கடிதங்கள் வழியே காதலைச் சொன்ன திரைப் பாடல்கள் | காதலர் தினம் ஸ்பெஷல் 

By குமார் துரைக்கண்ணு

இன்று காதலர் தினம். மூன்று பக்கம் நீராலும், மற்றொரு பக்கம் காதலாலும் சூழப்பட்டிருப்பதை பூமி உணர்ந்திடும் நாள் இன்று. காலண்டர்களில் நாள்தோறும் எத்தனையோ சிறப்பு தினங்கள் இருந்தாலும், காலண்டர்களே விரும்பி திரும்பிப் பார்த்து வெட்கப்பட்டுக் கொள்ளும் நாள்தான் பிப்ரவரி 14. பல்வேறு பரிமாணங்களைப் பார்த்துவிட்ட காதல் தற்காலதில் இணையத்தின் வழியே பலரது செல்போன்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

காதலுக்கான அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் இன்றுள்ள சமூக வலைதளங்கள் பூர்த்தி செய்துவிடுகின்றன. ஃப்ரண்ட் ரெக்வஸ்டில் தொடங்கி ஃபண்ட் டிரான்ஸ்பர் வரை செல்போனிலேயே எல்லாமே நடந்து முடிந்துவிடுகிறது. ஆனால், இணையமும், செல்போனும் காதலை இத்தனை சுலபமாக்குவதற்கு முன்பு, காதலர்கள் ரொம்பவே சிரமப்பட்டனர். குறிப்பாக காதலர்கள் அவ்வளவு எளிதாக பேசிக்கொள்ளவோ, உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளவோ முடியவில்லை.

இத்தகைய சூழலில், காதலுக்கு தூது என்பது அத்தியாவசியமானதாக இருந்தது. அன்னப்பறவை, புறா, நண்பர்கள், கடிதம் என பல வகையான காதல் தூது வகைகள் இருந்துள்ளன. இதில் கடித வகை தூதை காதலர்கள் பலரும் விரும்பினர். காதல் எப்படி வரும்? எப்போதெல்லாம் வரும்? வந்தால் என்ன செய்யும்? காதலியிடம் எப்படி பேசுவது? காதலை இப்படி எளிதாக விளக்கி கூறியதில் சினிமாக்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. காதல் கடிதம் எப்படியெழுவது என்பதை காதலர்களுக்கு சொல்லிக்கொடுத்த சினிமா, பாடல்கள் மூலம் அதை இன்னும் சுலபமாக்கியது.

அன்புள்ள மான்விழியே: கருப்பு வெள்ளைக் காலத்திலேயே காதலிக்கு காதல் கடிதம் எழுதும் முறை வழக்கத்தில் இருந்ததை சித்தரிக்கும் வகையில் 1965-ம் ஆண்டு வெளியான ‘குழந்தையும் தெய்வமும்’ திரைப்படத்தில் ‘அன்புள்ள மான்விழியே’ பாடல் இடம்பெற்றிருக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வாலி எழுதியிருக்கும் இந்தப் பாடலில், ‘அன்புள்ள மான்விழியே’ என்று காதலியை குறிப்பிட்டிருப்பார். அதேபோல, ‘ஆசையில் ஓர் கடிதம், நான் எழுதுவதென்னவென்றால் உயிர் காதலில் ஓர் கவிதை’ என்று எழுதியிருப்பார். மேலும், காதலின் இணக்கத்தை விவரிக்கும் வகையில் ‘அதை கைகளில்எழுதவில்லை, இரு கண்களில் எழுதி வந்தேன்’ என்று காதலை பொழிந்திருப்பார்.

நான் அனுப்புவது கடிதம் அல்ல: 1966-ம் ஆண்டு வெளிவந்த செல்வம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. கே.வி.மகாதேவனின் இசையில் கவிஞர் வாலி பாடலை எழுதியிருப்பார். நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம், அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம், உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள என்று முதல் மூன்று வரிகளிலேயே கடிதம் சென்றடைந்தோரை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்திருப்பார். பாடலின் இரண்டாவது சரணத்தில், நிலவுக்கு வான் எழுதும் கடிதம், நீருக்கு மீன் எழுதும் கடிதம், நிலவுக்கு வான் எழுதும் கடிதம், நீருக்கு மீன் எழுதும் கடிதம் என்று காதலன் காதலியை ஒப்பீடு செய்திருக்கும் அழகை விவரிக்க வார்தைகள் போதாது.

பூவே இளைய பூவே: கடந்த 1982-ம் ஆண்டு, பாடலாசிரியரும், இயக்குநருமான கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘கோழி கூவுது’. இளையராஜாவின் இசையில் இந்தப் பாடலை வைரமுத்து எழுதியிருப்பார். ஒரு காதல் கடிதத்தைப் படித்துக் காட்டுவது போலத்தான் இந்தப் பாடலே தொடங்கும். மனதுக்குப் பிடித்த காதலி குறித்து எழுதும்போது அதில் துளியும் குறை வைக்கக்கூடாது என்பதற்காக, "குழல் வளர்ந்து அலையானது, இரவுகளின் இழையானது” என்று எழுதியிருப்பார்.‘விழி இரண்டு கடலானதே எனது மனம் படகானதே இளம் பளிங்கு நகம் சேர்த்ததே நிலவு அதில் முகம் பார்த்ததே’ என்றெழுதி காதலியை ஏகத்துக்கும் புகழ்ந்து எழுதப்பட்டிருக்கும் இந்தப் பாடல்.

அதிகாலை சுபவேளை: 1986-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘நட்பு’. இந்தப் பாடலையும் இளையராஜா இசையில் வைரமுத்து எழுதியிருப்பார். இந்தப் பாடலில் இடையிடையே நடிகர் செந்தில் ஓடுவதுபோல் காட்சியிருக்கும். அவர்தான் காதலன் - காதலி இடையே கடிதங்களை கொடுத்துவிட்டு வருவார். ‘அதிகாலை / சுபவேளை / உன் ஓலை வந்தது’ என்றுதான் இந்தப் பாடலை தொடங்கியிருப்பார். ‘காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது / வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது’ என்றெழுதி, ‘ஒரு தத்தை கடிதத்தைத் தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க’ என்று காதலை மனசுக்குள் கொண்டு சேர்த்திருப்பார்.

கண்மணி அன்போடு காதலன்: கடந்த 1991-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் குணா. இந்தப் படத்தில் மனநிலை பிறழ்வு கொண்ட காதலன் மானசீகமான தனது காதலிக்கு கடிதம் எழுதுவதை தனது உளப்பூர்வமான எண்ணமாக கொண்டிருப்பார். பொதுவாக காதலன் தனது மனதில் தோன்றுவதை யாரிடமாவது கூற, அதை ஒருவர் அவனுக்கு எழுதி கொடுக்கும் வழக்கத்தில் இருந்து இந்தப் பாடல், தனது காதலியிடமே, மாசற்ற தனது காதலை நேரடியாக வெளிப்படுத்த அதை காதலி உள்வாங்கிக் கொண்டு எழுதுவதுபோல் உருவாக்கப்பட்டிருக்கும். இளையராஜாவின் இசையில் இந்தப் பாடலை வாலி எழுதியிருப்பார். ‘கண்மணி அன்போடு காதலன், நான் எழுதும் கடிதமே, பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா, நான் இங்கு சௌக்கியமே’ என்று உரையாடல் நடையிலேயே இந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கும். பாடலின் ஜீவனாக ‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல, அதையும் தாண்டிப் புனிதமானது’ என்ற வரியில் காதலின் புனிதத்தை இந்த உலகிற்கு உணர்த்திய பாடல்.

காதல் கடிதம் வரைந்தேன்: 1991-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘சேரன் பாண்டியன்’. இன்னும் பசுமை மாறா தமிழக கிராமங்களில் பயணிக்கும் மினி பேருந்துகள் சில ஊர்களின் ஷேர் ஆட்டோகளிலும், மைக்செட் கட்டி கொண்டாடப்படும் ஊர் திருவிழாக்களிலும் உயிர்ப்புடன் இருந்துவரும் பாடல். இப்படத்தின் இசையமைப்பாளர் சவுந்தர்யன் இப்பாடலை எழுதியிருப்பார். ‘காதல் கடிதம் / வரைந்தேன் உனக்கு / வந்ததா வந்ததா / வசந்தம் வந்ததா’ என்ற கேள்வியோடுதான் பாடல் தொடங்கியிருக்கும். ‘உள்ளம் துள்ளுகின்றதே, நெஞ்சை அள்ளுகின்றதே, உங்கள் கடிதம் வந்ததால், இன்பம் எங்கும் பொங்குதே, உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில் என்றும் வாழ்திடும் இனிய சீதனம்’ என்றெல்லாம் காதல் கடிதத்தின் அழகை விவரித்திருப்பார்.

ஒரு கடிதம் எழுதினேன்: 1995-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘தேவா’. தேவா இசையில் இந்தப் பாடலை வாலி எழுதியிருப்பார். இந்தக் காதல் கடிதத்தை, ‘ஒரு கடிதம் எழுதினேன், அதில் என் உயிரை அனுப்பினேன், அந்த எழுத்தின் வடிவிலே, நான் என்னை அனுப்பினேன்’ என்று காதல் ரசம் சொட்ட தொடங்கியிருப்பார். பாடலில் தொடர்ந்து வரும் வரிகளில், ‘நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று, நீ இன்றிவாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு’ என்றெல்லாம் எழுதி காதலியை உருக வைத்திருப்பார்.

நலம் நலமறிய ஆவல்: 1996-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘காதல் கோட்டை’. தேவாவின் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் காதலர்கள் மட்டுமின்றி ஒரு கடிதம் எப்படியெழுத வேண்டும் என்பதை அத்தனை சிறப்பாக சொல்லியிருக்கும். இப்பாடலை படத்தின் இயக்குநர் அகத்தியன் எழுதியிருப்பார். ‘நலம் நலமறிய ஆவல், உன் நலம் நலமறிய ஆவல், நீ இங்கு சுகமே, நான் அங்கு சுகமா?’ என்பதுதான் எல்லா கடிதங்களின் தொடக்க வரிகளாக இருந்தாலும், காதலில் அது ஆழமான அர்த்தத்தைக் கொடுக்கிறது. ‘கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே... என் இதழ் உனையன்றி பிறர் தொடலாமா? உன் முகம் நான் பார்க்க கடிதமே தானோ, வார்த்தையில் தெரியாத வடிவமும் நானோ, நிழற்படம் அனுப்பிடு என்னுயிரே, நிஜமின்றி வேரில்லை என்னிடமே’ என்ற வரிகள் எல்லாம் காதலின் உயர்வான விழுமியங்களை பறைசாற்றுபவை என்றால் மிகையல்ல.

அன்புள்ள மன்னவனே: 1996-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘மேட்டுக்குடி’. சிற்பி இசையில் இந்தப் பாடலை வைரமுத்து எழுதியிருப்பார். தமிழ் இலக்கியத்தில் தலைவனைப் பிரிந்த தலைவியின் துயர் குறித்து விவரிக்கும் பாடல்கள் உண்டு. இதை எளிமையாக விவரித்திருந்தால் எப்படியிருக்கும் என்பதை விளக்கும் பாடல்தான் இது. ‘அன்புள்ள மன்னவனே, ஆசை காதலனே, இதயம் புரியாத என் முகவரி தெரியாதா?’ - இந்த வரிகளே போதும் காதலனுக்கு இவ்வுலகை மறக்க. ‘வா வா கண்ணா இன்றே கெஞ்சி கேட்க போபோ, வாசல் பார்த்து வாடும் வாழ்வை சொல்ல போபோ, இளமை உருகும் துன்பம் இன்றே சொல்ல போபோ, நிதமும் இதயம் எங்கும் நிலைமை சொல்ல போபோ, கிளியே கிளியே போபோ’ என பாடல் முழுவதுமே காதலியின் தவிப்பை தூது வழியே கொட்டித் தீர்த்திருப்பார்.

காதல் கடிதம் தீட்டவே: 1999-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘ஜோடி’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மியூசிக்கல் ஹிட்டடித்த இப்படத்தில் இந்தப் பாடலை வைரமுத்து எழுதியிருப்பார். ‘காதல் கடிதம் தீட்டவேமேகம் எல்லாம் காகிதம், வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீா்ந்திடும், சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள், இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்’ என்று காதலுக்கும் வானத்துக்கும் இடையிலான தூரத்தை பேனா மூலம் குறைத்திருப்பார். கடிதத்தின் வாா்த்தைகளில் ‘கண்ணா நான் வாழுகிறேன், பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ, பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன், விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ...’ - இதுபோன்ற வரிகள் மூலம் காதலையும் கடிதங்களையும் ஓர் உன்னத நிலைக்கு கொண்டு சேர்த்திருப்பார்.

பறவையே எங்கு இருக்கிறாய்: 2007-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘கற்றது தமிழ்’. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இப்பாடலை நா.முத்துக்குமார் எழுதியிருப்பார். இப்பாடல் பிரபாகரனுக்கு ஆனந்தி எழுதிய கடிதத்தில் இருந்துதான் தொடங்கும். அந்தக் கடிதத்தின் மிக சொற்பமான வரிகளே காதலை, வலியை, துயரை, பாசத்தை, பேரன்பை ஈரத்துடன் சொல்லியிருக்கும். ‘அடி என் பூமி தொடங்கும் இடம் எதுநீ தானே, அடி என் பாதை இருக்கும் இடம் எது நீ தானே, நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக, அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக’ என்ற வரிகளை எல்லாம் நினைத்துப் பார்த்தாலே இதயம் தொடுபவை. ‘உன்னோடு நானும் போகின்ற பாதை இது நீளாதோ தொடு வானம் போலவே, கதை பேசிக்கொண்டே வா காற்றோடு போவோம், உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்’ - இதைவிட காதலை உன்னதமாக சொல்லிவிடவே முடியாது என்கிற வகையில் எழுதப்பட்டிருக்கும்.

நிலா... நீ வானம் காற்று: 2009-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘பொக்கிஷம்’. சபேஷ்-முரளி இசையில் யுகபாரதி இப்பாடலை எழுதியிருப்பார். மனிதர்களின் வாழ்வில் கடிதங்களின் முக்கியத்துவத்தைப் உரக்கப் பேசியது இத்திரைப்படம். லெனினும் நதீராவும் கடிங்களின் வழியே கொண்டிருந்த ஆழமான, அன்பான, இலக்கியத் தரமான, ரசனையான, கவித்துவமான, பண்பான, பகட்டில்லா காதல்தான் இந்தப் பாடல். ‘நிலா நீ வானம் காற்று, மழை என் கவிதை மூச்சு, இசை துளி தேனா மலரா, திசை ஒலி பகல்’ என்று பாடலை தொடங்கியிருப்பார். ‘அன்புள்ள மன்னா, அன்புள்ள கணவா, அன்புள்ள கள்வனே, அன்புள்ள கண்ணாளனே, போன்ற வரிகளும் அன்புள்ள படவா, அன்புள்ள திருடா, அன்புள்ள ரசிகா, அன்புள்ள கிறுக்கா, அன்புள்ள திமிரே, அன்புள்ள தவறே, அன்புள்ள உயிரே, அன்புள்ள அன்பே’ உள்ளிட்ட வரிகள் மூலம் 2000-க்குப் பிறகான காதல் சொல்லாடல்களைப் பயன்படுத்தி காதலின் இணக்கம் எடுத்துக் கூறப்பட்டிருக்கும்.

காதலை சூப்பர் பாஃஸ்ட் வேகத்தில் பகிர்ந்துகொள்ள இன்ஸ்டா, பேஃஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் என பல்வேறு வாய்ப்புகள் இன்று இருக்கின்றன. நிதானமாக, தீர்க்கத்துடன் கற்பனை வளம் குன்றாமல் கடிதங்கள் மூலம் பகிர்ந்து கொண்ட காதல் இன்னும் பல நூறு காதலர் தினங்களைக் கடந்தாலும், முறியடிக்கப்படாத சாதனையாகவே தொடரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE