மருத்துவமனையில் நடக்கும் ஈகோதான் 'திருவின் குரல்': அருள்நிதி

By செ. ஏக்நாத்ராஜ்

தொடர்ந்து த்ரில்லர் கதைகளில் நடித்து வரும் அருள்நிதியின் அடுத்த படம், ‘திருவின் குரல்’. வரும் 14ம் தேதி வெளியாகும் இந்தப் படம் ‘எமோஷனல் டிராமா’ என்கிறார் படத்தை இயக்கி இருக்கும் அறிமுக இயக்குநர் ஹரிஷ் பிரபு. பாரதிராஜா, ஆத்மிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசை அமைத்திருக்கிறார். படத்தின் டீசர் கவனிக்கப்பட்டுள்ள நிலையில், அருள்நிதியைச் சந்தித்தோம்.

இந்தப் படத்துல வாய்ப்பேச இயலாத இளைஞனாக நடிச்சிருக்கீங்களாமே?

ஆமா. அதிகமா த்ரில்லர் கதைல நடிச்சிட்டேன். இப்ப வேற கதைல நடிக்கலாம்னு நினைச்சப்ப, ஹரிஷ் பிரபு சொன்ன கதை இது. அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில அரசு மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போறாங்க. அங்க வேலை செய்றவங்களுக்கும் அந்த வாய்ப்பேச இயலாத இளைஞனுக்கும் நடக்கிற ஈகோதான் படம். பாரதிராஜா சார் அப்பாவா நடிச்சிருக்கார். ஆத்மிகா அத்தை மகளா நடிச்சிருக்காங்க. நான் இதுக்கு முன்னால நடிச்ச படங்கள்ல, யாரோ ஒருத்தர் எதையோ பண்ணியிருப்பாங்க. அதை நான் கண்டுபிடிக்கிற மாதிரிதான் கதை இருந்திருக்கும். ஆனா, இது நடிப்பை வெளிப்படுத்த அதிக வாய்ப்புள்ள கதை. நிறைய எமோஷனல் காட்சிகள் இருக்கு.

உண்மை சம்பவக் கதையா?

இல்லை. ஆனா, சில சின்ன சின்ன சம்பவங்கள் எல்லார் வாழ்க்கையிலயும் நடந்திருக்கும். அரசு மருத்துவமனையில சில பேர் பண்ற செயல்கள் கோபத்தை ஏற்படுத்தும். அதை வச்சு இயக்குநர் கற்பனையா உருவாக்கின கதைதான் இது. சில படங்கள், சில நடிகர்களுக்கு மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கும். இது எனக்கு அப்படியொரு படமா இருக்கும். சாதாரண மக்கள் மருத்துவமனை போனா என்ன மாதிரியான பிரச்சினைகளை சந்திப்பாங்க அப்படிங்கறதை இயல்பா சொல்லியிருக்கார், இயக்குநர்.

பாரதிராஜா கூட நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?

அவர் பெரிய இயக்குநர். வெளியில இருந்து பார்க்கும் போது அவர் மேல பயம் கலந்த மரியாதை இருந்தது. பலரை நடிக்க வச்சுப் பார்த்தவர். அதனால நம்ம நடிப்பை என்ன சொல்வாரோங்கற தயக்கம் இருந்தது. ஆனா, படம் ஆரம்பிச்ச பிறகு ஜாலியா பழக ஆரம்பிச்சார். எங்ககிட்ட இருந்த தயக்கத்தைப் போக்க வச்சு, எளிமையா நடந்துகிட்டார். பிறகு ஒரு நாள் ‘என் பையன் மாதிரி ஆயிட்டான்’ன்னு இயக்குநர் ஹரிஷ் பிரபுகிட்ட சொல்லியிருக்கார். ஒரு நாள், ‘நீங்க ரொம்ப டென்ஷனா இருப்பீங்க, அடிச்சிடுவீங்கன்னுலாம் உங்களை பத்தி சொல்வாங்க. பார்த்தா அப்படி தெரியலையே’ன்னு கேட்டேன். உடனே, ‘உங்ககிட்ட ஒரு நடிகனாதான் பழகிட்டிருக்கேன். டைரக்டரா என்னை நீங்க பார்க்கலை’ன்னு சொன்னார். அப்ப ஒரு மான்டேஜ் சீன் எடுக்கும்போது, அவரை டைரக்ட் பண்ண சொன்னோம். அவர் மைக்கை பிடிச்சு, ஆக்‌ஷன்னு அவர் ஸ்டைல்ல சொன்னார். நானும் ஆத்மிகாவும் நடந்து வந்தோம். திடீர்னுகட் கட்டுன்னார். என்னன்னு கேட்டோம். ‘ரெண்டு பேர்கிட்டயும் உணர்ச்சியே இல்லை. ‘ஒன் மோர்’னு சொன்னார். உடனே நாங்க, ‘சார் நீங்க நடிகராகவே இருங்க’னு சொல்லிட்டோம்.

‘பிருந்தாவனம்’ படத்துலயும் வாய் பேச முடியாத கேரக்டர் பண்ணியிருந்தீங்களே...

கதை வேறதானே. ‘பிருந்தாவனம்’ படத்துல வாய் பேச முடியாதவனா நடிச்சிருந்தாலும் கதைப்படி ஒரு கட்டத்துல அது மாறும். ‘பேசினா எல்லாத்தையும் இழந்திருவேன், அதனால அதைமறைச்சுட்டு இருந்திட்டேன்’னு அந்தக்கதையில இருக்கும். அந்தப் படத்துக்காக விஜயாங்கற மேடம், வாய்ப்பேச முடியாதவங்க எப்படி நடந்துப்பாங்க, அவங்க உணர்வுகள் எப்படி இருக்கும்னு சொல்லிக் கொடுத்தாங்க. நம்மைவிட அவங்க அதிகமா சந்தோஷப்படுவாங்க. அதே நேரம் அதிகமா கோபப்படுவாங்கன்னு சொல்வாங்க. அவங்க இந்தப் படத்துலயும் உதவி பண்ணினாங்க. டைரக்டர் இதுல அதிகம் சைகை மொழியை பயன்படுத்த வேண்டாம்னு சொல்லிட்டார். அதனால நான் பயன்படுத்த மாட்டேன். எங்கிட்ட பேசறவங்க சைகை மொழியில பேசுவாங்க. இதுக்காக மத்தவங்க அதை கத்துக்கிட்டாங்க.

பாண்டிராஜ் இயக்கத்துல ‘வம்சம் 2’ பண்ண போறீங்களாமே?

இல்லை. அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்துல நான் நடிக்கிற ஒரு படத்துக்கு பாண்டிராஜ் சார், கதை, திரைக்கதை எழுதறார். அது விவசாயம் சம்மந்தப்பட்ட கதை. அடுத்து, கவுதம ராஜ் இயக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’, ‘டிமான்டி காலனி 2’, ‘அடங்கமறு’ அசோசியேட் விஜய் இயக்கும் படம், இன்னாசி பாண்டியன் இயக்கும் படங்கள்ல நடிக்க இருக்கிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

சினிமா

24 mins ago

சினிமா

29 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்