அடர்த்தியான களம், அழுத்தமான வசனம் - வெற்றிமாறனின் ‘விடுதலை பாகம் 1’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை பாகம் 1’ ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படம் ‘விடுதலை’. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார். 'விடுதலை' படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - நக்சல்பாரி இயக்கத்தினருக்கும் அதிகார வர்க்கத்தினருக்குமான பிரச்சினையை படம் அழுத்தமாக பேசுவதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. ‘மக்கள் படை’ தலைவன் பெருமாள் என விஜய் சேதுபதி அறிமுகப்படுத்தப்படுகிறார். காவல் துறையில் கடைநிலையிலிருக்கும் சூரி, ‘ஐயா நான் நல்ல ஃபயரிங் பண்ணுவேன்யா’ என கூறி தன்னையும் ஆட்டத்தை சேர்த்துகொள்ள கோருகிறார். அவரை துச்சமாக நினைத்து காவல்துறையினர் நிராகரித்து விடுகின்றனர். அதன்படி கடைநிலை காவலர், நக்சல் போராளி, அதிகார வர்க்கம் இடையிலான பிரச்சினையை படம் பேசுவதை உணர முடிகிறது.

‘காக்கிச்சட்ட போட்ற ஒவ்வொருத்தனுக்கும் ஒரு நேரம் வரும். அதுக்காக நம்ம காத்திருக்கணும்’, ‘மனுசன் பொறக்குறப்போ ஒருத்தன் மேல, ஒருத்தன் கீழ, ஒருத்தன் சைட்லனு பிரிக்கிற நீங்க பிரிவினைவாதிகளா? இல்ல சமுதாயத்துல எல்லோரும் ஒன்னுன்னு போராட்ற நாங்க பிரிவினைவாதிகளா” உள்ளிட்ட வசனங்கள் அழுத்தம் கூட்டுகிறது. அதிகாரவர்கத்தின் கோரத்தை உணர்த்தும் வகையில் ட்ரெய்லரில் வந்துபோகும் ‘வாச்சாத்தி’ சம்பவத்தை நினைவுப்படுத்தும் காட்சிகள் படத்தின் எதிர்பார்ப்பை கூட்டுகின்றன. ட்ரெய்லரில் சூரியின் உழைப்பை உணர முடிகிறது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE