சென்னை துறைமுகத்தின் க்ரேன் ஆப்ரேட்டரான அகிலன் (ஜெயம் ரவி) ‘இந்திய பெருங்கடலின் ராஜா’ (King of the Indian Ocean) என்ற பட்டத்தைப் பெற துடிக்கிறார். துறைமுகத்தின் நிழலுலகமான கடத்தலில் கைதேர்ந்த அகிலனுக்கு, சர்வதேச கடத்தல் மன்னன் கபூர் (தரூண் அரோரா) மூலமாக அசைமென்ட் ஒன்று கொடுக்கப்படுகிறது. இதனிடையே சட்டவிரோத கடத்தல்களை தடுக்க டெல்லியிலிருந்து நியமிக்கப்பட்ட சிறப்பு காவல் துறை அதிகாரி ஒருவர் அகிலனை கைது செய்தே தீருவேன் என திரிகிறார். இறுதியில் அகிலன் தனக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்டை எப்படி முடித்தார்? ‘கிங் ஆஃப் இந்தியன் ஓஷன்’ பட்டம் அவருக்கு கிடைத்ததா? அதுமட்டும் தான் அவருடைய லட்சியமா? - இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘அகிலன்’.
“கடல்ல இருந்து உப்ப பிரிக்கலாம். ஹார்பர்ல இருந்து அகிலன பிரிக்க முடியாது” என்ற ஜெயம் ரவியின் வசனத்திற்கேற்ப மொத்தப் படமும் துறைமுகத்துக்குள் நகர்வதுடன், மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் ‘இயற்கை’ கதைக்களத்தை நினைவூட்டுகிறது. துறைமுகத்தின் அன்றாட நிகழ்வுகள், அங்கிருக்கும் கட்டுப்பாடுகள், கடல்வழிப் போக்குவரத்து, வணிகம், சட்டவிரோத கடத்தல் என விரியும் காட்சிகள், தமிழ் சினிமாவின் அரியக் காட்சிக் களத்தை அறிமுகப்படுத்துகிறது.
கல்யாண் கிருஷணன் இயக்கியிருக்கும் இப்படத்தில் உலகின் பிரதான பிரச்சினை ‘பசி’, ‘உலக வறுமை தீர்ந்தால் உள்ளூர் வறுமை தானாக தீர்ந்துவிடும்’ என்ற ஒன்லைன் சுவாரஸ்யம். படத்தின் மையக்கதையிலிருந்து விலகியிருந்தாலும் முதல் பாதி, விறுவிறுப்புடன் ஒருவித எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே செல்கிறது. இடைவேளைக்கு முன்பாக கடத்தல் காட்சி படத்தின் மீதான நம்பிக்கையை கூட்டுகிறது.
ஆனால், அதற்கு முற்றிலும் மாற்றான இரண்டாம் பாதி சோர்வு. அகிலன் தன் பின்புலக் கதையை சொல்லும் இடத்திலிருந்து படத்தின் வேகம் தணிந்து, அந்த பின்புலக் கதை கோரும் பரிவை திரைக்கதை தீர்த்துகொள்ளாததால் படத்துடன் ஒன்றமுடியவில்லை. உதாரணமாக பசியால் மக்கள் தவித்துகொண்டிருக்க அவர்களுக்கான உணவை நாயகன் எடுத்துச்செல்லவேண்டும். ஆனால், அந்தக் காட்சியில் பசியின் தீவிரத்தன்மை சுருக்கப்பட்டு, நாயகனின் ‘நல்லவன்’ என்ற பிம்பம் முதன்மைபடுத்தபடுவதால் பார்வையாளனுக்கு கடத்த வேண்டிய சம்பந்தப்பட்ட உணர்வின் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அடுத்தடுத்தக் காட்சிகள் எளிதில் கணிக்கும் வகையில் இருப்பதும், படத்தின் நோக்கத்திலிருந்து விலகி நீண்டிருப்பது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
‘‘பங்குசந்தை தொடங்கி சராசரி மனுசன் வாங்குற வெங்காயம் வரைக்கும் ஒவ்வொரு பொருளோட விலையை தீர்மானிக்கிறது கடல்வழி போக்குவரத்து தான்” என வசனத்திலிருந்த அழுத்தம் காட்சிகளில் இல்லாமல் போனது ஏனோ? படத்தின் தொடக்கத்தில் அதிகாரி ஒருவர் அசால்ட்டாக துறைமுகத்துக்குள் சுட்டுக் கொல்லபடுவது உள்ளிட்ட லாஜிக் ஓட்டைகள் எட்டிப் பார்க்காமலில்லை. அடிக்கடி வரும் சண்டைக்காட்சிகள் அயற்சி.
சாக்லேட் பாயிலிருந்து விலகி ‘ரக்கட் பாய்’ லுக்கில் ஜெயம் ரவி. அந்த முரட்டுத்தனத்துக்குள் தன்னை நிறுவிக்கொள்ள, உடல் மொழியில் அவர் மெனக்கெட்டிருப்பது காட்சிகளில் பளிச்சிடுகிறது. நல்லவரா? கெட்டவரா என யூகிக்க விடாத கதாபாத்திரத்தின் ஆக்ரோஷமான நடிப்பில் அகிலனாக ஈர்க்கிறார் ரவி. ப்ரியா பவானி சங்கர் போலீஸ் கதாபாத்திரத்தில் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் அதற்கான நியாயத்தை நடிப்பில் சேர்க்கிறார். மதுசூதனராவ், ஹரீஷ் பேரடி, சிராக் ஜானி, மைம் கோபி, தருண் அரோரா, தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் உத்தமன் தேவையான நடிப்பை வழங்குகின்றனர்.
துறைமுகத்துக்குள் நுழைந்து வெளியேறிய அனுபவத்தை கொடுக்க தொழில்நுட்ப குழுவின் உழைப்பு பாராட்டத்தக்கது. விவேக் ஆனந்த்தின் ஒளிப்பதிவில் பரந்து விரிந்து இந்திய பெருங்கடலின் அடர்த்தியான நீலமும், ஹார்பரின் அசல் முகமும் அசத்தல். பெரும்பாலும் பின்னணி இசையை நம்பி நகரும் காட்சிகளில் சாம்.சி.எஸ் இசை சில இடங்களில் ஓகே. பல இடங்களில் ஓவர்டோஸ்!
மொத்தப் படமும் ஒருவித பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியிருக்கிறது. இந்தக் காட்சி அனுபவத்திற்கு இணையான கன்டென்ட் அனுபவம் கிட்டியிருந்தால், அது அகிலனை இன்னும் சிறப்பாக்கியிருக்கும்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago