துவக்க லாப கணக்கு: 2014-ல் வேலையில்லா பட்டதாரி டாப்!

2014ம் ஆண்டில் 'கோச்சடையான்', 'வீரம்', 'ஜில்லா' உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களோடு ஒப்பிடுகையில் 'வேலையில்லா பட்டதாரி' பெரும் வசூல் செய்திருக்கிறது.

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், விவேக், சுரபி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வேலையில்லா பட்டதாரி'. அனிருத் இசையமைக்க, தனுஷ் தயாரித்திருந்தார். தமிழ்நாடு முழுவதும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வெளியிட்டு இருந்தார்.

18ம் தேதி வெளியான 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றியிருக்கிறது. முதல் மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது.

2014-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, பெரிய நடிகர்களின் படங்கள் பெரியளவில் வசூல் செய்யவில்லை. 'வீரம்', 'ஜில்லா' ஆகிய படங்கள் பெரியளவில் வசூல் செய்தாலும் அப்படத்திற்கு அரசாங்கம் வரிச்சலுகை கொடுக்கவில்லை. ஆகையால் பெரிய வசூல் அடைந்தாலும், தயாரிப்பாளருக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை.

'கோச்சடையான்' பெரிய பட்ஜெட் படம் என்பதால் அப்படத்தின் வசூலை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே 'கோலி சோடா', 'தெகிடி', 'யாமிருக்க பயமே', 'முண்டாசுப்பட்டி' உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்களே அதிகளவில் வசூல் குவித்ததுள்ளது.

தற்போது 'வேலையில்லா பட்டதாரி' அரசாங்கத்திடம் வரிச்சலுகை பெற்றிருக்கிறது. வரவேற்பு மற்றும் அதிக வசூல் என்பதால் படக்குழு பெரும் சந்தோஷத்தில் இருக்கிறது.

இந்த வெற்றி குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் எனது படங்களில் மிகப்பெரிய ஒப்பனிங் கொடுத்திருப்பதில் மகிழ்ச்சி. ரசிகர்களுக்கு எனது ஆனந்த கண்ணீரை காணிக்கை ஆக்குகிறேன். திருட்டு சி.டியில் படம் பார்க்காமல் அனைவருமே திரையரங்கில் படம் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE