சினிமாபுரம் - 6 | முதல் மரியாதை - தீராத பேரன்பின் பாரம் குறைத்த சுமைதாங்கி கல்

By அனிகாப்பா

அது ஒரு துக்க வீடு... இறந்தவருக்கு குறைந்த வயது. அவருக்கான இறுதி மரியாதை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு வயது முதிர்ந்த பெண், கையில் தண்ணீர் சொம்புடன் வெளியில் கூடியிருந்த கூட்டத்திற்கு முன்வருகிறார். அந்த தண்ணீர் சொம்பை சபையின் முன்பாக வைத்து, அதில் கையில் வைத்திருக்கும் 3 பிச்சிப் பூக்களைப் போட்டு, இறந்து போனவனின் மனைவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக ஊருக்கு அறிவிக்கிறார் - இப்படி ஒரு நிகழ்வை தனது பண்பாட்டு அசைவுகள் கட்டுரையில் கூறியிருப்பார் மறைந்த பண்பாட்டு ஆய்வாளர் பேரா.தொ.பரமசிவன். கட்டுரையை இப்படி முடித்திருப்பார்... ‘இன்னும் 7 மாதங்கள் கழித்து இந்த பூமிக்கு வரப்போகும் குழந்தை தந்தை இன்று இறந்து போனவன்தான் என்று ஊரும் உலகும் அறிய அந்தச் சடங்கு பிரகடனம் செய்திருக்கிறது. பிறக்கின்ற எந்த மனித உயிரும் தந்தையின் பெயர் அறியாமல் பூமிக்கு வரக்கூடாது என்ற சமூகக் கட்டுப்பாடு புரிந்தது’.

நாகரிக சமூகத்தின் பார்வையில் மூடநம்பிக்கை, முட்டாள் தனம் என்று புறந்தள்ளப்படும் கிராமத்தின் பல நிகழ்வுகள், சமூகத்தின் வேர்களுடன் தன்னை பிணைத்துக் கொண்டிருக்கும் மனித உணர்வுகளின் பேரன்பினை தங்களுக்குள் புதைத்து வைத்திருக்கின்றன. அப்படியான பேரன்புகளில் ஒன்று கிராமங்களில் காணக்கிடை(க்கின்ற)த்த ‘சுமைதாங்கி கல்’. பெயரிலேயே பாதிக் கதையை உணர்த்தும் இவை, பாரத்துடன் வரும் வழிப்போக்கர்கள் தங்களின் பாரத்தை இறக்கி வைத்து இளைப்பாறுவதற்காக வைக்கப்பட்டன.

பெரும்பாலும் வயிற்றில் குழந்தையுடன் இறந்துபோன பிள்ளைத்தாச்சிகளுடன் தொடர்புபடுத்தப்படும் இந்த கற்கள், எப்போதும் இறக்கி வைக்க முடியாத இறவந்தவர்களின் பாரத்தினை உணர்வளவில் பகிர்ந்து கொள்ள நினைக்கும் ஒரு பேரன்பின் வெளிப்பாடு; பிறர் துக்கம் போக்க அன்பை பகிரும் ஓர் ஆத்மார்த்த நிகழ்வு. இந்த சுமைதாங்கிச் சடங்கையும் பிறருக்காக அன்பைப் பகிரும் விஷயத்தையும் போகிற போக்கில் சொல்லிச் செல்கிற கிராமத்துக் கதைதான் ‘முதல் மரியாதை’.

முதல் மரியாதை: மாமனின் மானம் காக்க வழி தவறிப்போன அவரின் மகள் பொன்னாத்தாளை திருமணம் செய்து கொண்டு, ஊருக்காக ஒப்புக்கு வாழ்க்கை நடத்துகிறார் ஊர் பெரியவர் (நாட்டாண்மை) மலைச்சாமி. மகள் தனக்கு பிறக்கவில்லை என்று தெரிந்தாலும் அவளின் மீது அளவிலாத அன்பை் பொழியும் அக்மார்க் அப்பா. மனைவியிடம் கிடைக்காத அன்பை களத்து மேட்டிலும், கரட்டுக் காட்டிலும் தேடி அலையும் மலைச்சாமி, அவளிடம் பகிர்ந்து கொள்ளமுடியாத பேரன்பையும் ஊட்டாத பாலாய் சுமந்து திரிகிறார்.

திருமணத்திற்கு முன்பாவே காதலித்து, அந்தக் காதலனின் மூலமாக தாயாகி விதி வசத்தால் மாமன் மகனை திருமணம் செய்துகொள்கிறாள் பொன்னாத்தாள். எங்கேயும் வெளிப்பாடுத்த முடியாத தன் காதலை, தந்தை வழிச்சொத்தின் பகுமானத்திலும், நாட்டாண்மையின் மனைவியாக அதிகாரத்திலும் மறைத்துக் கொள்கிறார். உண்மை வெளியே தெரியாமல் இருக்க எல்லோர் மீது எரிந்து விழுகிறார்.

தன் தகப்பன் நன்றாக வாழ்ந்த காலத்தில் போராவூரணி கோயிலில் பத்தாயிரம் பேருக்கு சோறு போட்டு காதுகுத்தி தனக்கு பெயர் வைத்த நினைவைச் சுமந்தபடி திரிகிறாள் குயில். சொந்த ஊரு கைவிட்டுவிட பஞ்சம்பிழைக்க வேறு ஊருக்கு வரும் குயிலின் குடும்பம் (அவளும் அப்பாவும்) வேலை தேடிவரும் கிராமத்தில் பரிசல் ஓட்டி பிழைக்கிறது. படத்தின் இந்த முக்கியமான கதாபாத்திரங்கள் தவிர, கிளை கதாபாத்திரங்களாக, ஊரின் செருப்பு தைக்கும் தொழிலாளி செங்கோடன், அவரின் மகள் செவுளி, செவுளியின் காதலன் (மலைச்சாமியின் சொந்த மருமகன்) இருக்கிறார்கள். இவர்களும் தங்களுக்குள் வெளிப்படுத்த முடியாத சோகத்தைச் சுமந்து திரிகிறார்கள்.

முதல் மரியாதையும் கிராமத்து அடையாளங்களும்: அரவணைத்துக் கொள்ளுவதற்கும், ஆறுதல் சொல்வதற்கும் பெயர் போன கிராமத்து உறவுகளில் முக்கியமானது மாமன் மருமகன் உறவு. காதலித்தாலே ஆணவக்கொலை செய்யும் இன்றைய காலத்தில், வயது கோளாறில் திசைமாறி போன அத்தை, மாமன் பெண்களுக்கு வாழ்வளிக்கவே இந்த மருமகன் உறவுகள் ஒருகாலத்தில் கைகொடுத்தன. இது அப்படியே ஆண்களுக்கும் பொருந்தும். உறவுக்கும் ஊருக்கும் அடங்காமல் திரியும் ஆண்களுக்கு வாழ்வளித்து மாற்றிய அத்தைப் பெண்களும் அதிகம். செஞ்ச தப்பை மறைத்து தலையில் கட்டுதல் என்பதைத் தாண்டி, தவறை உணர்ந்தவர்களுக்கு மற்றொரு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் இந்தத் திருமண பந்தங்களில் இருக்கின்றன. அதேபோல, அந்தத் திருமணங்கள் இரண்டாம் வாய்ப்பில் ஒருபோதும் தோற்றும் போனதில்லை. முதல் மரியாதையிலும் மாமன் காலில் விழுந்ததால் செருப்பு போட மாட்டேன் என்று கொஞ்சம் மிகையாக காட்டியிருந்தாலும், அந்த உறவின் அடிநாதம் அழகாக பதிவாகியிருக்கும்.

வந்தேறிகள் இல்லை... பிழைக்க வந்தவர்கள்: திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது தமிழ் முதுமொழி. சமமான வளங்கள் இல்லாத தமிழகத்தில் வறட்சியான ஊர் மக்கள் பிழைப்புக்காக வளமான ஊர்களைச் சார்ந்தே இருத்திருக்கிறார்கள். முற்றிலும் வாழ வழி இல்லாதவர்கள் சொந்த ஊர் துறந்து தங்களை வேரூன்றிக் கொள்ள வேறு ஊர் தேடி போயிருக்கிறார்கள். அப்படி வந்தவர்களை வந்தேறிகள் என விரட்டாமல், (பஞ்சம்) பிழைக்க வந்தவர்களாகவே அரவணைத்துக் கொண்டு அடைக்கலம் கொடுத்தது புதிய ஊர். கொஞ்சம் தட்டுமுட்டு சாமான்கள், ஒற்றை பரிசல், ஒன்றை வெள்ளாட்டங்குட்டியுடன் வரும் குயில் குடும்பம் ஆற்றுக்கரையோரம் குடிசை போட்டுக்கொள்ள அனுமதித்து, பரிசல் ஓட்டி பிழைக்க வாழ்வும் அளிக்கும்.. 90களுக்கு முந்தைய கிராமங்கள் பஞ்சம் பிழைக்க வருபவர்களுக்காவே நீர்புறங்களிலும் ஊருக்கு ஒதுக்குபுறத்திலும் கொஞ்சம் காடுகளை அடைகாத்து வைத்திருந்து இன்றைய ரியல் எஸ்டேட் உலகில் பழங்கதையாகிப் போனது.

சுமைதாங்கிக் கல்: படத்தில் செங்கோடன் மகள் செவுளியும், மலைச்சாமி மருமகனும் காதலிப்பார்கள், செவுளிக்கு தாயில்லை, மலைச்சாமியின் மருமனுக்கு தாய் - தந்தை இருவருமே இல்லை. ஆறுதலுக்கு ஆளில்லாத இந்த இரண்டு இதயங்களும் தங்களுக்குள் ஆறுதல் தேடிக்கொள்ள... பிரித்து வைப்பதன் வலியை உணர்ந்திருக்கும் மலைச்சாமி சாதியை காரணம் காட்டாமல் காதலர்களைச் சேர்த்துவைப்பார். திருமண வாழ்க்கையில் சிறகட்டித்து பறந்த இந்த சிட்டுக்குருவிகளின் வாழ்வில் பருந்தாக வந்து பெட்டை குருவியை கொன்றுவிடுவான் மலைச்சாமியின் மகளின் புருஷன். செத்துப்போன செவுளி வயிற்றில் பிள்ளையுடன் இறந்திருப்பாள். சுமையுடன் இறந்து போன பெண்ணிற்கு பரிகாரம் செய்ய ஊர் சபை கூடியிருக்கும், தன்சாவு, மர்மச்சாவு என செவுளியின் சாவுகுறித்து அலசப்பட்டு, கடைசியில் பாரத்துடன் இறந்துபோனவளின் பாரத்தை இறக்கி வைக்க சுமைதாங்கி கல் வைப்பது என்று பேசி முடிவெடுக்கும்.

வயிற்றில் பிள்ளையுடன் பாரத்தை இறக்கி வைக்காமல் இறந்து போன பெணின் ஆன்மா துக்கத்தை, அவளுக்காக வைக்கப்பட்ட சுமைதாங்கி கல்லில் வந்து இளைப்பாறுபவர்கள் எல்லோரும் பகிர்ந்து கொள்கிறார்கள். அடைக்கலம் தேடி அலைபவர்களுக்கு ஆறுதலாய் பேரன்பை பகிரும் இந்தச் சடங்கை வெறும் மூடநம்க்கை என்று கடந்துவிட முடியாது. ஏனென்றால், கிராமங்களின் உன்னதமான உணர்வுபூர்வமான நடைமுறைகளில் ஒன்று சுமைதாங்கிக் கல்.

முதல் மரியாதையின் சுமைதாங்கி கல்: திருமணமான பண்ணையார் கிழவனுக்கும், மகளொத்த வயதுடைய பெண்ணுக்கும் இடையில் துளிர்க்கும் பொருந்தா காதல் என முதல் மரியாதையை புறந்தள்ளி விட முடியாது. ஒரு சராசரி தம்பதிகளின் வாழ்க்கையில் ஆசை அறுபது மோகம் முப்பது கடந்து... குழந்தைகளை பெற்று வளர்த்து அவர்கள் சிறகு விரிக்கத் தொடங்கும் காலத்தில்தான், நம் வாழ்க்கையை நாம் வாழவில்லையோ என்று உணர்வு மெல்ல எட்டிப் பார்க்கும். சரி இருக்கும் காலத்தையாவது நமக்காக வாழலாம் என யோசித்து ஜோடியைப் பார்த்தால், அறியமால் தெரியமால் செய்த பிழைகளும், அக்கம்பக்கத்து விட்டுக்கார்கள் என் யோசிப்பார்கள் என்ற எண்ணமும் வந்து முட்டுகட்டைப் போடும் அப்புறம் என் ஆசை இருந்தும் வெளிப்படுத்த முடியாத உயிராய் மலைச்சாமியைப் போல அலைய வேண்டியதுதான். அதனாலேயே ஓடவே ஓடாது என பேசபட்ட இந்த படம் வெளியான காலத்தில் வெற்றிகரமாக ஓடியது.

பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’யில் இந்தக் கதை வேறு... ஊரே மதிக்கும் நாட்டாமையாக இருந்தாலும், மனைவியிடம் வெளிப்படுத்த முடியாத அன்பைச் சுமந்து திரியும் மலைச்சாமி, வீடு அடையவரும் அடைக்கலாங்குருவியிடம் சோடியை கூட்டிவரச் சொல்லியும், தெருவில் தன் பாட்டுக்கு எச பாட்டு பாடினவர்களைத் தேடியும், வயல்காட்டில் இளம்பெண்களை பாட்டுப்பாடச் சொல்லியும், வயிறு பெருத்த புள்ளத்தாச்சியாக நிலைகொள்ளாமல் அலைந்து திரிகிறார். இறக்கி வைக்க முடியாத மலைச்சாமியின் பாரங்களுக்கான சுமை தாங்கியாக குயில் இருப்பாள். இன்னொருபுறம் யோசித்தால் பொன்னாத்தாளின் சொல்ல முடியாத காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவளுக்கான சுமைதாங்கியாகவும் குயில்தான் இருந்திருப்பாள்.

இளையராஜா சுமந்த பாரம்: பாரதிராஜாவின் சொந்தப் படம் ‘முதல் மரியாதை’. படம் எடுத்த பின்னர் படம் பற்றி யாரும் பெரிதாக சாதகமாக சொல்லவில்லை. இந்தப் பின்புலத்தில், பாரதிராஜாவின் பாரம் சுமக்க நினைத்த இளைராஜா அன்று வைரமுத்துவுடன் கைகோத்து... "அந்த நிலாவத்தான்...", "பூங்காற்று திரும்புமா...", "வெட்டிவேரு வாசம்...", "ஏ குருவி..", "ராசாவே உன்ன நம்பி...", "ஏ கிளியிருக்கு...", "ஏறாத மலை மேல...", "நான் தானே அந்தக்குயில்..." என காலத்தால் அழியாத பாடல்கள் தந்து இன்று வரை தனித்திருப்பவர்களின் சுமைதாங்கியாய் இருப்பது தனிக்கதை.

முந்தைய அத்தியாயம் > சினிமாபுரம் - 5 | கர்ணன்: தனிமைக் காதலுக்கு அங்கீகாரம் தந்த சமகால காவியம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்