கோவையில் சங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சி - ஏராளமான ரசிகர்கள் நேரில் ரசித்தனர்

By செய்திப்பிரிவு

கோவையில் நடைபெற்ற பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் கேட்டு ரசித்தனர்.

ஆதித்யா கல்வி குழுமம், மௌன ராகம் முரளி, அருண் ஈவென்ட்ஸ், டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் டாக்டர் எஸ்.ரூபன் இணைந்து நடத்திய, ரவி முருகையாவின் ‘தாய் மண்ணே’ வழங்கும், பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சி, கோவை ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

சங்கர் மகாதேவன், அவர் பாடிய திரைப்பட பாடல்கள் மற்றும் தேச பக்தி பாடலான தாய் மண்ணே உள்ளிட்ட பாடல்களை பாடினார். 4 மணி நேரம் இடைவிடாது நடைபெற்ற இசை நிகழ்ச்சியை சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரில் கேட்டு ரசித்தனர்.

‘தாய் மண்ணே’ பாடல் குறித்து வாஸன் எஸ்டேட்ஸ் நிறுவனர், உரிமையாளர் ரவி முருகையா கூறும்போது, “கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, கடந்த 2000-ம் ஆண்டில் ‘தாய்மண்ணே’ என்ற பாடலை நான் எழுதினேன். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ் பாடலை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும், இந்தி பாடலை முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரும் வெளியிட்டனர்.

இரண்டு பாடல்களின் வீடியோக்களை சேர்த்து யுடியூப்பில் மொத்தம் சுமார் 40 லட்சம் பேர் பார்த்துள்ளனர். வரும் நாட்களில் தெலுங்கு, கன்னடம் ஆகிய 2 மொழிகளிலும் ஒலிப்பதிவு செய்யப்பட உள்ளது” என்றார்.

இந்த நிகழ்வுக்கு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மீடியா பார்ட்னராக செயல்பட்டது. கற்பகம் ஜூவல்லர்ஸ், சுப்ரீம் மொபைல்ஸ், குரோபக்ஸ், வின்னர் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ், உயிர் ஆர்கானிக் பார்மர்ஸ் மார்க்கெட்,  கோகுலம் சிட் அண்ட் பைனான்ஸ் நிறுவனம், டோக்கியோ தமிழ்ச் சங்கம், யெஸ் ஈவன்ட்ஸ், ஸ்ரூசன் மைண்ட் மேட்டர்ஸ் ஆகியவை இணைந்து வழங்கின.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE