மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் விருதுகள் உள்ளிட்டவற்றிற்கு உரிமை கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் புகைப்படங்கள் , பூஜை பொருட்கள் மற்றும் விருதுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மறுத்துவிட்டது.

மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாருக்கு சுகுமாரன், மோகன் என்ற மகன்களும், சினேகலதா என்ற மகளும் உள்ளனர். நம்பியாரின் சொத்துக்கள் பாகப்பிரிவினை செய்யப்பட்ட பின் சுகுமாரன் காலமாகிவிட்ட நிலையில், சுகுமாரனின் மகனும், நம்பியாரின் பேரனுமான சித்தார்த் சுகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அதில், "தனது தாத்தா நம்பியாரின் 500க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், விருதுகள் மற்றும் கோப்பைகள், சபரிமலை மற்றும் ஐய்யப்பனின் ஓவியங்கள், பூஜை பொருட்கள் உள்பட அவர் பயன்படுத்திய பொருட்கள் எனது அத்தையின் வசம் உள்ளது. எனது அத்தை சினேகலதா நம்பியாருடன் ஒரே குடும்பமாக இருந்தபோது, அந்த பொருட்களை அனைவரும் வைத்திருந்தோம். அந்த பொருட்களை எனக்கு தருவதாக ஒப்புக்கொண்ட எனது அத்தை சினேகலதா, தான் தனியாக வீடு வாங்கி குடியேறிய பிறகு, தற்போது தர மறுக்கிறார். எனவே அந்த பொருட்களை என்னிடம் வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வழக்கில் குறிப்பிடப்பட்ட விருதுகள் மற்றும் பூஜை பொருட்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சினேகலதா நம்பியார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், "தனது தந்தை நம்பியார் பயன்படுத்திய பொருட்கள் தனக்குதான் சொந்தம். எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று கோரியிருந்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததுடன், நம்பியாரின் வீட்டில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க புதிதாக ஒரு வழக்கறிஞர் ஆணையரை நியமிப்பதாக உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE