முதல் பார்வை: கதாநாயகன் - கலகலப்பு முயற்சி!

By உதிரன்

பயந்த சுபாவம் உள்ள இளைஞன் ஒருவன் காதலையும், வீரத்தையும் வசப்படுத்தினால் அதுவே 'கதாநாயகன்'.

வருவாய் ஆய்வாளராகப் பணிபுரியும் விஷ்ணு விஷாலுக்கு அடிதடி, சண்டை என்று மட்டுமல்ல ஒரு ரோட்டைக் கடந்து செல்வது என்றால் கூட பயம். அப்படிப்பட்ட பயந்த சுபாவமுள்ள விஷ்ணுவைக் கண்டு கேத்ரீன் தெரசாவுக்கு பிடித்துப் போகிறது. இருவரும் காதலைப் பகிர, கேத்ரீன் அப்பாவோ 'வீரனுக்குத்தான் தன் மகளைக் கொடுப்பேன்' என்று வீம்பாகச் சொல்கிறார். இடையில் தன் அக்காவின் திருமணத்தை நடத்தி முடிக்கும் பெரும் பொறுப்பு விஷ்ணுவுக்கு வந்து சேர்கிறது. அதற்கான பணத்தை எப்படி சம்பாதித்தார், காதல் என்ன ஆனது, வீரன் என்பதை நிரூபித்தாரா என்பது மீதிக் கதை.

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் சூப்பர் ஜி, காதுல அப்படியே சொல்லிக்கிட்டு வாங்க என்று சொல்லி சிரிப்புக்கு உத்தரவாதம் கொடுத்த நடிகர் முருகானந்தம் 'கதாநாயகன்' படத்தின் மூலம் இயக்குநராகப் புரமோஷன் ஆகியிருக்கிறார். ஒரு கலகலப்பான படத்தைக் கொடுக்க முயற்சித்ததற்காக அவரைப் பாராட்டலாம்.

வித்தியாசமான கேரக்டர்களை எடுத்துக்கொண்டு நடிப்பதில் விஷ்ணு விஷால் தனித்துவம் மிக்கவர். 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் இருந்து அவர் படங்களைப் பட்டியலிட்டாலே அது உண்மைதான் என்பது புரியும். இதில் சண்டை என்றாலே பயந்து ஓடும் இளைஞராக இயல்பாக நடித்திருக்கிறார். கேத்ரீன் தெரசாவைக் கண்டதும் காதல் கொள்வது, அவரையே பின் தொடர்வது, ஆய்வாளர் என்ற பெயரில் தனிப்பட்ட விவரங்களை அறிக்கை போல சமர்ப்பிப்பது, கல்யாணத் தடைக்குக் காரணமானவர்களை துவைத்தெடுப்பது, அதற்கு முன்னதாக செய்யப்படும் வார்ம் அப் போன்றவை நகைச்சுவை அம்சங்களுடன் கூடிய நாயகனாக முன்னிறுத்துகின்றன.

விஜய் சேதுபதி கவுரவத் தோற்றத்தில் வந்தாலும் வசீகரிக்கிறார். விஷ்ணு விஷால் உடனான கலந்துரையால் ரசிக்க வைத்தது. கேத்ரீன் தெரசா பார்பி டால் பொம்மையைப் போல் வந்து போகிறார். நான் கடவுள் ராஜேந்திரன் புகைச்சலையும், எரிச்சலையுமே பரிசாகத் தந்திருக்கிறார்.

ஆங்கிலத்தை தப்பு தப்பாகப் பேசினால் நகைச்சுவையாகிவிடும் என்பதை இன்னும் எத்தனை படங்களில்தான் சூரி நம்பவைக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. அது ரசிகர்களிடத்தில் எடுபடவே இல்லை.

ஜெனிலியாக்களைப் போலச் செய்தல் கதாநாயகிகள் படலத்தில்தான் தொடர்ந்தது. இப்போது சரண்யா பொன்வண்ணன் போன்ற அம்மாக்களுக்கும் அது வேறு வடிவ உத்தியுடன் தொடர்வது ஆரோக்கியமாக இல்லை. இந்தப் போக்கு மாற்றப்பட வேண்டும்.

சீரியஸாக காமெடி செய்கிறாரா, காமெடியுடன் சீரியஸாக நடிக்கிறாரா என்று தெரியாமல் சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார் அருள்தாஸ். டெம்ப்ளேட் கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வந்து தன் இருப்பை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

ஆனந்த் ராஜ் மிகப் பொருத்தமான கதாபாத்திரத்தை பக்குவமாகக் கையாண்டிருக்கிறார். கொஞ்சம் பிசகினாலும் அந்தக் கதாபாத்திரம் மொத்தமாய் நொறுங்கிப் போயிருக்கும். தன் தேர்ந்த நடிப்பால் இரண்டாம் பாதியை மொத்தமாகத் தாங்குகிறார்.

லட்சுமண் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டன் பின்னணி இசையும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. பாடல்கள் தேவையற்ற இடங்களில் பொருந்தாமல் துருத்தி நிற்கின்றன. ஸ்ரீதரன் முதல் பாதியிலும், இரண்டாம் பாதியின் இறுதியிலும் கத்தரி போட்டிருக்கலாம்.

எதற்கெடுத்தாலும் பயந்த நிலையில் இருக்கும் இளைஞன் பிறகு வீரத்துடன் தன்னை நிரூபிப்பது என்பது சுவாரஸ்யமுள்ள ஒன் லைன்தான். ஆனால், அக்காவுக்கு கல்யாணம், அதற்குப் பணம் தேவை, அதற்காக ஹீரோ எடுக்கும் முடிவு, பின் ஹீரோவுக்கான சிக்கல் தீர்வது என பழைய படங்களின் சாயலையும்,கதைக்களத்தையும் அப்படியே ரிப்பீட் அடித்திருப்பது சோர்வை வரவழைக்கிறது. ஆனந்த் ராஜ் - சூரி சந்திப்புக்குப் பிறகும் படம் நீள்வது கதாநாயக பிம்பத்தைத் தூக்கி நிறுத்துவதற்கே என்பதால் அது செயற்கையாக உள்ளது.

இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் சில இடங்களில் சிரிக்க வைத்ததற்காக, பொழுதுபோக்கும் முயற்சிக்காக கதாநாயகனை கண்டுகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்