‘விடுதலை கதை தொடர்பாக பல கேள்விகள் இருந்தன’  - விஜய் சேதுபதி பேச்சு

By செய்திப்பிரிவு

விஜய் சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘விடுதலை’. இளையராஜா இசை அமைத்த இதன் முதல்பாகம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடந்தது.

தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குநர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், நடிகை பவானிஸ்ரீ, ராஜீவ் மேனன் உட்பட படத்தில் பணியாற்றியவர்கள் கலந்துகொண்டனர்.

இதில், நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது: நான் ஒரு களிமண் போலதான் படப்பிடிப்புக்கு போவேன். இயக்குநர் வெற்றிமாறன் என்ன சொல்கிறாரோ அதைச் செய்வேன். அவரைப் புரிந்து கொண்டும் செய்வேன். ஏனெனில் மொழி என்பது தாமதமாகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான். அதற்கு முன்பு உணர்வுகள்தான் நம்மிடம் பேசும் மொழி. இந்தப் படத்தின் பெருவெடிப்பு, அவர் சிந்தனையில் இருந்துதான் தொடங்கியது. எப்போதுமே யானைகள் பணிவாக இருக்கும்போது அழகாக இருக்கும்.

அதுபோலதான், வெற்றிமாறனின் அறிவும், போக்கும், செயல்பாடும் பிரம்மாண்டமாக இருக்கும். அவருடைய கிரகிப்புத் தன்மை என்னை ஆச்சரியப்பட வைக்கும். கதை தொடர்பாக என்னிடம் பல கேள்விகள் இருந்தன. அதை அவரிடம் கேட்டுப் புரிந்து கொண்டு வாத்தியாரைக் கொடுத்திருக்கிறேன். இங்கு வாத்தியார் என்பது விஜய்சேதுபதி கிடையாது. பல வாத்தியார்களை கிரகித்துக் கொடுத்த வெற்றிமாறன் தான்.

இந்தப் படம் இப்படி வெளியானதுக்கு முக்கிய காரணம் அவர்தான். கதையின் நாயகனாக நகர்ந்து வந்திருக்கும் சூரிக்குப் பாராட்டுகள். ஒரு மனிதனின் வாழ்க்கையையும் மொழியையும் புரிந்துக்கொள்ள கூடிய படத்தை அவன் ரசிக்கும்படி கொடுப்பது சாதாரணமானது அல்ல. என் நினைவுகளில் மறக்க முடியாத படத்தைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு விஜய்சேதுபதி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE