ஆசிய திரைப்பட விருது 2023 | 6 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’

By செய்திப்பிரிவு

‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படம் ஆசிய திரைப்பட விருது விழாவில் 6 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க ரவிவர்மன், ஸ்ரீகர் பிரசார் ஆகியோர் ஹாங்காங் புறப்பட்டுள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டப் பலரது நடிப்பில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் 16வது ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழா நாளை ஹாங்காங்கில் நடைபெறுகிறது. இதில் சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டா தரணி), சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு (ஏகா லக்கானி) உள்ளிட்ட 6 பிரிவுகளில் நாமினேஷனாகியுள்ளது.

இந்த விழாவில் பங்கேற்க லைகா புரொடக்‌ஷன்ஸின் ஜி.கே.எம். தமிழ் குமரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஆகியோருடன் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் ரவி வர்மன் ஆகியோர் ஹாங்காங் பயணம் மேற்கொள்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE