கர்நாடக தேர்தல்: இந்தியக் குடியரசு கட்சி வேட்பாளருக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிடும் இந்தியக் குடியரசு கட்சியின் வேட்பாளர் எஸ்.ராஜேந்திரனுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் கோலார் தங்கவயல் தொகுதியில் இந்தியக் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜேந்திரன் போட்டியிடுகிறார். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்தத் தொகுதியில் தமிழில் பேசி வாக்காளர்களை அவர் ஈர்த்து வருகிறார்.

காங்கிரஸ், பாஜக சார்பில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளதால் எஸ்.ராஜேந்திரன், 'மண்ணின் மைந்தன்' என்ற முழக்கத்தை கையில் எடுத்துள்ளார். கோலார் தங்கவயலில் உள்ள ராபர்ட்சன் பேட்டை, மாரிக்குப்பம், சாம்பியன் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் தமிழர்களிடம் வீதி வீதியாக சென்று அவர் வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் கோலார் தங்கவயல் பகுதியில் நடிகர் விக்ரமை வைத்து 'தங்கலான்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த பா.ரஞ்சித் எஸ்.ராஜேந்திரனை ஞாயிறன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அப்போது பா.ரஞ்சித் கூறுகையில், ''கோலார் தங்கவயல் தொகுதி இந்தியக் குடியரசு கட்சியின் சொந்த‌ தொகுதி. இந்தக் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் பல முறை வெற்றிப் பெற்றுள்ளனர். தற்போது இந்தத் தொகுதியை இந்தியக் குடியரசு கட்சி இழந்துள்ளது. இழந்தத் தொகுதியை மீண்டும் கைப்பற்றும் சூழல் தற்போது அமைந்துள்ளது. கோலார் தங்கவயல் தமிழர்கள் தங்களின் பலத்தை மீண்டும் நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, தங்கவயல் மக்கள் எஸ்.ராஜேந்திரனை தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE