நிபந்தனையற்ற அன்பையும், காதலையும், துயரங்களையும் படிப்பவர்களுக்குக் கடத்துவதில் கவிதைக்கு நிகர் வேறெதுவும் இருக்க முடியாது. கவிதைகள் வழியே இந்த உலகம் ஓராயிரம் பிரச்சினைகளை பேசியிருந்தாலும், காதலும் காதல் சார்ந்த ஆதிஅந்தங்களை ஒளிவு மறைவின்றி பேசுவதால் கவிதையை உலகம் முழுவதும் காதலர்களே தங்களுக்கு சொந்தமானதாக கொண்டாடி மகிழ்கின்றனர். சமரசமற்று உண்மையை உரக்க கூறும் சமூகம் சார்ந்த கவிதைகள் வரலாறு முழுக்க நிறைந்திருந்தாலும், காதல் கவிதைகளுக்கான மவுசு எல்லா காலத்திலும் தொடரவேச் செய்கிறது.
வெறுமனே வார்த்தைகளாக இருக்கும்போதே அழகானதாக இருக்கும் கவிதைகள் இசையுடன் சேரும்போது மேலும் அழகாகின்றன. அதுவும் இசைஞானி இளையராஜாவின் இசையோடு கலக்கும் கவிதைகள் பேரெழில் கொஞ்சும் படைப்புகளாக மாறுகின்றன. அந்த வகையில் இளையராஜா தனது ஆரம்பக் காலம் தொடங்கி, தற்போது வரை எத்தனையோ கவிஞர்களுடன் பணியாற்றியுள்ளார். அதில் மறைந்த கவிஞர் புலமைப்பித்தன் முக்கியமானவர். காரணம் ராகதேவனுக்கு அவர் எழுதிய பாடல்களின் எண்ணிக்கை அளவில் மிக குறைவானவை என்றாலும், அப்பாடல்கள் ரசிகர்களைச் சென்றடைந்த உயரம் அளவிட முடியாதவை.
கடந்த 1990ம் ஆண்டு இளையராஜாவின் இசையில், இயக்குநர் மது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'மௌனம் சம்மதம்'. மலையாள நடிகரான மம்முட்டி தமிழில் அறிமுகமான திரைப்படம். ஒரு மர்டர் இன்வெஸ்டிகேசன் கோர்ட் ரூம் டிராமாதான் இந்தப் படம். இந்தப் படத்தில் இப்படியொரு மெலடி பாடலா என கேட்கும்போதெல்லாம் வியக்க வைக்கும் பாடல்தான் 'கல்யாண தேன்நிலா' பாடல். கவிஞர் புலமைப்பித்தனின் வரிகளால் வந்த இப்பாடலை ஜேசுதாஸ் உடன் சித்ரா பாடியிருப்பார். பாடல் கேட்பவர்களின் மனதை இதமாக்கும் குறிப்பிட்ட சில பாடல்களுக்கான பட்டியில் இப்பாடலுக்கு நிரந்தர இடமிருக்கும்.
விளக்கமுடியாத வகையில் பிரவாகமெடுக்கும் மகிழ்ச்சி பெருவெள்ளமான காதலையும், அகத்தை நனைக்கச் செய்யும் அதன் குளுமையையும் பாடல் கேட்பவர்களுக்கு இப்பாடல் கொடுத்திருக்கும். பின்னிரவு நேரத்தில் இரவுடன் கலக்கும் நிலவின் குளிர்ச்சி மயக்கும் தன்மை கொண்டவை. இந்நேரத்தில் மலை சூழ்ந்த சமவெளிப் பகுதிகளில் வீசும் காற்று மென்மையைவிட மெலிதானவை. தென்றலாக வீசும் அந்த காற்றில் இரவின் இருளும், நிலவின் குளிர்ச்சியும், மலைகளின் வாடையும், நீரோடைகளின் ஈரமும் கலந்திருக்கும். இப்பாடலும் அப்படித்தான், அருகில் இருப்பதைவிட பிரிந்திருக்கும் நேரத்தில் அதிகரித்திருக்கும் காதலின் தகிப்புகளின் மேல் வீசும் தென்றல் போல் அமைந்திருக்கும்.
» ‘காந்தாரா 2’ எழுத்துப் பணிகள் தொடக்கம் - ‘உகாதி’க்கு அப்டேட் கொடுத்த ரிஷப் ஷெட்டி
» “திரையுலகில் மூவருமே பணியாற்றிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி” - தங்கர் பச்சான்
மிருதுவான கிடார், பெல்ஸ் மற்றும் தாளத்துடன் ஆரம்பிக்கும் பாடலின் தொடக்க இசை. பின்னர் வயலின் செக்ஷன் கேள்விகளைக் கேட்கத் தொடங்க, அதற்கு ஒற்றை வரி பதில்களை கூறுவதுபோல் பதிலளித்திருக்கும் புல்லாங்குழல். பின்னர் அதே புல்லாங்குழலில் ஒரு ஆலாபானை வரும், அங்கிருந்து தொடங்கும் பாடலின் பல்லவி. இந்த தொடக்க இசையே காதலன், காதலி இடையிலான பிரிவு, தவிப்பு, தகிப்பு, காதல், ஏக்கம் என எல்லாவற்றையும் விளக்கிவிடும்.
"கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா" என இப்பாடலின் பல்லவி எழுதப்பட்டிருக்கும். தமிழின் அழகு 'ழ' என்றால் காதலின் அழகு நிலவு எனலாம். காதல் வாய்த்த பொழுதுகளில் காதலர்கள் பேசிக் கொள்வதற்கான அழகியல் சார்ந்த கன்டென்ட்டுகளில் நிலாவும் ஒன்று. பேச ஏதுமற்ற நேரங்களில் இன்றைக்கு நிலாவைப் பார்த்தாயா? என தொடங்கும் உரையாடல் வேற்று கிரகங்கள், பிற கோள்களையும் கடந்து நீளும். தற்காலிக காதலர்களுக்கு இது பொருந்துகிறதா? என்பது தெரியவில்லை. இந்தப் பாடலின் எல்லா வரிகளும் 'லா' என்ற எழுத்தில் முடியும் வண்ணம் எழுதப்பட்டிருக்கும். இதற்கு முன்பு இதுபோல் பாடல்கள் வந்திருந்தாலும் 90களில் இந்த பாடல் கேட்டவர்களுக்கு புதுமையான அனுபவத்தை அளித்திருந்தது.
முதல் சரணத்துக்கு முன்வரும் இடையிசை கீபோர்ட் சின்தசைஸர் டோனில் தொடங்கும். ஒருபக்கம் கார்ட்ஸ், கிர்க் என்ற ஓசை தரும் ஒரு இசைக்கருவியென இன்னும் பல சேர்ந்திருக்க, அங்கிருந்து வயலின்கள் அதனை ஓவர்டேக் செய்யும். காதலின் சொல்ல முடியாமல் தவிக்கும் வயலின்களின் ஏக்கத்தை குட்டி குட்டியாய் வரும் புல்லாங்குழல் நிரப்பியிருக்கும். இறுதியில் தனது எண்ணத்தை அழுத்தமாக வயலின்கள் பதிவு செய்ய, அந்த அழுத்தத்தை அப்படியே தபேலா உள்வாங்கி பின்தொடர, பாடலின் முதல் சரணம் ஆரம்பித்திருக்கும்.
"தென்பாண்டி கூடலா தேவார பாடலா
தீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா
என் அன்பு காதலா எந்நாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா நீ தீண்டும் கையிலா பார்ப்போமேஆவலா வா வா நிலா" என்ற கோரிக்கையுடன் முதல் சரணம் முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் பாடல் கேட்பவர்களின் மனங்கள் எங்கெங்கோ செல்ல தொடங்கியிருக்கும். "என் அன்பு காதலா எந்நாளும் கூடலா... பேரின்பம் மெய்யிலா நீ தீண்டும் கையிலா" என்ற வரியை சித்ரா பாடும்போதும், "பார்ப்போமேஆவலா வா வா நிலா" என்று ஜேசுதாஸ் பாடி முடிக்கும் அழகும் நயமும் பாடல் கேட்பவர்களுக்கு அப்படியொரு ஆனந்தத்தைக் கொடுத்திருக்கும்.
இரவுகள் எப்போதும் அமைதியானவை. அதுவும் பின்னிரவுகள் கொள்ளையழகும் பேரமைதியும் கொண்டவை. காதலர்கள் சன்னமானக் குரலில் தின்னமாக பேசிக்கொள்ளும் நேரம் என்பதால்தான் அச்சமயத்தில் வீசும் காற்று மெல்லியதாகி விடுகிறது. இதை இப்பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முன்வரும் இடையிசையில் பாடல் கேட்பவர்களுக்கு உணர்த்தியிருப்பார் இளையராஜா. அந்த இரண்டாம் இசை கீ புஃளுட்டில் தொடங்கும். அப்போது அதனுடன் சேரும் கிடார், கீ புஃளுட்டில் வந்த நோட்ஸை ரிபீட் செய்ய, அங்கிருந்து வயலின்கள் டேக் ஓவர் செய்ய, இறுதியில் வீணை போல கிடார் இழையோட அங்கிருந்து இரண்டாவது சரணம் தொடங்கியிருக்கும்.
"உன் தேகம் தேக்கிலா தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா நான் கைதி கூண்டிலா
சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா
தேனூறும் வேர்ப்பலா உன்
சொல்லிலா ஆஆ" என்று இரண்டாவது சரணம் எழுதப்பட்டிருக்கும். கவிதை, இசை, காதல் இவை மூன்றுமே மனதுக்கு எப்போதும் இனிமையான உணர்வை தரக்கூடியவை. இதையுணர்ந்து, இப்பாடலில் மனதை லயிக்கச் செய்யும் வகையில் இசைக் கருவிகள் மீட்கப்பட்டிருக்கும். ஜேசுதாஸ், சித்ராவும் மிருதுவாகவே இப்பாடலை பாடியிருப்பர்.
சதாசுதர்சனம் என்ற சதா, அண்மையில் மறைந்த சந்திரசேகர்,
ராதா விஜயன், சாய்பாபா, கங்கை அமரன், மறைந்த பேஸ் கிட்டாரிஸ்ட் சசி, டேவிட் ஜெயக்குமார், சந்தானம் என இசைஞானி இளையராஜாவின் கிடார் படை நெருங்க முடியாதது. இந்த படையின் கூடுதல் சிறப்பே படைத்தலைவரான ராகதேவனும் கிடார் இசைப் புலமையில் சிம்ம சொப்பனமாக இருப்பதுதான். இந்த கூட்டணியின் கிடார் இசையில் வெளிவந்த ஆயிரக்கணக்கான பாடல்கள் கவிதை போல் இன்னும் பல ஆண்டுகள் இளைப்பாறுதலை தந்து கொண்டேயிருக்கும்.ராஜாவின் ராஜகீதம் தொடரும்.
கல்யாண தேன் நிலா பாடல் இணைப்பு இங்கே
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago