‘அழகன்’ முதல் ‘ஆஸ்கர்’ வரை - தமிழிலும் கலக்கிய மரகதமணி என்கிற கீரவாணி!

By கலிலுல்லா

‘பான் இந்தியா’ என்ற பதம் பிரபலமடைவதற்கு முன்பே ‘திரையிசை இந்தியா’ முறையில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் இசையமைத்தவர் எம்.எம்.கீரவாணி. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் வென்றுள்ள நிலையில், தெலுங்கை பிரதானமாகக் கொண்டு மற்ற மொழிப் படங்களில் அவ்வப்போது இசையமைத்து வந்த கீரவாணியின் தமிழ்ப் படங்கள் குறித்து பார்ப்போம்.

1989-ம் ஆண்டு வெளியான ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்திற்கு பிறகு இளையராஜாவுடனான கருத்து வேறுபாடு காரணமாக புதிய இசையமைப்பாளரை தேடிக்கொண்டிருந்தார் இயக்குநர் கே.பாலசந்தர். அப்படி அவர் தேடலில் கண்டடைந்தவர்தான் மரகதமணி. தெலுங்கில் எம்.எம்.கீரவாணி என்ற தனது சொந்த பெயரில் இசையமைத்தவர், தமிழில் மரகதமணி என்ற பெயரில் ‘அழகன்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். கே.பாலசந்தர் போன்ற ஒருவர் தெலுங்கிலிருந்து இசையமைப்பாளரை தமிழுக்கு கொண்டு வரும்பட்சத்தில் அந்த இசையமைப்பாளர் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமளிக்காத வகையில் ‘அழகன்’ படத்தில் இறங்கியடித்தார் மரகதமணி.

படத்தில் வரும் ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா’ பாடல் இன்றைக்கும் தொலைபேசியில் நீளும் காதலர்களின் உரையாடல்களுக்கு பொருந்துபோகும் அளவுக்கு பின்னணி இசையிலும் மிரட்டியிருப்பார். படத்தில் வரும் ‘சாதி மல்லி பூச்சரமே’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தின் பாடல்கள் வெற்றிக்குப் பிறகு கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்த ‘நீ பாதி நான் பாதி’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு மரகதமணிக்கு கிடைத்தது. அந்தப் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் ‘நிவேதா’ என்ற ஒற்றை வார்த்தையிலேயே மொத்த பாடலையும் கம்போஸ் செய்தியிருப்பார் மரகதமணி. அதுவுமே எந்த இடத்திலும் சலிப்புத்தட்டாத வகையில் கோர்க்கப்பட்டிருப்பதுதான் அவரின் வெற்றி. அதேபோல படத்தில் வரும் ‘காலமுள்ள வரை’ பாடல் சிறந்த மெலோடி பாடலாக இசையமைக்கப்பட்டிருக்கும்.

தொடர்ந்து, ‘பாட்டொன்று கேட்டேன்’, ‘சிவந்த மலர்’ படங்களுக்கு இசையமைத்தார் மரகதமணி. அடுத்து 1992-ல் வந்த ‘சேவகன்’ படத்தில் ‘நன்றி சொல்லி பாடுவேன்’ இன்றைக்கும் பலரின் ஃபேவரைட். பின்னர் மீண்டும் பாலசந்தருடன் ‘வானமே எல்லை’, ‘சாதி மல்லி’ படங்களில் இணைந்தார் மரகதமணி. ‘வானமே எல்லை’ படத்தில் வரும் ‘கம்பங்காடு’ பாடலை மரகதமணியும், சித்ராவும் இணைந்து பாடியிருப்பர். இன்றும் டவுன் பஸ்களில் இந்தப் பாடல் ஒலிபரப்பப்படுவதை கேட்க முடியும்.

1992-ல் இறுதியில் வந்த ‘ப்ரதாப்’, 1997-ல் கே.எஸ்.ரவிக்குமாரின் ‘கொண்டாட்டம்’ படங்களுக்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். சிபிராஜின் ‘ஸ்டண்ட் நம்பர் 1’ படத்தில் ‘விழாமலே இருக்க முடியுமா’ பாடல் அந்த காலக்கட்டத்தில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2015-ம் ஆண்டு வெளியான அனுஷ்காவின் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் இசையமைத்திருந்தார். நேரடி தமிழ்படமாக இல்லாதபோதும் ‘நான் ஈ’, ‘மாவீரன்’, ‘பாகுபலி 1’, ‘பாகுபலி 2’ படங்களுக்கு அவர் அமைத்த இசை தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்டது.

தமிழில் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்திய கீரவாணி தற்போது ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். அதேபோல ரோஜா படத்தில் கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானும் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்துக்காக ஆஸ்கர் வாங்கியிருப்பதை சுவாரஸ்ய ஒற்றுமையாக ரசிகர்கள் கொண்டாடலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE