இளையராஜாவுடன் இசையிரவு 27 | ‘நீ பாதி நான் பாதி கண்ணே...’ - சுமையான சுகமான சுமை நீ!

By குமார் துரைக்கண்ணு

1990 இசைஞானி இளையராஜா 24×7 என்ற கால நிர்ணயம் போதாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த காலக்கட்டம். இந்த ஆண்டு ஜூலையில் வெளியான அஞ்சலி திரைப்படத்தில் 500 படங்களுக்கு இசையமைத்த சாதனையை எட்டிவிட்டார். இவைத் தவிர இதே ஆண்டில் வெளியான அதிசயப்பிறவி, மைக்கேல் மதன காமராஜன், மல்லுவேட்டி மைனர், சத்ரியன், பாட்டுக்கு நான் அடிமை, என்னுயிர்த் தோழன், பொண்டாட்டித் தேவை, கிழக்கு வாசல், பணக்காரன், நடிகன், மவுனம் சம்மதம், அரங்கேற்ற வேளை, சிறையில் பூத்த சின்ன மலர் உள்பட எக்கச்சக்கமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

இந்த வருடத்தில் இயக்குநராக அறிமுகமானவர் வசந்த். இவரது முதல் படமான கேளடி கண்மணி திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் இன்றுவரை கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக 'நீ பாதி நான் பாதி கண்ணே' பாடல் பலரது இரவு நேர ரீபிட் மோட் பாடல்களில் தவறாமல் இடம்பிடித்திருக்கும். இப்பாடலை கவிஞர் வாலி எழுத, கே.ஜே.ஜேசுதாஸ், உமா ரமணன் பாடியிருப்பர்.

சீழ்கை ஒலி எழுப்பி, சிறகடித்துப் பறக்கும் பறவைகளின் இறகுகளில் மிருதுவாக முளைத்தும், மனித பேரிரைச்சலற்ற கடலில் அலையலையாய் நீந்திக் கொண்டிருக்கும் ஒரு இளஞ்சோடிகளின் காதல்தான் இப்பாடல். பறவைகளின் சிறகடிக்கும் ஓசையின் முடிவில், எங்கோ தூரத்தில் இருந்து வரும் புல்லாங்கழல் இசையில், அந்த பறவைகளின் றெக்கைகளுக்கும் அதன் உடலுக்கும் இடையேயுள்ள வெப்பத்தின் கதகதப்பை பாடல் கேட்பவர்களுக்கு கடத்தியிருப்பார் இசைஞானி. பின் அங்கிருந்து தொடங்கும் வீணையின் நாதத்திலும், சீறிப்பாய்ந்த அலையாய் எழும் வயலின்களின் இசையாலும் ஆழ்கடலில் மையல் கொள்ளச் செய்திருப்பார். அங்கிருந்து பாடலின் பல்லவி தொடங்கியிருக்கும்.

"நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே இனி
நானில்லையே உயிர் நீயே"

காதல் துளிர்த்து, செழித்து விளையும் பொழுதுகளில் பேசி தீர்க்கப்படும் வார்த்தைகள்தான் இவை. இருப்பினும் நேர்த்தியான முத்துக்களை சேர்த்துக் கோர்த்ததைப் போல் நெய்திருப்பார் காவியக் கவிஞர் வாலி.

முதல் சரணத்துக்கு முன்வரும் தொடக்க இசையில், கிடார், கீபோர்ட், மேண்டலின், வயலின்களென ஒவ்வொன்றாய் அணிசேர, பின்தொடரும் புல்லாங்குழல் துணைகொண்டு பாடல் கேட்பவர்களின் இதயங்களை மென்மையாய் வருடும். அதன்பிறகான சின்ன இடைவெளிக்குள் அத்தனை அழகாய் வீணையை நாணம் கொள்ளச் செய்து, பாடல் கேட்பவர்களை உச்சிக்கொட்ட வைத்து சொக்கிப் போக செய்திருப்பார் ஞானதேவன். அங்கிருந்து பாடலின் முதல் சரணம் தொடங்கியிருக்கும்.

"வானப்பறவை வாழ நினைத்தால்
வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
கானப்பறவை பாட நினைத்தால்
கையில் விழுந்த பருவப்பாடல்
மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த
பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே
மெல்ல சிரிக்கும் உன் முத்துநகை
ரத்தினத்தை அள்ளித்தெளிக்கும் முன்னாலே
மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது"

காதல் வயப்படும் பொழுதுகளில் எல்லாம் இந்த உலகமே யாருமற்ற தனிமைகளாக மாறிவிடக்கூடாதா? என்றெண்ணும் காதலர்களுக்கு அவர்களின் காதல் படரத் தொடங்கிய காலம் எப்போதும் பசுமையான நினைவுகளால் நிரம்பியவை உணர்த்தும் வகையில் பாடலின் முதல் சரணம் அமைந்திருக்கும்.

இரண்டாவது சரணத்துக்கு முன்வரும் தொடக்க இசையில்,டைமிங்கிற்குள் இசைக்கப்பட்டிருக்கும் கம்பிக்கருவிகள் ஏதோ ஒரு அதிசயத்தை நிகழ்த்த தயார்படுத்திக் கொண்டிருக்க, ஆராவாரமின்றி வரும் அந்த புல்லாங்குழலின் மெல்லிசை பாடல் கேட்பவர்களின் மூச்சுக்குழல் வழிசென்று மூச்சுக்கிளை குழாய்கள் மூலம் நுரையீரலின் நுண்காற்றுப்பைகளை நிரப்பியிருக்கும். அங்கிருந்து பாடலின் இரண்டாவது சரணம் தொடங்கியிருக்கும்.

"இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
சொர்க்கம் எதற்கு என் பொன்னுலகம்
பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா
இந்த மனம்தான் என் மன்னவனும்
வந்து உலவும் நந்தவனம் தான் அன்பே வா
சுமையானது ஒரு சுகமானது
சுவை நீ தான்"

கவிஞர் வாலியின் இந்த வரிகள், மனித மனங்களை அகவயப்படுத்திக் கொள்வதில் காதலுக்கு நிகர் ஏதுமில்லை. ஈர்ப்பு, இணக்கம் என நீளும் பல்வேறு படிநிலைகளைக் கொண்ட காதல் பயணத்தில் ஒருவரையொருவர் உடைமையாக உணரத் தொடங்கும் தருணங்கள் அழகான ஆபத்து நிறைந்தவை என்பதை உணர்த்தியிருக்கும்.

இப்படி இந்தப் பாடல் முழுவதையும் கேட்கும் பொழுதெல்லாம் கொண்டாட மகிழ ஏராளமான விசயங்கள் நிறைந்திருக்கும். குறிப்பாக இணைப்பிரியாத காதலை உணர்த்தும் பாடல் என்பதை பாடல் கேட்பவர்களுக்கு உணர்த்தும் வகையில், இசைஞானி பாடலில் பெரும்பாலான இடங்களை இசையால் நிரப்பியிருப்பார். அதுவும் பல்லவியில்

நீ பாதி நான் பாதி கண்ணே,
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே,
நீயில்லையே,
இனிநானில்லையே,
உயிர் நீயே... - இவை ஒவ்வொரு வரியும் முடிந்து தொடங்கும் இடங்களில் எல்லாம் மேஸ்ட்ரோவின் மியூசிக்கல் மேஜிக்கை கண்டு வியக்க முடியும்.அதுவும் அந்த உயிர் நீயே முடிந்து நீபாதி நான்பாதி வரி தொடங்கும் முன் வரும் தபேலாவின் தீர்மானத்தைக் கேட்கும் போதெல்லாம் பாடல் கேட்பவர்களின் மனதெல்லாம் ஒன்றை உரக்கச் சொல்லும் 'அதனால்தான் அவர் இசைஞானி' என்பதுதான் அது. ராஜாவின் தேவகானம் பாயும்...

நீ பாதி நான் பாதி கண்ணே பாடல் இணைப்பு இங்கே

முந்தைய அத்தியாயம் : இளையராஜாவுடன் இசையிரவு 26 | ‘மல்லிகையே மல்லிகையே தூதாக போ...’ - கட்டிப்போடும் தபேலாவின் தாளநடை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE