“அப்பாவுக்கும் எனக்கும் இடையில் ஒரு கோடு...” - நடிகர் கௌதம் கார்த்திக் நேர்காணல்

By கலிலுல்லா

‘ஆகஸ்ட் 16 1947’ திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், அந்தப் படம் குறித்து மட்டுமின்றி மனைவி மஞ்சிமா மோகன், அப்பா கார்த்திக், நடிகர் சிம்பு மற்றும் 10 ஆண்டுகால சினிமா வாழ்க்கை என பல விஷயங்களைப் பகிர்கிறார் நடிகர் கெளதம் கார்த்திக். அவர் உடனான நேர்காணல்...

கடந்த வாரம் ‘பத்து தல’, இந்த வாரம் ‘ஆகஸ்ட் 16 - 1947’ இரண்டு முக்கியமான படங்கள் உங்கள் நடிப்பில் வெளியாகியுள்ளது. திருமணத்துக்குப் பின் கரியரில் வேகம்..?

“உண்மையாகவே மஞ்சிமா மோகன் என் வாழ்க்கையில் வந்த பிறகு நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. படம் வெளியாவது புரொடக்‌ஷன் கையில்தான் உள்ளது. அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், என்னமோ மஞ்சிமா வந்த பிறகு எல்லாமே நன்றாக சென்றுகொண்டிருக்கிறது. திருமணம் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.”

‘ஆகஸ்ட் 16 - 1947’ படம் உங்களுக்கு எப்படி அமைந்தது? எந்தத் தருணத்தில் இந்தப் படத்தில் நடிக்கலாம் என உங்களுக்குத் தோன்றியது?

“2018-ம் ஆண்டின் தொடக்கத்தில் பொன்குமார் படத்தின் ஸ்கிரிப்ட்டைச் சொன்னார். ஆனால் அந்த நேரத்தில் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக படம் நின்றுவிட்டது என நினைத்தேன். அப்படியிருக்கும்போது 2019-ம் ஆண்டு இறுதியில் முருகதாஸ் தொலைபேசியில் அழைத்து, ‘இந்தப் படத்தை நான் தயாரிக்கிறேன். என்னை நம்பி வா’ என்றார். ‘நீங்கள் ஏற்கெனவே எனக்கு ‘ரங்கூன்’ படத்தை கொடுத்தீர்கள். உங்களை நம்பாமல் எப்படி. நிச்சயம் இந்தப் படத்தில் நடிக்கிறேன்” என அவரிடம் சொன்னேன். இப்படித்தான் இந்தப் படம் எனக்கு அமைந்தது.”

49 நாட்கள் எந்தவொரு இடைவெளியும் இல்லாமல் படத்தை முடித்திருக்கிறீர்கள். செல்ஃபோன் என எதுவுமே இல்லாமல் பணியாற்றியது குறித்து...

“பொதுவாகவே நான் அதிகமாக ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தமாட்டேன். நான் வளர்ந்தது எல்லாம் ஊட்டி என்பதால் அங்கே அதிகமாக செல்ஃபோன் பயன்படுத்த மாட்டேன். அதனால் செல்ஃபோன் இல்லை என்ற எந்த ஏக்கமும் இல்லை. ஆனால், சிறிய வருத்தம் என்னவென்றால், வீட்டில் பேச முடியவில்லை. அப்படி பேச வேண்டுமென்றாலும், மலை மீது ஏறிச் சென்றுதான் பேச வேண்டும். மற்றபடி அந்த இடத்தில் இருக்கும்போது சந்தோஷமாக இருந்தது. பரமன் கதாபாத்திரமாகவே வாழ்ந்தேன். அங்க ஊர் ஒன்று இருந்தது. அந்த மக்கள் தேன், வேர்க்கடலை என எல்லாமே கொடுத்து நன்றாகப் பார்த்துக்கொண்டனர். இயற்கையுடன் இயைந்து வாழ்ந்தது சிறந்த அனுபவமாக இருந்தது.”

படத்தில் நடிக்க சவாலாக இருந்த காட்சிகள் என்று எதுவும் இருக்கிறதா?

“எனக்கு எல்லா சீனிலும் நடிக்கவும் கஷ்டமாகத்தான் இருந்தது. பீரியட் படம் என்பதால் எமோஷனல் தேவை. நடந்து வரும் காட்சியிலும்கூட அந்த எமோஷன், ஸ்லாங் எல்லாம் தேவைப்பட்டது. இரண்டு மலைகளுக்கு இடையில் செட் அமைத்தோம். சவால் என்றால் அந்த நகரத்திலிருந்து தள்ளி வெயிலும், குளிரும் அடங்கிய ஒரு கிராமத்தில் பணியாற்றியது தான். அதையும் தாண்டி அவர்களின் அன்பு, பாசம் தான் அதையெல்லாம் மறக்கடித்தது. படம் முடித்து வெளியே வரும்போது சொல்ல முடியாத உணர்வு இருந்தது. காரணம் அது வேறொரு உலகம். எல்லோரும் ஒரு குடும்பமாகத்தான் இருந்தோம். மொத்த கிராமமும் பரிச்சயமாக இருந்தது. எல்லா நடிகர்களிடமும் கதை இருந்தது. அதை கேட்க நேரமும் இருந்தது. ஹாஸ்டல் வாழ்க்கை போல இருந்தது.”

கலை இயக்குநர் சந்தானம் குறித்து...

“அவரின் மறைவு திரைத்துறைக்கு பெரிய இழப்பாக இருக்கும். இந்தப் படத்தின் வெற்றி அவருக்குதான் சமர்பணம். இந்தப் படத்தின் மூலம் அவர் வாழ்ந்துகொண்டிருப்பார் என நம்புகிறேன். எப்பவுமே சிரித்துப் பேசும் நல்ல மனிதர். அவர் எதாவது வேலை பார்த்துகொண்டேயிருப்பார். எந்த பிரஷரும் அவரிடம் இருக்காது. கொடுத்த பட்ஜெட்டில் பிரமாண்டமான ஒரு அவுட்புட்டை கொடுத்திருக்கிறார். உண்மையாகவே இப்படியான ஒரு கலை இயக்குநரை நான் பார்த்ததில்லை.”

‘ரங்கூன்’ படமும் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர்தான் இயக்கினார். தற்போது 1947 படத்தையும் ஏ.ஆர்.முருகதாஸின் மற்றொரு உதவி இயக்குநர் தான் இயக்கியிருக்கிறார். இது தற்செயலானதா?

“இதை நான் எதிர்பார்க்கவில்லை. திட்டமிடவும் முடியாது. அது திடீரென நடந்தது. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர்கள் இருவரிடமுமே திறமை உள்ளது. எதாவது ஒரு கேள்வி கேட்டால் அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் விளக்கம் கூறுவர். அவர்கள் பயின்று வந்த இடம் அத்தனை வலிமையானது. என்னுடைய கரியர் மோசமாக இருந்த சமயத்தில், என்னால் மீண்டு வரமுடியாதோ என நானே நினைத்தபோது ‘ரங்கூன்’ என்ற படத்தைக் கொடுத்து ஹிட்டாக்கினார் ராஜ்குமார். அது எனக்கு அடுத்தகட்டத்திற்கு நகர பெரும் உதவியாக இருந்தது. என்னுடைய 10 வருட பயணத்தை நிறைவு செய்யும் வகையில் தற்போது 1947 படம் அமைந்துள்ளது.”

இந்த 10 வருடங்களில் சினிமாவில் நீங்கள் கற்றதும், இழந்ததும் என்ன?

“நிறைய உள்ளது. 10 வருடத்தில் என்னுடைய வாழ்க்கை எப்படி செல்லும் என்ற தெளிவு கிடைத்தது. என்னுடைய வாழ்க்கைத் துணையை இந்த திரையுலகம்தான் கொடுத்தது. மொத்த வாழ்க்கையையும் உருவாக்கியது இந்த சினிமாதான். ‘கடல்’ படத்தில் நடிக்கும்போதே கல்லூரியை கட் அடித்து விட்டுதான் வந்து நடிப்பேன். பிறகு கல்லூரிக்குச் செல்ல 2 வருடம் ஆகிவிட்டதால் மீண்டும் தொடக்கத்திலிருந்து படிக்கவேண்டிய சூழல். அப்போது மணிரத்னம் என்னிடம், ‘இது தான் உன்னுடைய எதிர்காலம். இங்கேயே எல்லாவற்றையும் கற்றுக்கொள்’ என சொன்னார். அவருடைய வார்த்தை உண்மையானது. எனக்கும் என் குடும்பத்துக்கும் சோறு போடுவது இந்த திரைத்துறை தான். என்னுடைய கோயில் இது. ‘கடல்’ படத்தில் மணிரத்னத்திடம் நிறைய திட்டு வாங்கியிருக்கிறேன். பதற்றத்தில் நிறைய சொதப்பினேன். நிறையவே அவர் சொல்லிக்கொடுத்து எனக்கு புரிய வைத்தார்.”

அப்பா கார்த்திக், திரையுலகில் தனித்துவமான நடிகர். அவர் இடத்தை நாம் அடையவேண்டும் அல்லது அவர் பெயரை காப்பாற்ற வேண்டும்... இப்படியான அழுத்தம் உங்களுக்கு இருந்ததா? அதை எப்படி எதிர்கொண்டீர்கள்?

“எனக்கு அந்த அழுத்தம் தொடக்கத்திலிருந்தே இல்லை. அப்பா உருவாக்கிய பாதையில் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. எனக்கு என்ன வருகிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய ஸிகிரிப்ட்டுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என நினைப்பேன். அதையும் தாண்டி அப்பாவைப்போல சில இடங்களில் நடிப்பின் சாயல் இருக்கிறது என்றால் அது ஒரே ஜீன் என்பதால் தான். ஆனால் அப்பாவைப்போல யாராலும் நடிக்க முடியாது. அவர் தனித்துவமான நடிகர். அதை நான் ஒருபோதும் பின்பற்ற நினைத்ததில்லை. எனக்கு வருவதை செய்கிறேன். அவ்வளவு தான்.”

இந்தப் படங்கள் நடிக்கலாமா? இந்த ஸ்கிரிப்டை தேர்ந்தெடுக்கவா? என அப்பாவிடம் சென்று பரிந்துரைகளைக் கேட்டது உண்டா?

“எனக்கும் அப்பாவுக்கும் இடையிலே ஒரு கோடு போட்டுக்கிட்டோம். என்னுடைய படங்களில் அவரும், அவருடைய படங்களிலும் நானும் தலையிடமாட்டோம். அது உடைந்த இடம் ‘சந்திரமௌலி’ படம் மட்டும்தான். அதில் மட்டும் தான் இருவரும் இணைந்து கலந்தாலோசித்தோம். மற்றபடி இருவரும் நடிக்கும் படங்களில் தலையிடவே மாட்டோம். சொல்லப்போனால் 1947 ஆகஸ்ட் 16 இந்தப் படத்தில் நான் நடிக்கிறேனா என்பதுகூட அவருக்குத் தெரியாது. இதை ஒரு ரூலாக பின்பற்றி வருகிறோம்.”

‘ஹர ஹர மஹாதேவகி’, ‘ரங்கூன்’ எதன் அடிப்படையில் இந்தப் படங்களை தேர்வு செய்கிறீர்கள்?

“புதிது புதிதாக எதையாவது செய்யலாம் என நினைத்து தான் படங்களை தேர்வு செய்கிறேன். ஒரு சில விஷயங்கள் நன்றாக சென்றது. சில விஷயங்கள் எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை. தற்போது 2, 3 ஆண்டுகளாக கவனம் செலுத்தி படங்களைத் தேர்வு செய்யலாம் என நினைக்கிறேன். என்னுடைய கதாபாத்திரம் யாருடைய மனதையும் புண்படுத்திவிடக்கூடாது என்ற நோக்கத்துடனும், அதேசமயம் புதிய முயற்சியாகவும் இருக்கும் படங்களை தேர்வு செய்கிறேன்.”

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் விஜய் சேதுபதி, ‘பத்து தல’ படத்தில் சிம்பு என பெரிய நடிகர்கள் படங்களில் நடிப்பதில் உங்களுக்கான ஸ்கீரின் ஸ்பேஸ் குறைவதாக நினைத்ததுண்டா?

“என் கதாபாத்திரம் என்ன என்பது மட்டும்தான் என் கவனத்தில் இருக்கும். என்னுடன் நடிக்கும் நடிகர்கள் குறித்து கவனம் செலுத்த மாட்டேன். எனக்கு சிம்புவுடன் வேலை செய்ய வேண்டும் என ஆசை. அவரின் அன்பு, பாசம் காரணமாக சிம்புவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். ‘ஸ்டூடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா சொல்லும்போது உடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.”

சிம்புவுக்கும் உங்களுக்குமான நட்பு குறித்து...

“சிம்புவைப் பொறுத்தவரை அவர் ஒருவர் மேல் பாசம் வைத்துவிட்டால் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். ஏதோ ஒரு ஆசீர்வாதத்தால் அவர் என் மீது அதீத அன்பைக் காட்டுகிறார். அது தவறாக போய்விடக்கூடாது என நினைக்கிறேன்.”

மஞ்சிமா மோகனை மீண்டும் திரையில் பார்க்க முடியுமா?

“கண்டிப்பாக பார்க்கலாம். ஆனால் அது எப்போது என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.”

திருமணத்தை உங்கள் சொந்த செலவில் செய்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு என்ன காரணம்?

“யாரிடமும் நான் காசு வாங்கக் கூடாது என நினைப்பேன். என்னால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்வேன். என் திருமணத்தை நானே செய்ய வேண்டும் என உறுதியாக இருந்தேன். அது எப்போதும் அப்படித்தான். கரோனா காலத்தில்கூட என் பைக், கார் எல்லாவற்றையும் விற்றுவிட்டேன். யாரிடமும் காசு வாங்கவில்லை. அப்போது எனக்கு துணை நின்றவர் மஞ்சிமா. அவர்தான் அந்த காலக்கட்டத்தில் நான் மேலே வர உதவியாக இருந்தார். பல்வேறு திட்டமிடலை செய்து கொடுத்தார். நான் என்ன முடிவு எடுத்தாலும் மஞ்சிமாவிடம் கலந்தாலோசித்து தான் முடிவெடுப்பேன். அதுதான் ஆரோக்கியமான உறவாக இருக்கும் என நினைக்கிறேன். இந்தப் படம் நடிக்க தொடங்கும்போதும் கூட மஞ்சிமாவிடம் தான் முதலில் சொன்னேன்.”

உங்களுக்கும் ‘குக் வித் கோமாளி’ புகழுக்குமான நட்பு?

“எனக்கு டிவி பார்க்கும் பழக்கமில்லை. அதனால் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி இருப்பதே எனக்கு தெரியாது. பிறகு நான் கூகுளில்தான் அவரைத் தேடிப் பார்த்தேன். ஷூட்டிங்கில் பொதுவாக எல்லோரும் என்னை நடிகராக பார்த்து தள்ளி நிற்பார்கள். ஆனால், புகழ் என்னை அப்படி பார்க்கவில்லை. நண்பராக பார்த்து நெருங்கி பழகினார். அது எனக்கு மிகவும் பிடித்துப்போனது. இப்போது ஃபேமிலி பிரண்டாகவே மாறிவிட்டார்.”

பேட்டியை வீடியோ வடிவில் காண:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

30 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்