத்திற்கே பெரிய புரமோஷன் தேவைப்படுகிறது. அது சரி, தவறு என சொல்ல முடியாது. அப்படி ‘குலசாமி’ படத்தின் நாயகன், நாயகி இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இல்லை. நடிகர்களுக்கு பொறுப்பு வேண்டும்.

நான் 2003-ம் ஆண்டு ‘ராம்’ படத்தை சொந்தமாக எடுத்து லட்ச லட்சமாக முதலீடு செய்தேன். சர்வதேச விருதுகளை படம் வாங்கி கொடுத்தது. தொண்டியில் படம் 3 நாட்கள் தான் ஓடியது. விமல் என்ற கதாநாயகனை நம்பி பணம் முதலீடு செய்துள்ளார் என்றால் அதில் நாயகனுக்கும் பங்கு உண்டு. வெறும் நடித்து மட்டும் சென்றுவிடுவேன் என்பது ஏற்க முடியாது” என்றார்.

இதையடுத்து, விமல் வரவில்லை என சொல்கிறீர்களே... அஜித் எந்த விழாவுக்கும் வருவதில்லையே? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “நான் சொல்வது இன்று சினிமா என்னவாக இருக்கிறது என்பதை பேசுகிறேன். இன்று படத்தை புரமோஷன் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. இன்று முதல் வார வசூல் மட்டும் தான் சினிமா. அப்படி பெரிய நடிகர்களே புரமோஷனுக்கு தாமாக வந்து போராடுகிறார்கள். சின்ன பட்ஜெட் படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு பொறுப்பு வேண்டும்.

சென்சார் செய்யப்பட்ட பிறகு ஒரு படத்திற்கு தனிமனித அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ, சமூக அமைப்புகளோ தடை சொல்வது ஏற்புடையதல்ல. அதே நேரம் படத்திலிருந்து வரும் கருத்துகள் குழப்பத்தை ஏற்படுத்தினால் அதை தவிர்க்க வேண்டும். திரைப்படங்கள் மூலம் அரசியல் விழிப்புணர்வை தான் ஏற்படுத்த வேண்டும். தவிர கலவரங்களை ஏற்படுத்தக் கூடாது” என்றார்.

மேலும் அண்ணாமலை குறித்து பேசுகையில், “நானும் அன்று ஆர்வமாக இருந்தேன். ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடுவார் என்று. ஆனால், அவரோ சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளார். அது தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட கணக்கு வழக்குதான். இது புதிதல்ல. தமிழக ஆட்சிக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்துவது அவரது அஜெண்டா. 2ஜி போல ஏதோ முயற்சி செய்தனர். அது புஸ்வானமாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் காலூன்றிவிட்டனர். தமிழகத்தில் பேரணி நடந்தது எனக்கு வருத்தம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE