திருவின் குரல்: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

கட்டிட கான்ட்ராக்டர் மாரிமுத்து(பாரதிராஜா)வின் மகன் திரு (அருள்நிதி), வாய்பேச முடியாதவர். அத்தை மகள் பவானியுடன் (ஆத்மிகா) அவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. கட்டிடம் கட்டும் தளத்தில் நிகழும் விபத்தில் படுகாயமடையும் மாரிமுத்துவை, அரசு மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அங்கு லிஃப்ட் ஆபரேட்டர் ஆறுமுகத்துடன் (அஷ்ரஃப்) திருவுக்கு மோதல் ஏற்படுகிறது. ஆறுமுகமும் அங்கு பணியாற்றும் சிலரும் இரவுநேரங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைச் செய்கிறார்கள். அவர்களுடனான மோதலால், மாரிமுத்துவுக்கும் அவர் குடும்பத்துக்கும் வரும் துன்பங்களில் இருந்து திரு எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை.

தந்தை -மகன் பாசத்தையும் அரசுமருத்துவமனை ஊழியர்களின் குற்றங்களையும் வைத்து சென்டிமென்ட் கலந்த க்ரைம் திரில்லர் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார் அறிமுகஇயக்குநர் ஹரிஷ் பிரபு. யாரையும்கொல்லத் தயங்காத குற்றவாளிகளிடமிருந்து வாய் பேச முடியாத, காது கேட்காத நாயகன், தன் குடும்பத்தைக் காப்பாற்றுவது என்னும் அழகான ஒன்லைனைப் பிடித்த இயக்குநர், திரைக்கதையில் அதற்கு ஏற்ற சுவாரசியத்தைச் சேர்க்கத் தவறிவிட்டார்.

தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்கும் அறச்சீற்றம் கொண்ட நாயகன், அவர் மீது அன்பைப் பொழியும் தந்தை, அத்தை மகளுடன் காதல், அக்கா மகள் மீதான பாசம் என இந்தப் படத்துக்குரிய மனநிலையை தொடக்கக் காட்சிகள் ஏற்படுத்தி விடுகின்றன. மருத்துவமனைக் காட்சிகள் தொடங்கியதும் அறிமுகமாகும் வில்லன்களின் கொடூரச்செயல்கள் படபடப்பை ஏற்படுத்தினாலும் ஒரு கட்டத்துக்கு மேல் ஒரேவிஷயத்தைத் மீண்டும் மீண்டும் பார்க்கும் உணர்வைத் தருகின்றன. இவ்வளவு குற்றங்களைச் செய்யும் இந்த நால்வர் குழு, அரசு மருத்துவமனை ஊழியர்கள் என்பதைத் தவிர,பார்வையாளர்களுக்கு வேறெதுவும் சொல்லப்படுவதில்லை. எனவே இவர்களின் செயல்பாடுகள் ஒரு கட்டத்துக்கு மேல் அலுத்துவிடுகின்றன.

இவர்களிடமிருந்து குடும்பத்தைக் காப்பாற்றும் நாயகனின் போராட்டத்தில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பது மட்டுமே நல்ல அம்சம். அதைத் தாண்டி, நாயகன் இத்தகையச் சூழலில் சிக்கிக்கொண்டிருப்பது தொடர்பான காட்சிகள் எந்த ஈர்ப்பையும் தரவில்லை.

அரசு மருத்துவமனை ஊழியர்கள்மருத்துவமனைக்குள் இருந்தபடியே கொலை செய்வது, மருத்துவ அறிக்கைகளை மாற்றி வைப்பது உள்ளிட்ட குற்றங்களைச் செய்வதுபோல் காண்பித்திருப்பது வேண்டாத விபரீத சிந்தனையின் வெளிப்பாடு.

வாய்பேச முடியாத, அன்பும்அற உணர்வும் மிக்க இளைஞனாகஅருள்நிதி சிறப்பாக நடித்திருக்கிறார். பாரதிராஜா கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைத் தந்திருக்கிறார். ஆத்மிகா ஒரு பாடலுக்கும் சில காட்சிகளுக்கும் வந்துவிட்டுப் போகிறார். வில்லன் அஷ்ரஃப் கவனம் ஈர்க்கிறார். சாம் சி.எஸ். இசையில் “அப்பா அப்பா” பாடல் பாச உணர்வுகளைக் கிளர்த்துகிறது. பின்னணி இசை பரவாயில்லை. அரசு மருத்துவமனையைக் கண்முன் நிறுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளரும் கலை இயக்குநரும் பாராட்டுக்குரியவர்கள்.

ஒரு சென்டிமென்ட் கிரைம் திரில்லர் படத்தைக் கொடுக்கும் முயற்சி, திரைக்கதை தடுமாற்றத்தால் சறுக்கியிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

26 mins ago

விளையாட்டு

39 mins ago

இந்தியா

46 mins ago

வணிகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்